திருமலை: திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையில் கடந்த மாதம் பெற்றோருடன் நடந்து சென்ற சிறுமி ரட்ஷிதாவை சிறுத்தை இழுத்துச்சென்று கொன்றது. அதேபோல் அதற்கு முன்னதாக மலைக்கு சென்ற கவுசிக் என்ற சிறுவனையும் சிறுத்தை இழுத்துச்சென்றது. சிறுவனின் பெற்றோர், பக்தர்கள் கூச்சலிட்டபடி துரத்திச்சென்று சிறுத்தையை விரட்டிவிட்டு சிறுவனை மீட்டனர். இதை தொடர்ந்து 4 சிறுத்தைகள் பிடிபட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் 5வதாக மேலும் ஒரு சிறுத்தை கூண்டு வைக்கப்பட்டு இருந்த இடத்தில் வந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மலைப்பாதை வழியாக ெசல்லும் பக்தர்களை வனவிலங்குகள் தாக்காமல் தடுக்க அவர்களிடம் கம்புகள் வழங்குதற்காக 15 ஆயிரம் கம்புகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கம்புகள் வந்தவுடன் பக்தர்களுக்கு வழங்கப்படும். அதனை மலைக்கு பக்தர்கள் கொண்டுசெல்லும் வழியில் முழங்கால் மெட்டு பகுதியில் பக்தர்களிடம் இருந்து கம்புகள் பெறப்படும். மீண்டும் அந்த கம்புகள் அலிபிரி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு பக்தர்களிடம் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.