புதுடெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது. பிரியங்கா காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில்,நீட் போன்ற கடினமான தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்வின் மிகவும் சிறந்த தருணங்களை தேர்வுக்கு தயார் செய்வதில் செலவிடுகின்றனர். மாணவர்களின் முழு குடும்பமும் இந்த முயற்சியில் தங்கள் நம்பிக்கையையும் உழைப்பையும் இதில் வைக்கின்றனர்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வினா தாள் கசிவுகள், தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் என்பது தொடர் கதையாக உள்ளன. தேர்வு நடத்தும் அமைப்புக்கு பொறுப்புடைமை என்பதே இல்லையா. ஒன்றிய அரசும், நீட் தேர்வு முறையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.இளம் மாணவர்களின் கனவுகள் இப்படி சிதைவதை ஏற்க முடியாது. மாணவர்களின் கடின உழைப்பை வீணடிக்கும் அநீதியை நிறுத்த வேண்டும். நீட் முறைகேடுகளை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.