காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள திண்டல் ஊராட்சி ஒடைந்தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி மாதம்மாள் (60). இவரது மகன் பெருமாள் (29). நேற்று காலை 6.30 மணி அளவில் வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து கொய்யா மரத்திற்கு கட்டியிருந்த கம்பியில் துணியை காய போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து துடிதுடித்தார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடி வந்த மகன் பெருமாள் தாயை காப்பாற்ற முயன்றார். அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த மாதம்மாளின் தம்பி மாணிக்கத்தின் மனைவி சரோஜா (55) ஓடி வந்து இருவரையும் பிடித்து இழுக்க முயன்றார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. படுகாயமடைந்த 3 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர்.