திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு புத்தூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த மாதம் 21ம் தேதி ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஒருவர், அந்தப் பெண் மும்பையிலிருந்து தைவான் நாட்டுக்கு அனுப்பிய ஒரு பார்சல் திரும்பி வந்துள்ளதாகவும், அது தொடர்பாக மும்பை போதைப் பொருள் தடுப்பு போலீஸ் அதிகாரிக்கு போனை கனெக்ட் செய்வதாகவும் கூறியுள்ளார். அதன்பின் மும்பை துணை போலீஸ் கமிஷனர் என்று கூறி ஒருவர் அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளார்.
ஆனால் தான் அவ்வாறு பார்சல் எதுவும் அனுப்பவில்லை என்று பெண் கூறியுள்ளார். இருப்பினும் ஆதார் எண்ணின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், வழக்கை ரத்து செய்ய அந்த நபர் கூறிய பல வங்கிக் கணக்குகளுக்கு ரூ.44 லட்சம் வரை அந்தப் பெண் பணம் அனுப்பியுள்ளார்.
மீண்டும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் பாலக்காடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பாலக்காடு எஸ்பி ஆனந்தின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சஜீவ்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் மோசடியில் ஈடுபட்ட திண்டுக்கல் சவுராஷ்டிரா காலனியைச் சேர்ந்த பாலாஜி (34), திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த இந்திரகுமார் (20) மற்றும் வேலூரைச் சேர்ந்த மோகன்குமார் (27) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 10 வங்கிக் கணக்கு புத்தகங்கள், காசோலை புத்தகங்கள் மற்றும் 15 ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.