Sunday, June 9, 2024
Home » அதிக மருத்துவ குணம் நிறைந்தது வாழும்போதும், வீழ்ந்த பின்பும் பலன்தரும் பனைமரம்

அதிக மருத்துவ குணம் நிறைந்தது வாழும்போதும், வீழ்ந்த பின்பும் பலன்தரும் பனைமரம்

by kannappan

* வரலாறுகளை நன்கொடையாக அளித்த பெருமை
* 801 பயன்களை கொடுக்கும் தனிச்சிறப்பு கொண்டது

தமிழர்களின் அடையாளமாகவும் தமிழகத்தின் அரசு சின்னமாகவும் பனைமரம் திகழ்கிறது. பனை மரத்தின் வேர் முதல் நுனிவரை எண்ணற்ற பயன்களை தருவதால் இந்த மரத்திற்கு கற்பகத்தரு என்று சிறப்பு பெயர் உண்டு. பனைமரத்தின் வாயிலாக 801 பயன்களை தர கூடியது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நாம் இன்று காணும் இடமெல்லாம் பயன்படுத்தும். காகித பேப்பரின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என கூறப்படுகிறது.

ஆனால் பனை ஓலையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நமது சங்க இலக்கியங்களையும், புராணங்களையும், நன்னெறி நூல்களையும் நமக்கு கொடையாக அளித்த பெருமை பனை ஓலைகளையே சேரும். மன்னர் ஆட்சி காலத்தில் முக்கிய தகவல் பரிமாற்றத்திற்கு பனை ஓலை மிகுந்த உதவியாக இருந்துள்ளது.

பழங்கால இலக்கியங்கள் ஓலைச்சுவடியிலேயே எழுதி வைக்கப்பட்டது. அதற்காக பனை ஓலைகள் பிரித்து எடுக்கப்பட்டு அதனை பதப்படுத்தி ஓலைகளில் எழுதும் பதத்திற்கு கொண்டுவரும் நுட்பத்தையும் நமது தமிழர்கள் அறிந்து வைத்திருந்து உள்ளனர். மன்னர்கள், ஜமீன்தார்கள், பெரும் நிலக்கிழார் ஆகியோர் பனை ஓலை எழுதுவதற்கு என பழங்காலத்தில் ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருந்த குறிப்புகளும் அறிய முடிகிறது.

பொதுவாக பனை மரத்திலிருந்து பழுத்து கீழே விழும் பனம்பழமே விதையாகும். நன்கு விளைந்த காய்ந்த பனங்கொட்டையை விதையாக்கினால் மூன்று மாதங்களுக்குள் பனை கன்று உற்பத்தியாகும். நட்டு வைத்தால் 9 முதல் 10 ஆண்டுகளில் பலன் அளிக்க தொடங்கிவிடும். நன்கு நீர் பாசன வசதி இருந்தால் பனைமரம் 100 ஆண்டுகளைக் கடந்தும் உயிர் வாழக்கூடியது. பொதுவாக 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆண், பெண் மரங்களை அடையாளம் காண முடியும் என பனை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண் பனைக்கு அழகு பனை என்றும் பெண் பனைக்கு பருவப்பனை என்றும் பெயர் சூட்டி அழைக்கின்றனர். பாலை மட்டும் வெளியே நீட்டியிருந்தால் அது ஆண் பனை. இந்த மரத்தில் நுங்கு காய்க்காது. பெண் பனையில் மட்டும் தான் நுங்கு காய்க்கும். பெண் பனையில் ஆண் பனையை விட கூடுதலாக பதநீர் கிடைக்கும். பனைமரம் ஒன்றுதான் என்றாலும் கூட அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் நமக்கு ஏராளமானதாகும்.

ஒரு வருடத்திற்கு நான்கு புது ஓலைகள் வளரும். நான்கு பழைய ஓலைகள் கீழே விழும். ஆறு முதல் 12 பாலைகள் தள்ளும். 100 முதல் 120 காய்கள் காய்க்கும். சராசரியாக ஒரு மரத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 150 லிட்டர் பதநீர் இறக்க முடியும். சாலை ஓரங்கள் கண்மாய் கரை ஓரங்களில் அதிக அளவு பனை மரங்கள் நடுவதால் மண் அரிப்பினை தடுக்க இயலும்.

34 வகை பனை மரங்கள்: ஆண் பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப் பனை, சாற்றுப்பனை, ஈச்சம் பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை என பனை மரங்கள் 34 வகையாக தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பனை மரம் என நாம் அழைத்தாலும் கூட பனை தாவர வகையை சார்ந்ததாக குறிப்பிடுகிறது. பனை மரத்தின் பயன்பாடுகள் என வகைப்படுத்தினால் கூறிக் கொண்டே செல்லலாம். பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு நீரை சாப்பிட்டு வந்தால் வேர்க்குரு நீங்கும், தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீத கழிச்சல் நோய் சரியாகும். பனங்கற்கண்டு ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் அம்மை நோயால் ஏற்படக்கூடிய உடல் வெப்பம், தாகம் ஆகியவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. அதே வேலை உடல் பலத்தையும், மேனி அழகையும், அதிகரிக்க வல்லது. அதேபோல பனை மரத்தில் கிடைக்கும் பத நீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும் குணம் உண்டு. பதநீர் மூலம் பொங்கல், கொழுக்கட்டை, ஆகியவை செய்யலாம். பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி அதனுடன் தேங்காய் உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும். பனங்கருப்பட்டிக்கு தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை சரி செய்யும் மருத்துவ குணம் உண்டு.வெல்லத்தில் இரும்புச்சத்து மிகுந்துள்ளதால், சோகை நோய்களுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி விலகி வெளியே வரும். குறிப்பாக தொண்டைப்புண் வலி ஆகியவை முற்றிலும் அகலும். சங்கீத துறையில் இருப்பவர்கள் காய்ச்சியப் பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்துவது வழக்கம். இது குரல் வளத்தை பாதுகாக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கூடுதலாக பனங்கற்கண்டு உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக அமைகிறது. பனைமரம் மழையை வரவழைக்கும் கொடை நிறைந்த மரமாகும். பனை மரங்கள் இருக்கும் இடத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். மேகக் கூட்டங்களை தன் பால் ஈர்க்கும் வல்லமை பனை மரத்திற்கு உண்டு.

சங்க காலம் மட்டுமல்ல, திருக்குறளில் வள்ளுவர் தனது குரலில் உதாரணம் காட்டிட

“தினைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்’’ (குறள்.104)

எனக் கூறியுள்ளது பனை மரத்தின் தொன்மையும் நாம் அதனுடன் கொண்டுள்ள தொடர்பை பற்றியும் அறிந்து கொள்ள இயலும். இன்னும் பெருமை பட கூற வேண்டுமானால் பனைமரம் தமிழர்களின் வரலாற்றை பாதுகாத்து நமக்கு அளித்த சீதனம் என்று கூறினால் அது மிகையாகாது. சங்க இலக்கியங்களில் அகத்திணை, கலித்தொகை, அகநானூறு, நவநீதி பாட்டியல் போன்றவைகளில் பனை ஓலைகளை பற்றி குறிப்பிடும் சிறப்பு பெயர்கள் உள்ளது.

விதையாக மண்ணில் விழுந்து வளர தொடங்கிய நாளிலிருந்து இறுதி காலம் வரை மட்டுமல்லாமல் பட்ட மரமாய் மண்ணில் சாய்ந்த பின்னும் நமக்கு பயன் தரும் மரம் பனை மரமாகும். தமிழகம் முழுவதும் அடர்ந்து வளர்ந்திருந்த பனை மரங்கள் பெருமளவு இன்று அழிக்கப்பட்டு செங்கல் சூளைக்கு விறகாக்கப்பட்டிருக்கின்றன. அண்மையில் கூட விளை நிலங்கள் கட்டுமானத்திற்கான நிலங்களாக மாற்றப்பட்ட நிலையில் அதன் அருகில் ஓங்கி வளர்ந்திருந்த பனை மரங்களை உயிரோடு கருக வைக்கும் நோக்கில் விஷமிகள் சிலர் மரத்தின் வேர் பகுதியில் விஷம் என்னும் கெமிக்கல் மருந்தை ஊற்றி இருந்த நிகழ்வு நெஞ்சை பதற செய்தது.

வெளியே கரடு முரடான தோற்றத்துடன் பனைமரம் காட்சியளித்தாலும் பனைமரம் தாய்மை குணம் கொண்ட மரம் என கூறலாம். ஏனென்றால் மரம், பனை மட்டை, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, தச்சு வேலைக்கு பயன்படும் ரீப்பர், விறகு, பனை ஓலையால் தயாரிக்கப்படும் கலை பொருட்கள், கருப்பட்டி வெள்ளம், பனங்கற்கண்டு, நுங்கு, பதநீர், கள், பனை நாரினால் தயாரிக்கப்பட்ட கயிறு என அனைத்து வகையிலும் வாழ்வியலில் நம்மோடு பயணிக்கும் பனை மரத்தை நேசிப்போம்.

பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பழுவேட்டறையரின் கொடியில், முத்திரை மோதிரத்தில் பனை மரமே சின்னமாக பொறிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும். சங்க காலம் தொட்டு வரலாற்று நாவல்கள், புராணங்கள் என எதையும் விட்டு வைக்காமல் எல்லா நேரத்திலும் நம்மோடு பயணிக்கும் பனை மரத்தை வளர்ப்பதும் அதனை பாதுகாப்பதும் மனித குலம் பனை மரங்களுக்கு ஆற்றும் நன்றி கடன் ஆகும்.

பீரங்கி குண்டுகளை தகர்த்தெறிந்த பெருமை

காளியின் அம்சமாக கருதப்படும் பனை மரத்தை தமிழர்கள் இன்றளவும் தெய்வமாக வழிபடுவதை பல இடங்களில் நாம் காண இயலும். பனை மரங்கள் வளர்ந்திருக்கும் இடத்தில் இடி மின்னல் போன்ற பாதிப்புகள் பெருமளவு இருக்காது. ஏனென்றால் மின்னலை தன்பால் ஈர்த்துக் கொள்ளும் சக்தி பனை மரத்திற்கு உண்டு என கிராமப் புறங்களில் கூறுவதை இன்றளவும் நாம் காண முடியும். மேலும், மன்னர்கள் காலத்தில் ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும்போது ஏவப்படும் பீரங்கி குண்டுகளையும் தாங்கி பிடிக்கும் சக்தி கொண்டதாக பனை மரம் விளங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன.

* ஆண் பனைக்கு அழகு பனை என்றும் பெண் பனைக்கு பருவப்பனை என்றும் பெயர் சூட்டி அழைக்கின்றனர். பாலை மட்டும் வெளியே நீட்டியிருந்தால் அது ஆண் பனை. இந்த மரத்தில் நுங்கு காய்காது. பெண் பனையில் மட்டும் தான் நுங்கு காய்க்கும்.

You may also like

Leave a Comment

seventeen − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi