கூடுவாஞ்சேரி: ஆதனூர் ஊராட்சியில் நீட் விலக்கு கோரி மாபெரும் கையெழுத்து இயக்க முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட திமுக சேர்மன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள இளைஞரணி மற்றும் மாணவரணி திமுக சார்பில் நீட்டை ஒழிப்போம்! மாணவர்களை காப்போம்! என்ற முழக்கத்துடன் நீட் தேர்விற்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்க முகாம் ஆதனூர் ஊராட்சியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் அமுதன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட திமுக ஊராட்சிக்குழு தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளருமான படப்பை ஆ.மனோகரன் கலந்துகொண்டு கையெழுத்து இயக்க முகாமினை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் தினேஷ்கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கையெழுத்து இயக்க முகாமில் 3000 பேர் நீட் விலக்கு கோரி கையெழுத்திட்டனர்.