லக்னோ: சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார். அமைச்சர் உதயநிதி பேச்சால் எழுந்த சனாதன சர்ச்சை விவகாரத்தில் பிரதமர் மோடி முதன்முறையாக பேசியுள்ளார். மத்திய பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்த பின் பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், சனாதன தர்மத்தை ஒழிக்க இந்தியா கூட்டணி தீர்மானித்துள்ளது. சனாதன தர்மத்தை காக்க வேண்டும். சனாதன தர்மம்தான் இந்தியாவை ஒற்றுமையுடன் வைத்திருக்கிறது.
சனாதனம் மீதான தாக்குதலுக்கு எதிராக ஒவ்வொரு சனாதனியும் போராட வேண்டும் என கூறினார். மேலும், இந்தியா கூட்டணி இந்து மதத்துக்கு எதிரானது என்று பிரதமர் மோடி பேசினார். சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம் என விமர்சனம் செய்தார். நாடு முழுவதும் உள்ள அனைத்து சனாதனவாதிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விவேகானந்தர், லோகமான்ய திலக்கிற்கு உத்வேகம் அளித்த சனாதனத்தை இந்தியா கூட்டணி அழிக்க நினைக்கிறது என்றார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தலைக்கனம் கொண்டவர்கள்.
இந்தியாவின் கலாச்சாரத்தை தாக்க ஒரு மறைமுக செயல்திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளன. சனாதனம் மீதான தாக்குதல் இந்திய கலாச்சாரம் மீதான தாக்குதல் எனவும் பிரதமர் மோடி விமர்சித்தார். யார் எவ்வளவு தாக்கினாலும் சனாதனம் உயர்ந்துகொண்டே இருக்கும் என்றார். ஒன்றிய அமைச்சர்கள், மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், சனாதன விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசிய நிலையில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.