Thursday, May 16, 2024
Home » கருணை பொங்கும் கிருஷ்ணத் தலங்கள்

கருணை பொங்கும் கிருஷ்ணத் தலங்கள்

by Kalaivani Saravanan

* திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரத்தில் உள்ளது வேணுகோபாலன் ஆலயம். கண்ணன், ருக்மிணி-சத்யபாமாவுடன் அருளும் கோயில். வேணுகோபாலன் சிலை நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜயந்தியன்று பெருமாளுக்கு கண்திறப்பு மற்றும் சங்கில் பால் புகட்டும் வைபவம் நடக்கின்றன.

* வேணுகோபாலன், பார்த்தசாரதி, செம்பொன்ரங்கபெருமாள் ஆகிய பெயர்களுடன், பத்மாவதி, ஆண்டாளுடன் கண்ணன் அருளும் கோயில், திருவண்ணாமலையில் உள்ள செங்கம் எனும் ஊரில் உள்ளது. தன் பரம பக்தனான ஏழை ஒருவனுக்கு புதையலைக் காட்டிய பெருமாள் இவர்.

* ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்த கண்ணன் ராஜகோபாலனாக செங்கமலவல்லி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப்பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட காணிக்கைகளை இத்தலத்தில் சேர்க்கலாம் என்பது மரபு.

* மூலவர் கோபிநாதராகவும் உற்சவர் கிருஷ்ணராகவும் தாயார் கோபம்மாளாகவும் அருளும் ஆலயம், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் உள்ளது. மரங்கள் மற்றும் கால்நடைகளைக் காப்பதில் இந்த கண்ணன் நிகரற்றவன்.

* கேரளம், திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் அருள்கிறான் உன்னி கிருஷ்ணன். கல்லாலோ, வேறு உலோகத்தாலோ அல்லாமல் பாதாள அஞ்சனம் எனும் மூலிகையால் வடிவமைக்கப்பட்டவர் இவர். இத்தலத்தில் திருமணம் செய்துகொள்பவர்கள் நீண்ட ஆயுளுடன் ஒற்றுமை மிகுந்து நலமாக வாழ்வர்.

* வேணுகோபாலசுவாமி எனும் திருநாமத்துடன் கண்ணன் பாமா-ருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை குராயூர்-கள்ளிக்குடியில் உள்ளது. இங்கே நந்தவனத்திலுள்ள புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை எனும் சிறப்பைப் பெற்றது. குழந்தைகள் கல்வியில் சிறக்க, இங்கே மாவிளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

* வெண்ணெயுண்ட மாயவன் ராதாகிருஷ்ணனாக அருளும் கோயில் மதுரை, திருப்பாலை எனும் ஊரில் உள்ளது. மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தன் கிரணங்களால் கண்ணனை வணங்கும் தலம் இது. கண்ணனின் பிராணநாடியாக விளங்கும் ராதைக்கு இங்கே தனி சந்நதி உள்ளது. வேண்டுவதையெல்லாம் நிறைவேற்றித் தருகிறான் இந்தக் கண்ணன்.

* மதனகோபாலசுவாமி எனும் பெயருடன் பாமா-ருக்மிணியுடன், மதுரையில் கண்ணன் அருள்பாலிக்கிறான். ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன் பெரியாழ்வாருடன் வந்து இந்த மதனகோபாலரை தரிசனம் செய்து விட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.

* ராஜகோபாலசுவாமி, செங்கமலவல்லித் தாயாருடன் காஞ்சிபுரம், மணிமங்கலத்தில் கோயில் கொண்டுள்ளார். பொதுவாக வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தி அருளும் திருமால், இங்கே இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருப்பது அதிசயம். அனுமன் பிரம்மச்சாரியாதலால் இத்தலத்தில் அவருக்கு காவியுடையே அணிவிக்கப்படுகிறது. மகாபாரதப் போரில் வலது கையில் சங்கை ஏந்திய கிருஷ்ணரே இத்தலத்தில் ராஜகோபாலனாக அருள்கிறார்.

* சென்னை ஆதம்பாக்கம் சாந்தி நகரில் உள்ளது பாண்டுரங்கன் ஆலயம். பண்டரிபுரத்தில் உள்ளது போலவே கோபுர அமைப்பு. கருவறையில் சிரித்த முகத்துடன் அருள்கிறான் கண்ணன். கேட்பவர் கேட்கும் வரங்களைத் தரும் கண்ணன் இவர்.

* கண்ணன் நவநீத கிருஷ்ணனாக, திருநெல்வேலி மாவட்டம் மருதூரில் கோயில் கொண்டுள்ளான். தாமிரபரணியில் நீராடி இந்த பாலகிருஷ்ணனை தரிசித்து பால்பாயசம், வெண்ணெய் நிவேதித்தால் மழலைப் பேறு கிட்டுகிறது. சாபத்தால் மருத மரங்களான தேவர்களுக்கு சாபவிமோசனம் தந்து இத்தலத்தில் நிலைகொள்ள வைத்திருக்கிறான் இந்தக் கண்ணன்.

* சென்னை மயிலாப்பூரில் டாக்டர் ரங்கா சாலையில் ஆலயம் கொண்டுள்ளான் கண்ணன். தங்கத்தை உரசிப் பார்க்கும் கல்லால் ஆனவன் இந்த கண்ணன். ஆலயத்தின் சார்பில் பல்வேறு தர்மகாரியங்கள் நடைபெறுகின்றன. கிருஷ்ண ஜயந்தியின்போது ஆலயம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.

* அஷ்டபுஜ-பால-மதன-வேணுகோபாலன் – இந்தப் பெயரில் கண்ணன் அருளும் கோயில், சேலம் மாவட்டம் பேளூரில் உள்ளது. இங்கே பெருமாள் எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறார். ராமாயணத்தில் சீதாபிராட்டியைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவை, சிறகுகள் வெட்டப்பட்ட நிலையில் இங்கு தரிசிக்கலாம். இந்த பெருமாள் வலது கன்னம் ஆண்களைப் போல சொரசொரப்புடனும் இடது கன்னம் பெண்களைப் போல வழுவழுப்பாகவும் கொண்டுள்ளார்.

* தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கன் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித தோற்றத்தில் பாண்டுரங்கனையும் ருக்மாயியையும் அலங்கரிக்கின்றனர். ஆலயம் முழுவதும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண்ணனின் திருவிளையாடல்களை தஞ்சாவூர் ஓவியங்களாகவும் ம்யூரல் சிற்பங்களாகவும் தரிசிக்கலாம்.

* சென்னை நங்கநல்லூரில் உள்ளது உத்தரகுருவாயூரப்பன் ஆலயம். இங்கு கிருஷ்ணஜெயந்தியன்று இரவு பன்னிரண்டு மணிக்கு முதலில் மகாமாயாவிற்கு பூஜைசெய்து பின் அடுத்த நிமிடம் கண்ணனுக்கு தீபாராதனை செய்து பூஜை செய்யப்படுகிறது.

* கண்ணன் தான் இருக்க காவளம் போன்ற பூம்பொழிலை தேடினான். இந்தக் காவளம்பாடியிலேயே நின்று விட்டான். அதனால் திருக்காவளம்பாடி என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. மூலவராக கோபாலகிருஷ்ணனாகன் (ராஜகோபாலன்), ருக்மணி&சத்யபாமாவோடு கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். சீர்காழி-பூம்புகார் பாதையில் உள்ளது.

* காஞ்சிபுரத்திலேயே திருப்பாடகம் எனும் தலத்தில் பாண்டவதூதர் எனும் திருநாமத்தோடு கிருஷ்ணர் அருள்கிறார். ருக்மணி, சத்யபாமாவோடு சேவை சாதிக்கிறார். ஜெனமேஜெய மகராஜாவுக்கும் ஹரித முனிவருக்கும் இங்கே கிருஷ்ணனின் காட்சி கிடைத்தது.

* மதுரை அருப்புக்கோட்டை பாதையில் 25 கி.மீ. தொலைவில் கம்பிக்குடி பிரிவிலிருந்து 4 கி.மீ. தொலைவில் கம்பிக்குடி ஸ்ரீவேணுகோபாலசுவாமி கோயில் அமைந்துள்ளது. நோயினால் துன்புறும் குழந்தைகளை இந்த வேணுகோபாலன், தெய்வீக மருத்துவனாகக் காக்கிறான்.

* பரமக்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இளையான்குடியில் உள்ள கோயிலின் மூலவரும் வேணுகோபாலன்தான். புல்லாங்குழல் நாத ஆறுதலாக பக்தர்களின் எல்லா கவலைகளையும் கலைத்து நிம்மதியைத் தருபவர் இவர்.

* சென்னை – புதுச்சேரி இ.சி.ஆர். ரோடில் கல்பாக்கத்தை அடுத்து விட்டலாபுரம் எனும் தலம் உள்ளது. மூலவராக விட்டலனும் ருக்மாயியும் சேவை சாதிக்கின்றனர். பிரிவின் எல்லைக்கே போன தம்பதியரின் வேதனை போக்கி, அவர்களை ஒன்றாக்கி மகிழ்வளிக்கிறார்கள் இந்தக் கோயில் தம்பதியர்.

தொகுப்பு: விஜயலட்சுமி

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi