சென்னை: சென்னை அருகே பூந்தமல்லி, கபாலி தெருவை சேர்ந்தவர் ராஜ்பாலாஜி (15), குமணன்சாவடியில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக திடீர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரை பூந்தமல்லியில் தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மாணவனின் உடலில் உப்பின் அளவு அதிகரித்ததால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி ராஜ்பாலாஜி பரிதாபமாக பலியானார்.