நன்றி குங்குமம் ஆன்மிகம்
வேலூர்பாக்கம்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா ஒடுகத்தூரை அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்தர காவேரி ஆற்றங்கரையில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இந்த சிவாலயம். முன்பு சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வந்த கோயில் பின்னர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிதிலமடைந்தது. வழிபாடுகள் நின்று சுமார் 300 வருடங்கள் கடந்த நிலையில் பக்தர் ஒருவர் கனவில் ஈசன் தோன்றி தான் அங்குள்ள லிங்கத்தில் குடிகொண்டுள்ளதாகவும், அங்கு தனக்கு மீண்டும் ஆலயமெழுப்பவும் உத்தரவிட்டார்.
அதன்படி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஈசனுக்கு ஆலயத் திருப்பணியை ஆரம்பித்திருக்கிறார்கள். நாம் ஒரு செங்கல் தந்தால்கூட அந்த செங்கல் உள்ளவரை நம் ஆத்மா கைலாயத்தில் வாசல் செய்யும் என புராணங்கள் கூறுகின்றன. கும்பாபிஷேகத்தை நடத்துபவரை விட அதற்கு உதவி செய்பவர்களுக்கே புண்ணியம் அதிகம். பக்தகோடிகள் ஈசனின் ஆலயத்திற்கு தங்களால் முடிந்த பொருளுதவி செய்யலாம். ஊர் கூடி தேர் இழுப்பது என்று பெரியோர் கூறுவார்கள்.
காயம்பட்ட நந்தி தேவர்
சீர்காழிக்கு அருகில் உள்ள திருவெண்காடு திருத்தலத்து இறைவன் திருவெண்காட்டீசர். இங்கு தன் உடலின் பல பகுதிகளில் காயம்பட்ட நந்திதேவரைக் காணலாம். மருத்துவன் என்ற அசுரன் பிரம்மனிடம் வரம் பெற்று, தேவர்களுக்குத் தொல்லை தந்ததால் அவர்கள் திருவெண்காட்டில் மறைந்து வாழ்ந்தனர். இங்கும் வந்து மருத்துவன் துன்புறுத்தவே, தேவர்கள் சிவனிடம் முறையிட, சிவன் நந்தி தேவரை அனுப்பி வைத்தார். போரில் நந்தி தேவரை அசுரன் சூலாயுதத்தால் தாக்க. நந்தி தேவரின் உடம்பில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. இறுதியில் அசுரன் வீழ்ந்தான். இப்படி காயம்பட்ட நிலையிலேயே நந்திதேவர், திருவெண்காட்டீசர் சந்நதியில் தரிசனம் தருகிறார்.
மணி காணிக்கை
மதுரையிலிருந்து அழகர் கோயில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. ‘அரிஹரி அம்மன்’ திருக்கோயில். இந்த அம்மனுக்கு நேர்த்திக் கடனாக வருபவை மணிகள். பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவு பெற்றால் நேர்த்திக்கடனாக மணியை வாங்கி கட்டி விட்டு செல்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடனே கொத்துக் கொத்தாக மணிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
பத்ம பீடத்தில் நவகிரகங்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டியத்தளி என்கிற கிராமம். இங்குள்ள நவகிரகங்கள் வித்தியாசமானவை. இவை பத்ம பீடத்தில் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது மந்திரம் செதுக்கப்பட்டுள்ளது. மேலும், சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடது புறம் கேது பகவானும் வீற்றிருக்கிறார்கள். மற்ற கோயில்களில் சனி பகவானின் இடதுபுறம் கேது பகவானும், வலதுபுறம் கேதுபகவானும் அமைக்கப்பட்டு இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராகு, கேது, சனி தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவை நிவர்த்தியாகும் என்கிறார்கள்.
திசை மாறியுள்ள அம்மன் சிலை
சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் அருகில் உள்ளது கொல்லங்குடி என்னும் கிராமம். இங்கு வெட்டுடையார் காளி அம்மன் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குவதே அம்மன் சிலை இருக்கும் திசைதான். பொதுவாக, கோயில்களில் அம்மன் மற்றும் சாமி சிலைகள் கிழக்கு நோக்கி இருக்கும். ஆனால், இங்கு மட்டும் அய்யனாரின் சிலை கிழக்கு நோக்கியும், காளியம்மனின் சிலை மேற்கு நோக்கியும் காணப்படுகிறது. இந்த அமைப்பு வேறு எங்கும் காண முடியாததாகும்.
திசைகளுக்கேற்ப தரிசனம்
திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று என்று போற்றப்படுகிறது. இம்மலையை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பார்த்தால் கைலாயம் போன்றும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பார்த்தால் பெரும்பாறை போன்றும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப்பார்த்தால் பெரிய சிவலிங்கம் போன்றும் காட்சி தரும் அதிசயத்தைத் தரிசிக்கலாம். இத்தலத்தில் முருகனின் வாகனமாக ஐராவதம் யானை அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.
தொகுப்பு: அருள் ஜோதி