Tuesday, May 14, 2024
Home » செவியை நிறைத்து இதயத்தில் அமரும் நாமம்!

செவியை நிறைத்து இதயத்தில் அமரும் நாமம்!

by Kalaivani Saravanan

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

தாடங்க யுகலீபூத தபனோடுப மண்டலா

வசின்யாதி வாக் தேவதைகள் சென்ற நாமங்களில் நாசியை வர்ணித்துவிட்டு, அதிலுள்ள ஆபரணங்களை வர்ணித்தார்கள். பிறகு, செவியை ஒட்டி இருக்கக்கூடிய கூந்தலுக்கும் செவிக்கும் இடையே உள்ள புஷ்பத்தைச் சொல்லி புஷ்ப மஞ்சரியால் அழகுபடுத்தப்பட்ட காது என்று வர்ணித்தார்கள்.
இப்போது அந்த காதில் அணிந்திருக்கக் கூடிய ஆபரணத்தை வர்ணிக்கின்றார்கள். மூக்கில் அணியக்கூடிய ஆபரணம் நாஸாபரணம். காதில் அணியக்கூடிய ஆபரணத்திற்கு தாடங்கம் என்று பெயர்.

இந்த தாடங்கம் என்கிற வார்த்தையானது, சமஸ்கிருதத்தில் தாள விருட்சம் என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. தாள விருட்சம் என்பது பனை மரத்தைக் குறிப்பது. பெண்கள் அணியக்கூடிய தோடு, தாடங்கம் ஆரம்ப காலத்தில் பனை ஓலையில்தான் செய்து அணிந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அதன் தொடர்ச்சியைத்தான் நாம் காதோலை கருகமணி என்று சொல்கிறோம்.

அம்பிகை வழிபாட்டில் அதுவும் குலதெய்வ வழிபாட்டில் காதோலை கருகமணிக்கு முதல் இடம் உண்டு. சிறிய கிராமக் கோயில் தேவதைகள் முதல் பெரிய அம்பாள் கோயில் வரை காதோலை கருகமணி வைத்து வழிபடுவது என்பது அத்தனை பிரசித்தமானது. பிறகு, இதில் தங்கத்தைக் கொண்டு செய்து தாடங்கமாக மாற்றினார்கள். இந்த தாடங்கத்தைத்தான் அம்பிகை அணிந்திருக்கிறாள்.

இப்போது இரண்டு காதுகளிலும் இரண்டு தாடங்கம் இருக்கின்றது. ஏதோ சாதாரணமான ஆபரணங்கள், எல்லோரும் அணியக்கூடிய ஓலை அல்லது தங்கத்தோடா என்று கேட்டால் வசின்யாதி வாக் தேவதைகள் இதை தாடங்க யுகலீபூத தபனோடுப மண்டலா என்கிறார்கள். இரண்டு தாடங்கங்களில் ஒரு தாடங்கம் சூரிய மண்டலம், இன்னொரு தாடங்கம் சந்திர மண்டலம்.

இந்த சூரிய மண்டலத்தையும் சந்திர மண்டலத்தையும் தன்னுடைய இரண்டு காதுகளிலும் ஆபரணமாக அணிந்திருக்கிறாள். தாடங்க யுகலீபூத – யுகலீ என்றால் இரட்டை. தாடங்க யுகலீ = இரண்டு ஜோடி. அந்த தாடங்க யுகலீ எது என்று கேட்டால் தபனோடுப மண்டலா. தபன உடுப மண்டலா… தபன மண்டலம், உடுப மண்டலம். தபன மண்டலம் சூரிய மண்டலம். உடுப மண்டலம் சந்திர மண்டலம். இந்த சூரிய மண்டலத்தையும் சந்திர மண்டலத்தையுமே அம்பிகை தன் காது களில் தாடங்கமாக அணிந்திருக்கிறாள் எனும்போது அந்த மகாசக்தியானது எப்பேற்பட்டது.

பிரபஞ்ச ரூபத்தையே இந்த நாமம் காட்டுகின்றது. விஸ்வரூபத்தையே காட்டுகின்றது. இதற்கு முன்னர் நாம் பார்த்த நாமங்கள் அனைத்துமே உவமையைச் சொல்லிச் சொல்லி விளங்க வைத்தார்கள். கூந்தல், நெற்றி, புருவம், மூக்கு, மூக்குத்தி, காது என்று சொல்லிச் செல்லும்போது சிலருக்கு அம்பிகையின் உருவம் கூட நாம் பார்க்கும் பௌதீகம்தான்போல… அதைத்தான் வசின்யாதி வாக் தேவதைகள் நமக்கு புரியவைக்கிறார்கள் போல… அதுவும் நம்மை பார்க்கின்ற மற்ற உருவங்கள் மாதிரி… சரீரம் மாதிரிபோல என்று நாம் நினைப்பதற்கு முன்னால், சட்டென்று இந்த நாமத்தைச் சொல்லி அது பௌதீக சரீரம் அல்ல. அது விராட் சரீரம் என்று காண்பிப்பதுதான் இந்த நாமம்.

நீங்கள் பார்க்கும் சூரிய, சந்திர மண்டலங்கள் அனைத்தும் அவள் தாங்கிக் கொண்டிருப்பவையே என்கிறது இந்த நாமம். உனக்காக நான் இறங்கி வந்து இந்த உபமானமெல்லாம் சொன்னேன். அம்பிகையினுடைய தாடங்கமே சூரிய சந்திர மண்டலத்திற்குச் சமமெனில், அவளுடைய உருவத்தை யோசித்துக் கூட பார்க்க முடியாது. ஏன் இப்படி உருவதோடு பொருத்தி வர்ணிக்க வேண்டுமெனில், நமக்கு உபாசனை செய்ய வேண்டுமென்பதற்காக வர்ணிக்கிறார்களே தவிர நம்மால் அந்த உருவத்தை, முயற்சியினால் தியானிக்க முடியுமா எனில் முடியாது.

உபாசிக்க சுலபமாக இருக்க வேண்டுமென்பதற்காக அவளே அவளை வசின்யாதி வாக்தேவதைகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிறாள். இல்லையெனில், சூரிய சந்திர மண்டலத்தை தாடங்கமாக வைத்திருக்கும் அம்பிகையை எப்படி தியானிக்க முடியும். சரி, இந்த நாமத்தினுடைய தத்துவார்த்தத்தை பார்ப்போமா… இதற்கு முந்தைய நாமமான கதம்ப மஞ்சரீ க்லுப்த கர்ண பூர மனோஹரா… எனும் நாமம் ஸ்ரவணம், கேட்டல், listening என்று பார்த்தோம். இந்த தாடங்கத்தை சொல்லக் கூடிய நாமாவானது அந்த ஸ்ரவணத்திற்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய மனனம்.

ஏன் மனனமெனில், கர்ண பூரம்… அவனுடைய செவியானது பூரித்துப் போகின்ற அளவிற்கு சிரவணம் செய்ததனால் ஏற்பட்ட விளைவு என்னவெனில் அந்த சிரவணம் செய்த விஷயம் அப்படியே இருதயத்திற்குள் சென்று நிற்கின்றது. நிற்கும்போது இந்த இருதயத்திற்குள் இருக்கும் அதே வஸ்துதான் பிரபஞ்சமாக விரிந்திருக்கின்றது என்று தெரிந்ததுனால் சூரிய, சந்திர மண்டலமே அந்த வஸ்துவிற்கு தாடங்கமாகி விட்டது. இதுதான் மனனத்தினுடைய வெளிப்பாடு. எந்த விஷயத்தை தீவிரமாக கேட்கிறோமோ அதுவே உள்ளுக்குள் இருப்பதையும் காட்டுவிக்கும்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். குருவின் வாக்கியமோ அல்லது சஹஸ்ரநாமமோ செவியை நிறைக்க நிறைக்க பூரித்துப்போகும். அப்படி பூரித்துப் போக வேண்டுமென்று திட்டமிடாமல் ஆசையாக கேட்டபடியும் சொல்லியபடியும் இருந்தாலே போதும். அதுவே பூரிக்கச் செய்யும். முதலில் செவி பூரித்து பிறகு இருதயம் பூரிக்கின்றது. பூரித்தல் என்றாலே நிறைதல் என்று பொருள்.

உள்ளே சென்று அது நிறையும்போது உள்ள இருக்கக் கூடிய அதுதான் வெளியேயும் இருக்கின்றது. உள்ளும் வெளியும் அதுதான் நிறைந்திருக்கின்றது என்கின்ற அந்த மனனமும் அதன் விளைவும் அனுபவமும் அவனுக்குள் விரிகின்றது. சிரவணத்தினால் மனனம் என்கிற அனுபவம் இது. அதாவது குரு உபதேசம் கிடைக்கின்றது. சிரவணம் செய்கின்றான். குரு உபதேசம் எப்போது அவனால் உணரப்படுமெனில் அது உள்ளே சென்று மனனம் ஆகும்போது உணரப்படும். மனனத்திற்குள் போகும்போது உள்ளேயும் வெளியேயும் இருக்கக் கூடிய அந்த ஒரே வஸ்துவினுடைய அந்த விரிவு அந்த விராட் ரூபம் அனுபவமாகின்றது.

இதற்கு முன்பு ஸ்ரவணம் என்பது physical levelல் நடந்திருக்கின்றது. இதற்கு அடுத்து mental levelக்கு போகின்றது. அப்பொழுது இங்கு தபனோடுப மண்டலா… சூரியனும் சந்திரனும்… சந்திரன் என்கிற மனது அந்த மனதை சிந்திக்க வைக்கக் கூடிய சக்தியாக விளங்கக் கூடிய சூரியன். ஆத்மா… ஏனெனில், சந்திரனுக்கு ஒளி கொடுக்கக்கூடியது சூரியன் தானே. அப்போது மனம் என்பது ஆத்மாவினுடைய செயல்படக் கூடிய பாகம். செயல்களை தாண்டி இருக்கக்கூடியது ஆத்மா. செயல்பாட்டோடு இருக்கக் கூடியது மனது.

இந்த இரண்டையும் இணைத்து வைக்கக் கூடியவள் யாரெனில் அம்பிகை. அதனால்தான் ஒரு காதில் சூரியனையும் இன்னொரு காதில் சந்திரனையும் தோடாக போட்டிருக்கிறாள். இந்த இரண்டுமே அவள் மூலமாகத்தான் இணைகின்றது. அவள் இணைக்கவில்லையெனில் இந்த இணைவு ஏற்படாது. ஆத்மா என்கிற சூரியனையும் மனம் என்கிற சந்திரனையும் அம்பாள்தான் இணைக்க முடியும். அவள்தான் தன்தாடங்கமாக வைத்திருக்கிறாள்.

வாசகர்களே! இப்போது சொல்லுங்கள். நாம் நம்மையும் நம் அகங்காரத்தையும் எவ்வளவு பிரமாண்டமாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். மெதுவாக இந்த நாமங்களின் பொருளை ஆழமாக உணர்ந்து கேளுங்கள். பொறுமையாக கேளுங்கள். அதுவே உங்களிடத்தில் மாற்றத்தை கொண்டு வந்து கொடுக்கும்.

(சக்தி சுழலும்)

இந்த நாமத்திற்கான கோயில்

இதற்கான ஆலயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆகும். ஆதிசங்கரர் அகிலாண்டேஸ்வரி உக்கிரமாக இருந்ததால் அன்னையின் செவிகளில் இரண்டு தாடங்கங்கள் அணிவித்தார். அதனால் நேரடியாகவே இந்த நாமத்திற்கான கோயிலாக இதுவே அமைகின்றது. யானை பூஜித்ததால் இது யானைக் காவல்; அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் உபதேசத் தலம்; ஜம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் சம்புவனம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீச்வரம் என்றெல்லாமும் இத்தலம் அழைக்கப்படு கிறது.

காஞ்சிப் பெரியவர் அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கர பகவத்பாதாள் உருவாக்கி பிரதிஷ்டை செய்த சிவ சக்ரம், ஸ்ரீசக்ரம் போன்ற இரண்டு தாடங்கங்களையும் புதுப்பித்து அம்பிகைக்கு அணிவித்து மகிழ்ந்தார். மூன்றாம் பிராகாரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒருங்கிணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பத்தை தரிசிக்கலாம். ஜம்புகேஸ்வரர் சந்நதிக்கு அருகில் நின்ற நிலையில் விஸ்வரூப மகாலட்சுமியையும், இரண்டு தேவியருடன் சந்திரனையும், இரண்டு நந்தி தேவர்களையும் தரிசிக்கலாம்.

வெள்ளை நாவல் பழம் பழுக்கும் வெண் நாவல் மரம் தல விருட்சம். பிரசன்ன விநாயகர் சந்நதி சேர்த்து அகிலாண்டேஸ்வரி சந்நதி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்நதியை தினம் 12 முறை 48 நாட்கள் வலம் வந்தால் இல்லத்தில் செல்வம் செழிக்கும். அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமியாக, உச்சிக் காலத்தில் பார்வதியாக, மாலையில் சரஸ்வதியாகத் திகழ்வதால், அம்பிகைக்கு மூன்று வண்ண உடை அலங்காரங்கள் மூன்று வேளைகளிலும் செய்யப்படுகிறது.

51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது. பௌர்ணமி தோறும் அகிலாண்டேஸ்வரி சந்நதியில் உள்ள மஹாமேருவிற்கு நவாவரண பூஜை நடக்கிறது. உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனை பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே பூஜை செய்வதாக ஐதீகம்.

You may also like

Leave a Comment

14 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi