சென்னை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.லெனின் பிரசாத் தலைமை வகித்தார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் சர்வன் ராவ், வைசாக், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோஸ்வா ஜெரால்ட், மாநில பொதுச் செயலாளர் அருண் பாஸ்கர், இளைஞரணி மாநில செயலாளர் தரமணி ஆர்.விமல், மாநில இணைச் செயலாளர் தரமணி ஆ.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு நிருபர்களிடம் கூறியதாவது:
ஒன்றிய பாஜ அரசு, பெண்கள் பாதுகாப்பில் வாய்ஜாலம் மட்டுமே காட்டுகிறது. ஆனால் பெண்கள் பாதுகாப்பில் எந்தவித கவனமும் செலுத்துவதில்லை. மக்களுக்கு சேவை செய்வதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்து விட்டார். பாஜ தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை என்று சொல்லிவிட்டு சொகுசு வாகனத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த பயணத்தின் போது பாஜவின் சாதனைகள் குறித்து அவர் வாய் திறக்கவில்லை. ஏனென்றால், எந்த சாதனையையும் அவர்கள் செய்யவில்லை. அண்ணாமலைக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த சாதனை திட்டங்கள் குறித்து பட்டியலிடுவதற்கு நாங்கள் தயார். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த சாதனைகளை பட்டியலிட பாஜ தலைவர் அண்ணாமலை தயாரா? இவ்வாறு அவர் கூறினார்.
*கூட்டணி கட்சி இளைஞரணிகளை ஒருங்கிணைத்து போராட்டம்
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் கூறுகையில், ‘‘நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் கூட்டணி கட்சிகளின் இளைஞரணிகளை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். செப்டம்பர் 2வது வாரத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ் கலந்துகொள்ளும் நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. பாஜ என்ன சொன்னாலும் அதற்கு தலையாட்டும் பொம்மையாகவே எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் யார் பாஜ தலைவர் என்ற போட்டி தமிழ்நாடு கவர்னருக்கும், அண்ணாமலைக்கும் இடையே நடந்து வருகிறது. தமிழ்நாடு கவர்னர் என்பவர் தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையில் உள்ள தபால்காரர் என்பதை மறந்துவிடக் கூடாது’’ என்றார்.