Wednesday, June 12, 2024
Home » தென்னைக்கு இடையே மா சாகுபடி!

தென்னைக்கு இடையே மா சாகுபடி!

by Porselvi

குமரி மாவட்டத்தில் தென்ைன, ரப்பர் சாகுபடிக்கு அடுத்தபடியாக நெல், வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. இதுதவிர குறைந்த பரப்பளவில் மரவள்ளி, கொய்யா, சப்போட்டா, பலா உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. மலையோரப் பகுதிகளில் நறுமண பயிர்களான ஜாதிக்காய், நல்ல மிளகு, திப்பிலி, கிராம்பு உள்ளிட்டவை செழித்து வளர்கின்றன. இதில் மாவட்டம் முழுக்க மா சாகுபடி பரவலாகவே நடந்து வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் மாங்காய் சீசன் தொடங்கி இருக்கிறது. செந்தூரம், அல்போன்சா, செங்கவரிக்காய் உள்ளிட்ட பல்வேறு ரக மாம்பழங்கள் குமரியில் விற்பனைக்காக குவிந்திருக்கின்றன.

மாம்பழத்தில் பொதுவாக புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுப்பொருட்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டீன், வைட்டமின் பி, வைட்டமின் சி போன்ற சத்துப்பொருட்கள் அடங்கி இருக்கிறது. உடலுக்கு வலிமையும், பொலிவும் கொடுக்கும் மாம்பழத்தில் செரிமானத்தைத் தூண்டும் சக்தியும் மிகுந்திருக்கிறது. இதனால் மாம்பழங்களை பல்வேறு தரப்பினரும் விரும்பி ருசிக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மாம்பழத்திற்கு தனிச்சுவை இருப்பதாக கூறப்படுவதால், இங்குள்ள மாம்பழத்திற்கு ஏகப்பட்ட கிராக்கி. இங்கு விளையும் சுவை மிகுந்த செங்கவரிக்காய் உள்ளிட்ட மாம்பழங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்கும் மாம்பழ சீசன், ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கிறது. குமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் இத்தகைய மாமரங்கள் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.

மாமரங்கள் தனியாக சாகுபடி செய்யப்படுவதுடன், தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மாங்காய் விளைச்சல் இருக்கிறது. கோடைகால மாம்பழ சீசனைக் காட்டிலும், இந்த இடைப்பருவக் காய்ப்பின்போது வருவாய் அதிகமாக கிடைக்கிறது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்து நகரை சேர்ந்தவரும், நாகர்கோவில் மாநகராட்சி தலைவருமான ஜவகர் என்பவரும் தனது விவசாய நிலத்தில் தென்னை மரங்களுக்கு இடையே பல்வேறு வகையான மாமரங்களை நடவு செய்து, கோடைகாலம் மற்றும் இடைக்காலத்தில் மாம்பழங்கள் மூலம் வருமானம் பார்த்து வருகிறார். இவரது விவசாய நிலம் அமைந்துள்ள ராஜாவூர் உடன்பாறைகுளம் பகுதிக்கு சென்றோம். நம்மை வரவேற்று பேசத்தொடங்கினார்.

“கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் உள்ள ராஜாவூர்தான் எங்கள் சொந்த ஊர். கடந்த சில வருடத்திற்கு முன்பு குழந்தைகள் படிப்புக்காக நாகர்கோவில் கிறிஸ்து நகரில் குடியேறினேன். எனது சொந்த ஊரில் இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் நமக்குப் பலன் அளிக்கும் பழ மரங்களைப் பயிரிடலாம் என முடிவு செய்தேன். அதன்படி பல்வேறு பழ மரங்களைச் சாகுபடி செய்திருக்கிறேன். அரசியலில் தீவிரமாக இயங்கி வருகிறேன். அதேசமயம் விவசாயத்தையும் விட்டு விடாமல் பார்த்து வருகிறேன். கடந்த 10 வருடத்திற்கு முன்பு எனது நிலத்தில் 200 நெட்டை குட்டை ரகம் மற்றும் நாட்டு ரக தென்னங்கன்றுகளை நடவு செய்தேன். அதனுடன் காலியாக உள்ள இடத்தில் 100 மாமரக் கன்றுகளை நடவு செய்தேன். இங்கு பங்கனப்பள்ளி, அல்போன்சா, சப்போட்டா, கிளிமூக்கு, ரொமேனியா, காளப்பாடி உள்ளிட்ட ரக மாமரங்கள் இருக்கின்றன. தற்போது மா மரங்களில் இருந்து மகசூல் கிடைத்து வருகிறது. காளப்பாடி மற்றும் அல்போன்சா மரங்களில் குமரி மாவட்டத்தில் மட்டும் இடைப்பருவ சீசனான அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மாங்காய் கிடைத்து வருகிறது.

எனது தோட்டத்தைச் சுற்றிலும் 100 தேக்கு மரக் கன்றுகளையும் நடவு செய்திருக்கிறேன். பேச்சிப்பாறை அணையில் இருந்து தோவாளை வாய்க்கால் மூலம் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வருகிறது. அதைப் பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் எங்கள் நிலத்திற்கு அருகில் ராமச்சந்திரன் குளம் என்ற ஒரு குளமும் இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கோடைகாலத்தில் தண்ணீர் கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆழ்துளைக் கிணறு அமைத்திருக்கிறேன். அதனுடன் விவசாய நிலம் முழுவதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் குழாய்களை அமைத்திருக்கிறேன். கோடைகாலத்தில் மாதம் இருமுறை தண்ணீர் பாய்ச்சுவோம். வாய்க்காலில் இருந்து தண்ணீர் கிடைக்கும்போது மாதத்திற்கு ஒருமுறை ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் விடுவோம்.

நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை, மா, தேக்கு மரங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை சாம்பலையும் மாட்டுச்சாணத்தையும் உரமாக போடுவோம். மேலும் நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உரத்தையும் மரங்களுக்கு வைக்கிறேன். தென்னை மரங்களைச் சுற்றி 6 மாதங்களுக்கு ஒருமுறை ப வடிவில் குழியெடுத்து டிஏபி, பொட்டாஷ், யூரியா, சல்பேட், சூப்பர் பாஸ்பேட் ஆகிய உரங்களைக் கலந்து போடுவோம். அதன்மேல் மண்ணைப் போட்டு மூடி மேலே சாம்பல் தெளிப்போம். சாம்பல் தெளிப்பதால் மண் புழுதியாக மாறி நிலம் வளம் மிக்கதாக மாறும். இந்த உரம் மாமரங்களுக்கும் பலனிக்கும்.

தென்னையில் பூச்சி நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டா பாஸ் மருந்தை டேங்குக்கு 50 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்போம். மாமரங்களில் ஒருவிதமான சிறிய பூச்சிகள் பூ பூக்கும் சமயத்தில் பெருகி, பூக்களை வெள்ளை ஆக்கும். இதனால் விளைச்சல் பாதிக்கும். இதைக் கட்டுப்படுத்த வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு மருந்து தெளிப்போம். இது தவிர பெரிய அளவிலான பராமரிப்பு வேலைகள் இருக்காது.பராமரிப்பு வேலைகள் அனைத்தும் எனது உறவினரான ஜார்ஜ் என்பவரது மேற்பார்வையில் நடந்து வருகிறது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிலத்திற்கு வந்து பார்வையிடுவேன். அரசியலில் பரபரப்பாக இருக்கிறோம். அவ்வப்போது எங்காவது செல்ல வேண்டியிருக்கும். இந்த விளைநிலத்திற்கு வந்து செல்லும்போது மன அமைதி கிடைக்கிறது. விளைநிலத்துடன் ஒரு சிறிய வீட்டையும் கட்டி இருக்கிறேன். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வந்து விவசாய நிலத்தில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறோம்.

எனது விவசாய நிலத்தில் வருடத்திற்கு உரச்செலவுகள் ரூ.50 ஆயிரம் வரை ஆகும். தொழிலாளர்களுக்கு என ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து வருகிறேன். ஆனால் வருடத்திற்கு 6 முறை தென்னையில் இருந்து மகசூல் கிடைத்து வருகிறது. ஒரு சீசனில் ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். மாங்காய்களை மொத்தமாக வியாபாரிக்கு கொடுத்து விடுவேன். கடந்த வருடம் மாங்காய்கள் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஆனால் இந்த வருடம் மாமரங்கள் பூக்கும் பருவத்தில் மழை பெய்ததால், பூக்கள் உதிர்ந்துவிட்டன. தற்போது குறைவான அளவில்தான் மகசூல் கிடைக்கிறது. இதனால் வியாபாரிகளுக்கு நாங்கள் மாங்காய்களை தரவில்லை. எங்களது நிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களைக் கொண்டே மாங்காய்களை விற்பனை செய்கிறோம். மேலும் உறவினர்கள், தொழிலாளர்கள், நண்பர்களுக்கும் கொடுக்கிறோம்.

எனது தோட்டத்தில் சாகுபடி செய்துள்ள தென்னை மரங்கள் நெட்டை குட்டை ரகம் என்பதால், மகசூல் அதிகமாக இருக்காது. ஆனால் வருடக் கணக்கில் மகசூல் கிடைக்கும். இதனைத் தவிர விவசாய நிலத்தைச் சுற்றி தேக்கு சாகுபடி செய்திருப்பதால் 25 வருடத்திற்குப் பிறகு நல்ல வருமானம் கிடைக்கும். எனது தோட்டத்தில் நாவல், கொய்யா, வாட்டர் ஆப்பிள் உள்ளிட்ட மரக்கன்றுகளை எனது சொந்த பயன்பாட்டிற்காக சாகுபடி செய்திருக்கிறேன். இதன்மூலம் நல்ல ஆரோக்கியமான பழங்கள் எங்கள் குடும்பத்திற்குக் கிடைக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
ஜவகர்: 98421 22428.

You may also like

Leave a Comment

eight − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi