ஊட்டி: ஊட்டி தூய மோட்சராக்கினி ஆலய தேர்பவனி நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தின் முதல் கத்தோலிக்க ஆலயமான தூய மோட்சராக்கினி ஆலயத்தின் 185வது ஆண்டு விழா மற்றும் 77வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மறையுரை நடைபெற்றது. அருட்பணியாளர்கள் ரவிலாரன்ஸ், ஜெயக்குமார், லியோ சேவியர், பவுலா ஜெயக்குமார் மற்றும் சகோதரர் ஷாஜி ஆகியோர் பாடல்களை பாடி சிறப்பித்தனர்.
இந்நிலையில் சுதந்திரதினவிழாவையொட்டி நேற்று காலை 6.15 மணிக்கு புனித ஜோசப் மேல்நிலை பள்ளி தாளாளரும், தலைமையாசிரியருமான பெரியநாயகம் மற்றும் பங்குகுரு செல்வநாதன் ஆகியோர் 185வது ஆண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். ஆங்கில திருப்பலியை புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் நோயல் ஸ்டீபன் நிறைவேற்றினார்.
இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியகொடியை ஏற்றிவைத்து, இந்திய சுதந்திர தினத்தை பற்றியும், ரத்தம் சிந்திய தியாக உணர்வை அனைவரும் நினைவு கூறவேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார். இதை தொடந்து பங்குகுரு செல்வநாதன், பாதிரியார்கள் தமிழ்மாறன், பிரெட்ரிக், அருள் பணியாளர் ஞானசெல்வம் ஆகியோர் முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடைபெற்றது. ஆலயத்தின் 185வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் செயின்ட் மேரிஸ் ஆலய நண்பர்கள் குழு துவக்கப்பட்டு ஆலய நுழைவு வாயிலில் புதிய பூங்கா அமைக்கப்பட்டது.
இதை பங்கு தந்தை செல்வநாதன் திறந்து வைத்து, ஆசிர்வதித்து கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு வைத்தார். இதை தொடர்ந்து அன்னையின் ஆடம்பர தேர்பவனி தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக தேர் பஸ் நிலையம் வரை சென்று திரும்பியது. விழா ஏற்பாடுகளை பங்குகுருக்கள், இளைஞர் குழு, நகர மன்ற உறுப்பினர் பிளோரினா மார்ட்டின், அன்பிய குழுக்கள், புதிய நண்பர்கள் குழு செய்திருந்தனர். வருகிற 20ம் தேதி நோயாளிகள் மற்றும் தாத்தா, பாட்டிகளுக்கான சிறப்பு திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.