மதுரை: பருவமில்லாத காலங்களிலும் மல்லிகை பூக்களின் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் அதிக வருமானம் பெறுவதற்கான நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை தமிழக அரசின் வேளாண்துறை மற்றும் தோட்டக் கலைத் துறை வழி காட்டுகிறது. இது தொடர்பாக விவசாயிகளுக்கென சிறப்பு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மல்லிகையின் மணமும் நிறமும், தமிழகத்தின் வேறு எங்கும் உற்பத்தியாகும் மல்லிகைப் பூக்களில் கண்டறிய முடியாது. அதனால், உள்ளூர் சந்தைகள் முதல் உலக சந்தைகள் வரை மதுரை மல்லிக்கு தனி வரவேற்பு உண்டு. மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டி வட்டாரங்களில் அதிக அளவு மல்லிகை விவசாயம் செய்து வகுகின்றனர்.
2500க்கும் அதிக எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. 20 ஆயிரம் விவசாயிகள் மல்லிகை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர் பொதுவாக மல்லிகை உற்பத்தி சீசன் பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடிவடையும். இந்த சீசனில் மல்லிகைப்பூக்கள் அதிகளவு சந்தைக்கு விற்பனைக்கு வரும். இந்த சீசனில் உற்பத்தி மிகுதியால் விவசாயிகளுக்கு பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. அடுத்து செப்டம்பர் இறுதி முதல் பிப்ரவரி முதல் வாரம் வரை பூக்கள் வரத்து குறைந்து விடும். குளிர் கால சீசனில் மல்லிகை சாகுபடியில் பெரி ளவில் பூக்கள் உற்பத்தியாகாது. ஆனால் உற்பத்தி விலை கிடைக்கும். இந்த பருவமில்லாத காலத்திலும் தமிழக அரசின் வழிகாட்டலுடன் நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம் மல்லிகை பூக்களின் உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்கச் செய்யலாம்.
வேளாண் அலுவலர் பழனிக்குமார் கூறுகையில் செப்டம்பர் மாதம் மல்லிகை செடிகளை கவாத்து செய்து, ஒருங்கிணைத்த ஊட்டச்சத்து. பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதாவது குளிர் காலங்களில் மல்லிகை பூ உற்பத்தியினை அதிகரிக்கலாம். குளிர் காலங்களில் மல்லிகை பூ விலையானது மும்மடங்கு அதிகரிப்பதால் விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தரையில் இருந்து 43 செமீக்கு அரை அடி உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்த வெட்டுப்பகுதிகளில் பைட்டலான் பூஞ்சான கொல்லியை தடவி பூஞ்சாண தாக்குதலை கட்டுப்படுததலாம். கவாத்து செய்யும் போது குறுக்கு கிளைகள், நோய் மற்றும் பூச்சி தாக்கிய கிளைகள். மெலிந்த சிறிய கிளைகள் ஆகியவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
செடிகள் மீது நன்கு சூரிய ஒளி படுமாறு செய்ய வேண்டும். கவாத்து செய்தவுடன் தொழுஉரம் 10 கிலோவுடன் 65 கிராம் யூரியா, 100 கிராம் பொட்டாஷ் சேர்த்து ஒவ்வொரு செடிக்கும் அதன் மையப்பகுதியில் இருந்து அரை அடி அளவிற்கு குழி பறித்து மண்ணில் இட்டு உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 500 கிராம் வேப்பம் புண்ணாக்கு இடுவதன் மூலம் நூற்புழுக்கள் தாக்காவண்ணாம் செய்யலாம். கவாத்து செய்து ஒரு மாதம் கழித்து 10 மில்லி சைகோ செல் மற்றும் 4 மில்வி வாமிக் அமிலத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை 2 தடவை தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்கலாம். இதற்கு தமிழக அரசில் வேளாண், தோட்டத்துறைகள் சார்பில் வழி காட்டப்படுகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று தெரிவித்தனர்.