Friday, May 3, 2024
Home » சேலம் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கு யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனை உறுதி: வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்க வேண்டும்; உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சேலம் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கு யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனை உறுதி: வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்க வேண்டும்; உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

by Karthik Yash

* வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்ற விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதான்.
* விடுதலையை எதிர்த்து கோகுல்ராஜ் தாய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
* 2 பேரின் ஆயுள் தண்டனை 5 ஆண்டுகளாக குறைப்பு

சென்னை: சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கலைச் சேர்ந்த வேறு சமூக பெண்ணுடன் பழகியுள்ளார். இருவரும் 2015 ஜூன் 23ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்துள்ளனர்.

அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. மறுநாள் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கில் தனக்கு தொடர்புள்ளதாக தெரிவித்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது டிரைவர், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர். அவ்வப்போது ஆடியோவும் வெளியிட்டார் யுவராஜ். இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியாவும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்குக் காரணம் யுவராஜ்தான் என்று சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது இதையடுத்து, கோகுல்ராஜை ஆணவக் கொலை செய்ததாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள் வசந்தம், செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையின்போது 2 பேர் இறந்தனர். குற்றம்சாட்டப்பட்ட 15 பேர் மீதான வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 2022 மார்ச் 8ல் தீர்ப்பளித்தது.

முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், குமார் என்ற சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட்டபோது, இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது அவர் பிறழ் சாட்சி அளித்தார். இதையடுத்து, சுவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.

அப்போது, யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகளை, தவறுகளை சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் வாதிட்டனர். அரசு தரப்பில் இந்த வழக்கிற்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் ப.பா.மோகன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிகுமார் ஆகியோர் ஆஜராகி, மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பு சாட்சிகளை சாட்சிகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவும் வாதிட்டனர். இதனிடையே கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்குகளில் நேற்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கோகுல்ராஜ், சுவாதியுடன் திருச்செங்கோடு கோவிலுக்கு சென்றது, அங்கிருந்து அவர் மாயமானது, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது போன்ற குற்றச் சங்கிலி தொடரை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனர். இதை பரிசீலித்து தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. அதில் தலையிட முடியாது. எனவே, யுவராஜ் உள்ளிட்ட எட்டு பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

இவர்கள் எட்டு பேருக்கும் எந்த தண்டனைக் குறைப்பும் வழங்காமல், வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்க வேண்டும். பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. மதுரை நீதிமன்றத்தால் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டது உறுதி செய்யப்படுகிறது. யுவராஜ் உள்பட 10 பேரின் மேல் முறையீட்டு வழக்குகளையும், ஐந்து பேர் விடுதலைக்கு எதிராக கோகுல்ராஜின் தாய் சித்ராவும், காவல் துறையும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

தலைமறைவாக இருந்த யுவராஜ், ஊடகங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார். இதுபோன்ற செய்கைகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். கருத்து சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிப்பில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற யுவராஜ் தரப்பு வாதங்களை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்தனர். மேலும், எதிர்காலங்களில் குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் நீதிபதிகள் தீர்ப்பில் வகுத்துள்ளனர்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
* கோகுல்ராஜ் கொலை வழக்கை பொறுத்தவரை ஜாதி என்ற பேயின் தாக்கத்தில் நடந்த நிகழ்வு இது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளில் ஜாதிய கட்ட பஞ்சாயத்துகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூறியுள்ளது. வரும்காலத்தில் இதுபோன்ற வழக்குகளில் குற்றவியல் விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
* இந்த வழக்கில் யுவராஜ் ஊடகத்தை தொடர்ந்து பயன்படுத்தி, தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், ஊடகத்தின் மூலமாக நிரூபிக்க முயற்சிப்பதாகவும் கூறி தனக்கு சாதகமான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார். இது ஒரு ஆணவக்கொலை என்ற வகையில் ஊடக விசாரணை நடத்தியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை என்ற போதும் இதுபோன்ற ஊடகத்தின் தாக்கத்திற்கு ஆட்படாமல் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டும்.
* சாட்சிய பதிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கவனத்தில் கொண்டு, இந்திய சாட்சிய சட்டத்தில் மின்னணு சான்றுகள் பற்றிய தனி அத்தியாயம் கொண்டு வர வேண்டும். கனடா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு சாட்சியம் தொடர்பாக தனி சட்டம் உள்ளது.
* அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வழங்கக்கூடிய தற்போதைய தகவல்களை தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. தேவையில்லாத விளம்பரம், பரபரப்புக்காக நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து வெளியாகும் தவறான செய்திகள், நீதிபரிபாலனத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்வதில்லை.
* பொதுவாக குற்ற வழக்குகளை பொறுத்தவரை கண்காணிப்பு கேமரா பதிவுகள் குற்றம்சாட்டப்பட்டவரின் இருப்பையும், இடத்தையும் உறுதி செய்வதற்கு உதவுகின்றன. இந்த ஆதாரங்களை உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் வலுவான ஆதாரங்கள் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அமைந்துவிடும். அதனால் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறும்போது சம்பவ இடத்தை அடையாளம் காணும்வகையில் வீடியோ கேமராக்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* கண்காணிப்பு கேமராக்களில் தடயவியல் ஆய்விற்கு பிறகு டிவிடி அல்லது சிடி தளத்தில் பதிவிறக்கம் செய்து அதற்குரிய சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை கண்காணிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

You may also like

Leave a Comment

8 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi