சென்னை: நிரப்பப்படாத 83 எம்.பி.பி.எஸ். இடங்களை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் 83 இடங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளின் படி அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட 800க்கும் அதிகமான இடங்களில் 83 மருத்துவ இடங்கள் நிரப்பபடாமலே இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 4 கட்ட கலந்தாய்வுகள் நிறைவடைந்த பிறகும் 83 மருத்துவ இடங்கள் நிரப்பபடாமல் இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த 83 மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தும் அவை நிரப்பப்படாத காரணத்தினால் ஏழை, எளிய மாணவர்கள் பலர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவம் படிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப் படாமல் இருக்கும் காலியிடங்களைத் திரும்ப வழங்க மாட்டோம் என உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவற்றை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று ஒன்றிய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாட்டிற்கான 83 மருத்துவ இடங்கள் மீண்டும் கிடைப்பதை உறுதி செய்வதோடு, வரும் காலங்களில் இதுபோன்று நிரப்பபடாமல் இருக்கும் மருத்துவ இடங்களை முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.