சங்கரன்கோவில்: பெண் தொடர்பு காரணமாக கோவை மாவட்ட கமிஷனர் ஆபீசில் சுருக்கெழுத்தராக பணிபுரியும் போலீஸ்காரர் கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் பெரியதுரை(31). இவர் கோவை மாவட்ட கமிஷனர் அலுவலகத்தில் தனி காவல் பிரிவில் சுருக்கெழுத்து நிருபராக பணியாற்றி வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவருக்கு குணா என்ற மனைவியும் ரூபன்(6), சேது(3) என்ற மகன்களும் உள்ளனர். இவருடைய உறவினர்கள் அல்லிதுரை(30) மற்றும் நம்பிராஜன் மகன் அருண்குமார் (29). இவர்களுக்கும் பெரியதுரைக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை அருண்குமாருக்கு, அல்லிதுரை போன் செய்து, உங்களிடமும், பெரியதுரையிடம் சமாதானம் பேச வேண்டியுள்ளது என்று கூறி, கல்லத்திகுளம் மலைக்காட்டுப்பகுதிக்கு வரும்படி அழைத்ததாக தெரிகிறது. இதனையடுத்து அல்லிதுரை மற்றும் பெரிய துரையை சந்திக்க மலைக்காட்டுபகுதிக்கு அருண்குமார் தன்னுடன் நண்பர் ஒருவரையும் அழைத்து வந்துள்ளார். அங்கு அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றவே, அருண்குமார், பெரியதுரையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் பெரியதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் மற்றும் அவரது நண்பர் சேத்தூர் குமார்(31) ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் அல்லித்துரை மற்றும் பெரியதுரையின் உறவினர்கள் சிலரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பெண் தொடர்பு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தேடப்பட்டு வரும் அருண்குமார் மீது நடிகர் கருணாஸ் காரை உடைத்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை சென்றவர் என்பது தெரியவந்துள்ளது.