குமரி: கன்னியாகுமரியில் மீன்வளத்துறை உதவியாளர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்ட பொதுப்பணித்துறையில் உதவியாளராக பணிபுரிந்து தற்போது அயலக பணியாக மீன்வளத்துறையில் பணிபுரிந்து வருபவர் மகேஷ். நாகர்கோவில் அருகேயுள்ள கேசவன்புதூர் பகுதியிலுள்ள மகேஷ் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தருமராஜ் தலைமையில் தான் சோதனை நடைபெறுகிறது.
2013 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் இரண்டரை கோடி வரை சொத்து சேர்த்ததாக மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் லஞ்ச பணத்தில் மகேஷ், நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பல வீடுகள் வாங்கியதாகவும், பல விதங்களில் சொத்து சேர்த்துள்ளதும் முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. சோதனை முழுமையடைந்த பிறகே கூடுதல் தகவல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.