Tuesday, May 21, 2024
Home » வைக்கத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது: நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வைக்கத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது: நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Ranjith
Published: Last Updated on

சென்னை: வைக்கத்தில் 1924ம் ஆண்டு நடந்த போராட்டம் என்பது, கேரளத்தின் சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல – தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம். இன்னும் சொன்னால் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம். ‘‘வைக்கம் போராட்டம்தான் மகர் போராட்டத்தை நடத்துவதற்கு எனக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தது’’ என்று அண்ணல் அம்பேத்கர் பிற்காலத்தில் எழுதினார் என்று கேரள மாநிலம் வைக்கத்தில் நேற்று நடந்த, இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கேரளா மாநிலத்தில் சாதியக்கொடுமைகள் முன்பு உச்சத்தில் இருந்தது. உயர் சமூகத்தினர் தவிர மற்றவர்கள் குடை பிடிக்கக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, கிணறு, குளம், சாலை, சந்தை ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

ஆண்கள் யாரும் மீசை, தாடி வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அதற்கு தனி வரி கட்ட வேண்டும் என்ற ெகாடிய நிலை இருந்தது. இந்தநிலையில் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றி உயர் சமூகத்தினர் தவிர மற்றவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டம்தான் வைக்கம் போராட்டம். இந்த போராட்டம் 1924ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி கேரளா தலைவர் டி.கே.மாதவனால் தொடங்கப்பட்டது. போராடிய பலர் சிறைக்கு சென்றதால், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் தலைமை தாங்கி போராடினார். இந்தப் போராட்டம் 1925 நவம்பர் 23ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனால்தான் பெரியர் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார். இந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா வைக்கத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:

வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ேகரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். பினராயி விஜயன் அழைத்து நான் இதுவரை வராமல் இருந்தது இல்லை. தமிழ்நாட்டில் இப்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கிறது. என்றாலும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவுக்கு நிச்சயம் சென்றாக வேண்டும் என்று நான் இங்கே வந்துள்ளேன். 1924ம் ஆண்டு வைக்கத்தில் நடந்த போராட்டம் என்பது, கேரளத்தின் சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல – தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம். இன்னும் சொன்னால் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம். ‘‘வைக்கம் போராட்டம்தான் மகர் போராட்டத்தை நடத்துவதற்கு எனக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தது’’ என்று அண்ணல் அம்பேத்கர் பிற்காலத்தில் எழுதினார்.

வைக்கம் போராட்டத்தின் தூண்டுதலால்தான் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் அண்ணல் காந்தியடிகள் அதிகம் கவனம் செலுத்தினார். கேரளாவில் புரட்சி இயக்கம் என்பது – நாராயணகுரு, டாக்டர் பல்ப்பு பத்மநாபன், குமாரன் ஆசான், அய்யன்காளி, டி.கே.மாதவன் – ஆகிய தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது. தமிழ்நாட்டு புரட்சி இயக்கமானது – ராமலிங்க வள்ளலார், அய்யா வைகுண்டர், அத்திப்பாக்கம் வெங்கடாசலனார், பண்டித அயோத்திதாசர், டி.எம்.நாயர், தந்தை பெரியார் ஆகிய தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த டி.கே.மாதவனும் – தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை பெரியாரும் இணைந்து நடத்திய வெற்றிப் போராட்டம்தான் வைக்கம் போராட்டம்.

ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்கள் வைக்கம் கோயில் தெருவில் நடந்து செல்லத் தடை விதிக்கப்பட்டதை உடைக்க தீண்டாமை ஒழிப்புக் குழு அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர்களால் அமைக்கப்பட்டது. 1924-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் அன்று, தடையை மீறி அந்த தெருவுக்குள் நுழையக்கூடிய சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அந்த நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியாருக்கு கேரளத் தலைவர்கள் கடிதம் எழுதி வரவழைக்கிறார்கள். ‘நீங்கள் வந்து இந்த போராட்டத்திற்கு உயிரூட்ட வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் இருந்தது. உடனடியாக பெரியார் இங்கு வந்துவிட்டார். மன்னருக்கு எதிராகவே போராடினார் பெரியார். கேரளா முழுவதும் பரப்புரை செய்தார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதனாலேயே பெரியாரையும், கோவை அய்யாமுத்துவையும் கூட்டத்தில் பேசுவதற்கு தடை விதித்தார்கள். தடையை மீறிப் பேசியதற்காகக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். விடுதலை செய்யப்பட்ட பிறகும், நேராக ஊருக்குத் திரும்பாமல் வைக்கம் சென்று மீண்டும் போராடினார் பெரியார். மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தந்தை பெரியார் அவர்களுக்கு என்ன சிறப்பு என்றால், இந்தப் போராட்டத்தில் கைதான மற்ற தலைவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டார்கள். ஆனால் தந்தை பெரியாரை மிக மோசமாக நடத்தினார்கள். கையிலும் காலிலும் விலங்கு போட்டு – கழுத்தில் மரப்பலகையை மாட்டி – அடைத்து வைத்திருந்தார்கள். இந்தப் போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் ‘பந்தனத்தில் நின்னு’ என்ற தலைப்பில் மலையாளத்தில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

பெரியார் மட்டுமல்ல – தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தியாகிகள் இங்கு வந்து போராடினார்கள். காங்கிரஸ் தலைவர் என்கிற அடிப்படையில் காந்தியடிகளை ராணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் என்ற அடிப்படையில் பெரியாருடன் பேசி முடிவெடுத்துவிட்டுத்தான் காந்தி ராணியுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றார்.
‘கோயிலுக்குள் நுழைவோம் – என்று ஈ.வெ.ராமசாமி சொல்வதை நிறுத்தச் சொல்லுங்கள். தெருவைத் திறந்து விடுகிறோம்’ என்று ராணி சொல்ல – அதனைப் பெரியாரிடம் வந்து காந்தியடிகள் சொல்ல – ‘நமது இறுதி இலக்கு கோயில் நுழைவுதான் என்றாலும் – இப்போதைக்கு முதல் கட்ட வெற்றியை பெறுவோம்’ என்று பெரியார் சொன்னார். அதனடிப்படையில் வைக்கம் கோயில் சாலைகள் அனைவருக்கும் திறந்து விடப்பட்டது.

இதன் வெற்றி விழா வைக்கத்தில் நடந்தபோதும் மறக்காமல் பெரியாரை அழைத்துப் பாராட்டினார்கள் கேரளத்து தலைவர்கள். அந்த வகையில் 100 ஆண்டுகள் கழித்தும் தமிழ்நாட்டை மறக்காமல் எங்களை அழைத்துள்ளார் கேரள மாநிலத்தினுடைய முதல்வர் பினராயி விஜயன். சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், மானுடப்பற்று, ரத்த பேதமில்லை, பால் பேதமில்லை, சுய முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சமூகநீதி, மதசார்பற்ற அரசியல், அறிவியல் மனப்பான்மை. இவைதான் பெரியாரியத்தின் அடிப்படை. இவை உலகம் முழுமைக்குமான கருத்தியல்கள்தான்.

இந்த கருத்தியல்களை வென்றெடுக்க நாம் அனைவரும் உழைத்தாக வேண்டும். மீண்டும் சனாதன – வர்ணாசிரம – சாதியவாத – மதவாத சக்திகள் கோலோச்ச நினைக்கும் காலத்தில் நமக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னால் எத்தகைய ஒற்றுமையுடன் போராடி வென்றோமோ அதேபோன்ற ஒற்றுமையுடன் செயல்படுவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

  • மலையாளத்தில் பேசி அசத்திய மு.க.ஸ்டாலின்
    வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘வைக்கம் சத்யாகிரஹத்தின்டே நூறாம் வார்ஷிகம் கம்பீரமாயி நடத்தான் ஏற்பாடு செய்திட்டுள்ள பஹுமானப்பெட்ட கேரள முக்கிய மந்திரியும் என்டே ப்ரியப்பெட்ட சகாவுமாய திரு.பினராயி விஜயன் அவர்களே..’ என்று தொடங்கி சில நிமிடங்கள் மலையாளத்திலேயே பேசி அசத்தினார். இந்த பேச்சு அனைவரையும் கவர்ந்தது. பேச்சை நிறைவு செய்யும்போது, ‘வைக்கம் சமரநாயகர் வாழட்டே.. சோஷியல் ஜஸ்டிஸ் போராட்டங்கள் ஜெயிக்கட்டே..’ என்று மலையாளத்தில் கூறியதும் பெரும் கரவொலியை பெற்றது.

You may also like

Leave a Comment

3 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi