நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதானமான அணை பாபநாசம் அணையாகும். இங்கு 143 அடி கொள்ளளவு உள்ள அணையில் தற்போது 93 அடியில் தண்ணீர் உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 1104 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சாகுபடிக்காகவும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குடிநீர் தேவைகளுக்காகவே அணையில் இருந்து தாமிரபரணியில் நீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் பாபநாசம் அணையில் உள்ள நீரை திறந்து விட்டனர். வினாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்று பாசனத்தில் உள்ள சுமார் 86,107 ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும். முதற்கட்டமாக 136 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். மேலும் மழைப்பொழிவு மற்றும் நீரவரத்தை பொறுத்து தேவைக்கேற்ப சுழற்சி முறையில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.