Wednesday, May 29, 2024
Home » பத்தாவது தேர்வில் தவறினேன்: கல்லூரியில் முதல் மாணவியானேன்

பத்தாவது தேர்வில் தவறினேன்: கல்லூரியில் முதல் மாணவியானேன்

by Porselvi

கல்வியாளர் Dr. கிரேஸி!!!

“கேடில் விழுச் செல்வம் கல்வி
யொருவற்கு மாடல்ல மற்று யவை”

என்பது குறள். கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமே இல்லை என்பதே உண்மை. கடந்த பதினேழு வருடங்களாக கிராமப்புற பகுதிகளில் ஏழை எளிய மாணவ மாணவியருக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் சென்னையில் வசித்து வரும் Dr. கிரேஸி. இவரும் இவரது நண்பர் ராஜசேகரும் சேர்ந்து கேரிங் ஹாட்ஸ் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பினை துவங்கி ஏழை மாணவர்களுக்கு கல்வி குறித்த வழிகாட்டல்களை செய்து வருகிறார்கள். கல்வி குறித்தும் அதற்கான உதவித்தொகைகள் சலுகைகள் குறித்தும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தகவல்களை Dr.கிரேஸி நம்மிடையே பகிர்ந்து கொண்டதிலிருந்து…

பி.எச்.டி வரையிலான உங்களது கல்வி பயணம் குறித்து சொல்லுங்கள்?

திருச்சி அருகேயுள்ள காட்டூர் என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பாவின் திடீர் மறைவு மற்றும் வீட்டின் வறுமை சூழல் காரணமாக ஒன்பதாவது வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டேன். பகுதி நேரமாக வேலை செய்து கொண்டே படித்ததால் பத்தாம் வகுப்பில் பெயில் ஆகிவிட்டேன். ஒரு ஸ்பான்சர் உதவியால் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற்று 11 வது வகுப்பில் சேர்ந்தேன். எப்போதும் பகுதி நேர வேலையை விட இயலாத குடும்ப சூழல், அங்கிருந்த ஆசிரியர்கள் உதவியுடன் தான் 12வது வகுப்பை மிகவும் சிரமப்பட்டு முடித்தேன். கல்லூரியில் சேர என்னிடம் சுத்தமாக பணமில்லை. படிப்பை தொடர இயலாத வீட்டு சூழல். அப்போது தான் எனது ஆசிரியர் திருமதி. லஷ்மி மற்றும் பாதிரியார் இன்னா முத்து அவர்களும் எனக்கு கல்வி உதவித் தொகை குறித்த உதவிகள் பலவற்றை செய்தனர். ஒற்றை பெற்றோருடைய குழந்தைகளுக்கான கல்விச் சலுகை குறித்து அங்கு தான் அறிந்து கொண்டேன். அதன் பிறகு கல்வி உதவித் தொகை பெற்று கல்லூரி படிப்பை தொடர முடிந்தது. படிக்கும் காலத்தில் பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வது, சுய முன்னேற்ற வகுப்புகளில் கலந்து கொள்வது, ஆங்கில மொழியறிவை வளர்த்துக் கொள்வது என என்னை இச்சமூகத்தில் சுயமாக இயங்க ஆயத்தம் செய்து கொண்டேன். நான் கல்லூரியின் முதல் மாணவியாக தேர்வானது என்பது என்னால் வாழ்வில் மறக்க முடியாதது. அதன் பிறகு பி. எட் , எம். எட் என படித்து மனோன்மணியம் சுந்தரனார் யூனிவர்சிட்டியில் முனைவர் (பி. எச். டி) பட்டம் பெற்றது எனது வாழ்வில் மறக்க இயலாத தருணம்.

மாணவ மாணவிகளுக்கு கிடைக்கக் கூடிய கல்வி சலுகைகள் குறித்து…

நிறைய விதமான கல்வி உதவித் தொகைகள் மற்றும் கல்வி சலுகைகள் அரசு திட்டங்களில் உள்ளது. ஆனால் யாருக்குமே அது குறித்த முழுமையான போதுமான விழிப்புணர்வு கிடையாது என்பேன். இதற்காகவே நான் நிறைய புள்ளி விவரங்களை தயாரித்து வைத்திருந்தேன். யாருக்கெல்லாம் கல்வி உதவித்தொகை கிடைக்கும். அதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்து நான் முதலில் அறிந்து கொண்டேன். அதனை மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்துவதன் மூலம் பலரும் பயன்பெற முடிந்தது. நிறைய மாணவர்களின் இடை நிற்றலை தடுத்து கல்வியை மீண்டும் தொடர உதவியது என்பது தான் உண்மை. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கல்விக்கான உதவித்தொகைகள் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று என்பேன்.

யாரெல்லாம் இந்த உதவித்தொகையை பெற இயலும் ?

கல்வி உதவித் தொகையை பொறுத்தமட்டில் ஏராளமான திட்டங்கள் உள்ளது. அதில் மத்திய அரசு கல்வி உதவித் தொகை மற்றும் மாநில அரசு கல்வி உதவித் தொகை இரண்டும் பெறலாம். முதலாம் தலைமுறை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் உண்டு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வியில் 100 சதவீத சலுகைகள் உண்டு. மெரிட் தகுதியில் 7.5 ஸ்கேலில் கல்வி உதவித் தொகை பெற இயலும். தந்தையிழந்த மற்றும் தாயை இழந்த பிள்ளைகளுக்கும் கல்வி உதவித் தொகை கிடைக்கும். அதே போன்று படுத்த படுக்கையாக இருக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற முடியும். இப்படியான திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஐம்பது முதல் நூறு பிள்ளைகளுக்கு மேல் இலவச கல்வியை எங்களால் வாங்கித் தர முடிந்தது ரொம்பவும் நிறைவான விஷயம்.

இதனைத் தவிர மாணவ மாணவியர்களுக்கு வேறென்ன உதவிகள் செய்கிறீர்கள்?

பள்ளியில் பிளஸ் டு படிக்கும் போதே கல்லூரி படிப்பு குறித்த விஷயங்களை சொல்லத் துவங்கி விடுவோம். அரசு கல்லூரியில் படித்தால் கிடைக்கும் பயன்கள், தனியார் கல்லூரியில் படிக்க தேவையானது என்ன? டீம்டு யூனிவர்சிட்டி குறித்த தகவல்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுவோம். மேலும் அந்த அந்த காலகட்டத்தில் பயன் தரக்கூடிய படிப்புகள் எவையெவையென அறிவுறுத்துவோம். ஒரு காலத்தில், கம்யூட்டர் சயின்ஸ், தகவல் சைபர் செக்யூரிட்டி குறித்த படிப்புக்கு மதிப்பு என்றால், அடுத்த வருடம் வணிகவியலுக்கு மதிப்பு, தற்போது செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்புகளுக்கு தான் வாய்ப்புகள் அதிகம்.

எஜுகேஷனல் கன்சல்டன்சி துவங்கியது எப்போது?

நான் பி. எட் மாணவியாக இருந்த போது ஒரு நாள் எனக்கு பள்ளியில் ஸ்காலர்ஷிப் குறித்து வழிகாட்டிய எனது ஆசிரியரை சந்தித்தேன். அவர் நான் உனக்கு வழிகாட்டியது போல நீயும் மற்ற மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய உதவித் தொகை மற்றும் கல்லூரி படிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்தேன். இதை கண்ட அந்த ஆசிரியர்கள் இதை ஏன் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி முறையாக செய்யக்கூடாது என கேட்டார். அப்போது தான் அந்த எண்ணம் தோன்றியது. அப்படி உருவானது தான் க்ரேஸ் கன்சல்டன்சி. அந்த கன்சல்டன்சி மூலம் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே கல்வி குறித்தான நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? என்று மாணவ மாணவிகளுக்கு வழி காட்டினேன். அதற்கு கிடைக்கக்கூடிய கல்வி உதவித்தொகைகள், சலுகைகள், கல்லூரியில் படிப்பதற்கான செலவுகள் குறித்து நிறைய அலசி ஆராய்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டேன்.

உங்கள் கல்வித்துறை சார்ந்த பணிகளில் நெகிழ்வான அனுபவங்களை குறிப்பிடுங்களேன்?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி கல்லூரியில் சேர வழியில்லாமல் விவசாய கூலியாக இருந்தார். இதை அறிந்த நாங்கள் அவளிடம் பேசியபோது விஸ்காம் படிப்பது அவளது லட்சியம் என அறிந்தோம். அதன் பிறகு பிரபல கல்லூரியில் பணம் கட்டி படிக்க வைத்தோம். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் வேலையில் சேர உள்ளார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் படிக்கும் போதே பகுதிநேர வேலையில் சேர்ந்து தனது தங்கையையும் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்க வைக்கிறாள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. அதேபோல் மற்றொரு மாணவி கல்வி உதவித்தொகை மூலம் படித்தவர் இன்று வங்கி பணியில் சேர்ந்து முதல் மாத சம்பளப் பணத்தை என் கைகளில் திணித்து நெகிழ்ச்சியடைய செய்தார். அவளிடமே திரும்பி தந்து உன்னால் முடிந்த வரை ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக்கான உதவியை செய்ய வேண்டும் என சொன்னேன். தற்போது ஐந்து மாணவிகளை அவள் படிக்க வைக்கிறாள் என்பதும் நெகிழ்வான அனுபவம் தான். இவள் மட்டுமல்ல இவளை போல் எங்களால் படித்த பல பிள்ளைகள் இன்று அவர்கள் பல்வேறு குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர் என்பது எவ்வளவு நெகிழ்வான செய்தி.

பெற்ற விருதுகள் கௌரவங்கள்….

இந்த கல்வி சேவைக்கென பல விருதுகள் பெற்றது கூடுதல் மகிழ்ச்சி. சேவைச் சுடர் விருது, பீனிக்ஸ் விருது, பெண் விஜயகாந்த் விருது, சிறந்த சமூக சேவை விருது போன்றவற்றை பெற்றிருக்கிறேன். பாண்டிச்சேரி அரசு சேவைச்சுடர் விருது அளித்தது பெரும் கௌரவம். அதே போன்று தமிழ்நாடு அரசு பெண்கள் ஆணையத்தால் பெரிதும் கௌரவிக்கப்பட்டுள்ளேன். மலேசிய பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதோடு வாழ்நாள் ஃபெல்லோஷிப் வென்றது ஆகப்பெரும் மகிழ்வான அனுபவம்.

கல்வி குறித்து நீங்கள் சொல்ல வருவது?

கல்விக்கு மட்டுமே நம் வாழ்க்கையை தலைகீழாய் மாற்றும் வல்லமைகள் உண்டு. எனவே எப்பாடு பட்டாலும் கல்வியை தொடருங்கள். குறிப்பாக பெண்கள் படித்தால் வீடு மட்டுமல்ல ஒரு நாடே முன்னேறும். வாழ்வில் கல்வியை விட சிறந்த முன்னேற்றம் வேறெதுவும் இல்லை. கல்வி ஒன்றிற்கே அனைத்தையும் மாற்றும் சக்தி உள்ளது. ‘‘பிச்சை புகினும் கற்கை நன்றே” என சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். கல்வி ஒன்றே சமுதாய மாற்றங்களுக்கான பெரும் திறவுகோல் என்கிறார் கல்வியாளர் கிரேஸி.
– தனுஜா ஜெயராமன்

You may also like

Leave a Comment

7 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi