திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (17ம் தேதி) திறக்கப்படுகிறது. 22ம் தேதி வரை நடை திறந்திருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகள் 18ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 18ம் தேதி முதல் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, கலசாபிஷேகம், களபாபிஷேகம் மற்றும் உதயாஸ்தமய பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 22ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக நவம்பர் 10ம் தேதி கோயில் நடை திறக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய முடியும். கோயில் நடை திறந்திருக்கும் நாட்களில் நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.