டெல்லி: 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்காக பிரதமர் மோடி நடத்திய விழா ஒரு நாடகம் என்று காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளது. ஒன்றிய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்வான பணியாளர்கள் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பணி ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் பேசியதாவது; ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மோடி தோல்வி. சிறு, குறு, நடுத்தர தொழில்களை பணமதிப்பிழப்பு மூலம் மோடி அரசு அழித்துவிட்டது. சரியாகத் திட்டமிடாத ஜிஎஸ்டி, அவசரகதியில் அமல்படுத்திய முழு முடக்கம் போன்றவற்றாலும் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது.
9 ஆண்டுகளாக இளைஞர்களின் நம்பிக்கைகளை அழித்த பிரதமர் மோடிக்கு தேர்தல் வரும்போது அதன் சூடு தெரிகிறது. சரிந்துவரும் தன் பிம்பத்தை காப்பாற்ற, வேலைவாய்ப்பு மேளா என்ற பெயரில் மிகப்பெரிய நாடகத்தை பிரதமர் நடத்துகிறார். ஏற்கனவே உருவாக்கப்பட்டு நிர்வாகக் காரணங்களால் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களுக்கே ஆணைகளை வழங்கினார். ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை மோடி பணி நியமன உத்தரவு போல வழங்கி உள்ளார். முதலீடுகள் அதிகரிப்பால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால்தான் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியதற்கான பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க மறுக்கிறார். தற்போது வேலைவாய்ப்பு மேளா என்ற நாடகத்தை மோடி நடத்தி வருகிறார். இவ்வாறு தெரிவித்தார்.