நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை கீழுரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணி (60). அங்குள்ள மாடசாமி கோயில் அருகே நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, வேப்பமரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த தேவேந்திரகுல எழுச்சி இயக்க நிறுவன தலைவர் கண்ணபிரான், மாநில பொறுப்பாளர் செல்லப்பா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடலை பெற சம்மதித்தனர்.
பின்னர், 2 கார்களில் கண்ணபிரான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேர் நெல்லை திரும்பி கொண்டிருந்தனர். இவர்களின் கார்களை பாளையங்கோட்டை கேடிசி நகர் செக்போஸ்ட்டில் போலீசார் சோதனையிட்டபோது, 5 பெட்ரோல் குண்டுகள், அரிவாள்கள் உட்பட பல ஆயுதங்கள் இருந்ததை பார்த்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து கண்ணபிரான் உட்பட 15 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.