டெல்லி: பல்வேறு துறைகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து, 65 ஆக உயர்த்துவது பற்றி ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. நாட்டின் முக்கிய துறைகளின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளில், பல விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர். துறை சார்ந்த வளர்ச்சிக்காகவும், புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும், இவர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போதைய நடைமுறைகளின் படி, விஞ்ஞானிகளின் ஓய்வு வயது, 60 ஆக உள்ளது. ஆனால் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் 62 வயதில் ஓய்வு பெறுகின்றனர்.
ஓய்வு பெறும் வயதை நெருங்கும் விஞ்ஞானிகளின் சேவையைத் தொடர ஓரிரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கும் வழக்கம் இருந்து வந்தது. இருப்பினும், பெரும்பாலான விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுப் பணிகளை பாதியிலேயே கைவிடும் நிலைக்கு ஆளாவதாக, துறை சார் வல்லுனர்கள் வருத்தம் தெரிவித்தனர். அதனால், விஞ்ஞானிகளின் ஓய்வு வயதை, 65 ஆக உயர்த்த, ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களிள் பணிபுரியும் விஞ்ஞானிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்து கேட்டு 14 சுயநிதி நிறுவனங்களுக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் (நவம்பர் 2023-மார்ச் 2028) ஓய்வுபெறும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை அமைச்சகம் கேட்டறிந்துள்ளது.