Tuesday, April 23, 2024
Home » Ready to lay my life

Ready to lay my life

by Nithya
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி

ஒரு SPG அதிகாரியின் கதை…

“தோட்டா பாய்ந்ததும் முதலில் சென்று உடம்பில் ஏந்துபவனே SPG’’ என ‘காப்பான்’ படத்தில் ஒரு டயலாக் வரும். அத்தகைய பணியில் 7 பிரதமர்களை கடந்து வந்திருக்கிறார் அபராஜிதா ராமதியானி.

SPG அதிகாரியாக 7 பிரதமர்களுக்கு பாதுகாப்பு பணி… சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு படையில் முதல் பெண் டிஎஸ்பி…ஏசியா பெண்கள் மகிளா போர்ஸில் முதல் பெண் கமாண்டர்…

என அபராஜிதா வகித்த பதவிகள் அத்தனையும் சவால்கள் நிறைந்தது. இந்திய பிரதமர் எங்கு சென்றாலும் அவர் பக்கத்தில் கோட் சூட், கருப்பு நிறக் கூலர் (tactical eyewear) மற்றும் கையடக்க பிஸ்டலோடு சிலர் பிரதமரை ஒட்டியே வளைய வருவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். இவர்கள்தான் SPG (Special Production Group) அதிகாரிகள்.உலகத்தில் அதிகம் பாதுகாக்கப்படுகிற நபரான இந்திய பிரதமருக்கு உள்நாட்டிலும், நாட்டுக்கு வெளியிலும் 24 மணிநேரமும், வருடத்தின் 365 நாட்களும் உச்சகட்ட பாதுகாப்பு கொடுப்பது இந்த அதிகாரிகளே. பிரதமரை இவர்கள் பாதுகாப்பது ஜஸ்ட் லைக் தட் விஷயம் கிடையாது. US Secret Serviceக்கு இணையான கடுமையான பயிற்சி இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

SPG அலுவலர்களின் குறிக்கோள் ‘‘வீரம், அர்ப்பணிப்பு, பாதுகாப்பு”. பிரதமரின் பாதுகாப்பு வளையத்திற்குள் அசம்பாவிதங்கள் நடந்தால், SPG அதிகாரிகளும், கமாண்டோக்களும் தங்கள் உடம்பை கவசமாக்கி, தோட்டாவை தங்கள் உடம்பில் ஏந்தி பிரதமரை பாதுகாக்க வேண்டும். சுருக்கமாக உயிரைக் கொடுத்து வேலை செய்யும் பணி. I am ready to lay my life என்பதே
இவர்களின் மந்திரம். ‘பிரதமருக்காக உயிரைக் கொடுக்கிறேன்’ என்கிற ஆவணத்தில் கையெழுத்திட்டபோது ‘‘உனக்கு குழந்தை, கணவர், குடும்பம் நினைவு வரவில்லையா?’’ என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ‘‘அந்த நினைப்பில் நான் தயங்கினால் தகுதியில்லை எனத் திருப்பி அனுப்பப்படுவேன்’’ என்றவர், தன்னுடைய காக்கிச் சீருடை கனவினை மெல்ல அசை போட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

‘‘நான் பிறந்து, வளர்ந்தது சென்னை தி.நகரில். சின்ன வயதில் இருந்தே காக்கிச் சீருடை மீது கனவு இருந்தது. கூர்காவை காக்கியில் பார்த்தாலும் சிலிர்த்துப் போவேன். பறக்கும் படை அதிகாரியான என் அப்பா எம்.கே. சீனிவாசனைப் பார்த்தே காவல்துறை அதிகாரி கனவு வந்தது. அப்பா மிலிட்டரி இஞ்சினியரும் கூட. அப்பா என்னை ஆண் மகனைப் போலவே வளர்த்தார். நடனம் கற்க விடாமல் விளையாட்டில் பங்கேற்க அனுமதித்தார். நான் ஒரு அத்லெட். கூடவே நேஷனல் பிளேயரும். விளையாட்டில் மெடல் மற்றும் சான்றிதழ் பெற்ற எனது புகைப்படங்கள் நாளிதழ்களில் அடிக்கடி வரும். கூடவே காதலும் வந்தது. அப்போது எனக்கு 16 வயதுதான். என் குறிக்கோளுக்கு எதிராய் நான் காதலில் விழுந்ததால், அப்பாவிற்கு என் மீது வருத்தம் இருந்தது. காதலித்தவருக்கே 18 வயதில் என்னை மணம் முடித்து வைத்தார்.

திருமணத்திற்குப் பின்பு கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. ஆங்கிலம் முடித்தேன், அதனைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.கிரிமினாலஜி படித்தபோது, அதிலிருந்த பாடங்கள் காவல் துறையோடு என்னை தொடர்புபடுத்தியது. எம்.ஏ. முதல் ஆண்டில் எனது முதல் குழந்தை பிறந்தது. படிப்பு நன்றாக வந்ததால் பல்கலைக்கழகத்தில் நான் மூன்றாவதாய் வந்தேன்.
பிறரிடம் இருந்து என்னை வித்தியாசப்படுத்தி பார்க்கவே பெரிதும் விரும்புவதால், எம்.ஃபில். படிப்பில் பிப்ம்ஸ் அண்ட் பிராஸ்டியூஷனில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து கோல்ட் மெடலும் பெற்றேன். பிறகு யு.ஜி.சி ஸ்காலர்ஷிஃப்போடு ‘பீரோ ஆஃப் போலீஸ் ரிசர்ச்சில்’ என்னுடைய பி.எச்.டி அமைந்தது.

ஜனவரி 26 குடியரசு தினவிழா பரேட் நிகழ்வை என் அம்மா மற்றும் குழந்தையுடன் பார்வையாளர் வரிசையில் நின்று பார்க்க நேர்ந்தபோது, பெண் காவல்துறை அதிகாரிகள் பலரும் காக்கி உடையில் மிடுக்காக நடந்து சென்றனர். “அங்கிருக்க வேண்டிய நீ எங்க இருக்க” என அம்மா சொல்ல, நான் யோசிக்க ஆரம்பித்தேன். அதே ஜனவரி 30 நாளிதழில், ஆல் இந்தியா அளவில் சி.ஆர்.பி.எஃப் அதிகாரி பணிக்கு 6 பெண்களை தேர்வு செய்கிற விளம்பரம் வந்தது. இதில் 4 மட்டுமே ஓப்பன் கோட்டா. இதில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்றது நான் மட்டுமே. குழந்தையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு காலை 6 மணிக்கு மைதானத்தில் இறங்கி ஓட ஆரம்பித்தேன்.

நான் அத்லெட் என்பதால் 100 மீ, 800 மீ ஓட்டங்களை சுலபமாய் கடந்தேன். எழுத்துத் தேர்விலும் வெற்றியே. பிறகு ஹைதராபாத்தில் நடந்த நேர்முகத் தேர்வில், திருமணம் ஆனவள் என்கிற காரணத்தினால் உயர் அதிகாரி என்னை தேர்வு செய்ய மறுத்தார். ‘‘திருமணம் ஆகாத பெண்கள் என்றாலும் அவர்களுக்கும் நாளை திருமணம் நடக்கும். குழந்தைப்பேற்றை அவர்களும் சந்திக்க வேண்டும்தானே. இதுதான் என்னை நிராகரிப்பதற்கான காரணமெனில், என் தேசத்திற்காக, என் குடும்பத்தை விட்டுவிட்டு, முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய நான் தயார்” என்கிற எனது பதில் அதிகாரியின் மனதை மாற்றியது. தென் இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே பெண்ணாய் அன்று நான் இருந்தேன்.

குழந்தையை கணவர் மற்றும் பெற்றோரிடம் விட்டுவிட்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற பயிற்சிக்கு கிளம்பினேன். காக்கிச் சீருடைதான் என் பாஷன் என்பதால் ரன்னிங், ரைபிள், மவுண்ட் கிளைம்பிங், ரோ கிளைம்பிங் பயிற்சிகளை சுலபமாய் செய்ய முடிந்தது. 13 மாதப் பயிற்சிக்குப் பிறகு டெல்லியில் பணி அமர்த்தப்பட்டேன். கணவர் எனது மகனை கவனித்துக்கொண்டு டெல்லிக்கு தனது பணியை மாற்றிக்கொண்டார். இந்த நேரத்தில் எனக்கு 2வது குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த 3 மாதத்திலேயே, பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் அயோத்தி கிளம்பினேன். என் முதல் அசைன்மென்டே உமாபாரதியை கைது செய்ததுதான்.

ஏசியாவின் முதல் பெண்கள் மகிளா போர்ஸில் பல மாநிலங்களைச் சேர்ந்த மொத்த வுமென்ஸ் பெட்டாலியனையும் சேர்த்து மொத்தம் 1200 பெட்டாலியன்ஸ் இருந்தனர். இவர்களுக்குத் தலைமைப் பொறுப்பில், முதல் பெண் கமாண்டராக டெல்லியில் இருந்தேன். முதல்வரைப் பாதுகாக்கும் SPG அதிகாரி பணிக்கு முதல் முறையாக பெண்களையும் தேர்வு செய்தார்கள். எனது பணிக்கால நடவடிக்கைகள் கிறிஸ்டல் கிளியராகவே இருந்ததால், முதல் பெண்ணாகத் தேர்வானேன்.

இதற்கான பயிற்சிகள் 4 மாதம் டெல்லியில் நடந்தது. ராணுவத்தில் வழங்கப்படும் பயிற்சியைவிட 10 மடங்கு பயிற்சிகள் இதில் அதிகம். ஓய்வு கொடுக்காமல்… தூங்க விடாமல்… சாப்பாடு தராமல்… எந்த எக்ஸ்டீரீம் சூழலையும் தாங்கி நிற்கிறோமா என்று சோதிப்பார்கள். சில சைக்காலஜி தேர்வுகளும் உண்டு. நமது ஈகோவை பிரேக் செய்வதற்கான பயிற்சிகளும் இருந்தது.SPGல் எனக்கு அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர் ஜென்ட்ரல்(AIG) பதவி வழங்கப்பட்டது. முழுக்க முழுக்க பிரதமரை பாதுகாப்பதுதான் பணி. காலை, மதியம், இரவு என மாறிமாறி வரும்.

8 மணி நேரமும் அர்ப்பணிப்புடன் எந்த சிந்தனையும் இன்றி செயல்பட வேண்டும். 5 வருடம் பணிக்காலம் என்றாலும், நான் மீண்டும் தேர்வாகி, 1993ல் தொடங்கி 2001 வரை 9 ஆண்டுகள் SPG அதிகாரியாய் பணியாற்றினேன்.முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங் தொடங்கி சந்திரசேகர், நரசிம்மராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் மீண்டும் வாஜ்பாய் என அடுத்தடுத்து பொறுப்பேற்ற 7 பிரதமர்களின் பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறேன்.

2004ல் என் கணவருக்கு செப்டி சீமியா(septicemia) பாதிப்பில் உடல் நலமில்லை என்ற தகவல் வந்தபோது, நான் அமர்நாத் பனிலிங்கம் கோயிலில் மகிளா பட்டாலியனோடு பணியில் இருக்கிறேன். கணவர் இறந்துவிட்டார் என்கிற தகவலும் அடுத்து வருகிறது. எனக்கு அப்போது வயது 38. பெரியவன் +1. சின்னவன் 5வது படிக்கிறான். மகன்கள் இருவரையும் கைகளில் பிடித்தபடி அவர் உடலின் முன் சுவற்றில் சாய்ந்து நிற்கிறேன். நான் இந்த அளவு உயர்ந்த இடத்தைத் தொட அவர் தன்னையே கரைத்துக்கொண்ட நல்ல மனிதர்.

ஆனால் நான்..? நாட்டை பாதுகாக்கும் பொறுப்பில் என் பட்டாலியனில், எனக்குக் கீழே 1000 பெண்கள் இருக்கிறார்கள். தலைமைப் பொறுப்பிலே இருக்கும் நான் அழுதுகொண்டே வீட்டிற்குள் இருக்க முடியாது. வேறு வழியில்லை. 4வது நாளே மீண்டும் பணியில் இருக்கிறேன். எனது மகிளா பட்டாலியன் செயல்படும் ஜார்கண்ட், சட்டீஸ்கர், அயோத்தி, டெல்லி, காஷ்மீர், சென்னை என பல இடங்களுக்கு சென்று சுற்றிச்சுற்றி வேலை செய்ய வேண்டும்.

24 நாட்களும் எனக்கு டூர்தான். 6 நாள் மட்டுமே ஸ்டேஷன் பணி. 2008ல் டி.ஐ.ஜி.யாக பணி உயர்வு கிடைத்த பிறகு, என் குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டிய நிலையில் வாலன்ட்ரி பென்ஷனோடு 21 வருட பணிக் காலத்தில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். யு.எஸ். நாட்டில் நான் எடுத்த சீக்ரெட் செக்யூரிட்டி பயிற்சிக்கான சான்றிதழ் மற்றும் யு.எஸ் பல்கலைக்கழக எம்.பி.ஏ சான்றிதழ்கள் மாற்று வேலைக்கு கை கொடுத்தது.

என் கணவர் இறுதியாக எனக்கு ஒரு நாயை பரிசளித்திருந்தார். எனது மனக் குமுறல்களையும், என் வலிகளையும், என் கண்ணீரையும் பார்க்கும் உற்ற நண்பனாய் அது மட்டுமே என் அருகில் எப்போதும் இருந்தது. நாய்களின் மீதான பிரியம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கி ஒரு நாய் முப்பது நாயாக மாறியது.மகன்கள் திருமணமாகி அவரவர் குடும்பத்தோடு டெல்லியில் செட்டிலாக, நானோ கைவிடப்பட்ட நாய்கள், நோயால் பாதிப்படைந்த நாய்கள், ஊனமுற்ற நாய்கள், வயது மூப்பில் இருந்த நாய்களை மீட்டு, அவைகளைப் பராமரிப்பதற்காகவே, விவசாய நிலம் ஒன்றை வாங்கி, உத்தரப்பிரதேசம், நியூ நொய்டாவில் “பாஸ்டெர்ஸ் ஃபவுண்டேஷன்” (Pawsters Foundation) என்கிற பெயரில் பராமரிப்பு இல்லத்தை நடத்தி வருகிறேன். இன்று இந்த இல்லத்தில் 250க்கும் மேற்பட்ட நாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருமணம் ஆனாலும் தனிமையில் தவிக்கும் பெண்கள் தமிழகத்தில் 61% இருக்கிறார்கள் என்றும், தமிழகம் இதில் 3வது இடத்தில் இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. எனவே பெண்களின் டிப்ரஷன், ஆன்சைட்டி பிரச்னைகள், அவர்களுக்கான வருமானத் தேடல்களில் ஆலோசனை மற்றும் உதவியை வழங்கி வருகிறேன்’’ என்கிறார் இந்தியாவின் உச்சகட்ட பாதுகாப்பில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்த இந்த SPG வீராங்கனை.

டாப் சீக்ரெட் அமைப்பான SPG

முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, பிரதமர்களின் உச்சகட்ட பாதுகாப்பிற்காக 1985ல் உருவானதே SPG (Special Production Group). இது புதுடில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.SPG அதிகாரியாய் தேர்வாவதும், இதற்கான வழிமுறைகளும் சுலபமில்லை. CRPF, IPS, CISF, BSF, ITBP என்கிற நாட்டைப் பாதுகாக்கும் 5 பிரிவுகளில் ஒன்றில் பணியாற்றி இருக்க வேண்டும். பணியில் எந்தவித கலங்கமும் (Zero security error) இருக்கக் கூடாது.

உடல் வலிமை, குறி தவறாமல் சுடுவது, சதிச் செயலை முறியடிப்பது, க்ளோஸ் புரொடக் ஷன், சமயோஜித சிந்தனை மற்றும் செயல்பாடு, தகவல் தொடர்பு, வெளியுலகிற்குத் தெரியாத சீக்ரெட்டான பயிற்சிகளும் வழங்கப்படும். உலகத்தின் பெஸ்டான வெப்பன்ஸ் SPG அதிகாரிகளின் கைகளில் இருக்கும்.5 வருட பணிக்காலம் முடிந்ததும் இவர்களின் பேரன்ட் யூனிட்டிற்கு திரும்புவர். பணியை நீட்டிக்க விரும்புபவர்களின் கோரிக்கையினை மத்திய அரசாங்கம் பரிசீலித்து முடிவு செய்யும்.

தொகுப்பு: மகேஸ்வரி

You may also like

Leave a Comment

nineteen − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi