Friday, May 17, 2024
Home » திருமண வரம் தந்தருளும் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள்..!!

திருமண வரம் தந்தருளும் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள்..!!

by Kalaivani Saravanan

தமிழகத்தில் கல்யாண வரம் தரும் திருத்தலங்கள் ஏராளம். திருமணம் வரம் தரும் சைவக் கோயில்களும் உண்டு. வைணவக் கோயில்களும் இருக்கின்றன. வைணவ ஆலயங்களில், திருமண யோகத்தைத் தந்தருளும் திருத்தலமாகப் போற்றப்படுகிறது திருவிடந்தை. மகாவிஷ்ணுவின் திருவருளால், மங்கல காரியங்கள் சுபமாக நடந்தேறக் கூடிய க்ஷேத்திரம் என்று திருவிடந்தை திருத்தல ஸ்தல புராணம் விவரிகிறது. திருவிடந்தை பெருமாளின் திருவருளால், விரைவில் திருமண வரம் கைகூடும். திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக பழைய மாலையுடன் மீண்டும் தலத்துக்கு வந்து பெருமாளை ஸேவித்து அர்ச்சனை செய்து வழிபடும் பக்தர்களை இங்கே தினந்தோறும் பார்க்கலாம்.

அதுமட்டுமா? ராகு கேது என்கிற சாயா கிரகங்களின் சர்ப்ப தோஷங்களை நீக்கி, கல்யாண மாலையைத் தந்தருளுகிறார் திருவிடந்தை பெருமாள் என்கிறார் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர். சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவிடந்தை. கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டியே அமைந்திருக்கும் அற்புதமான ஆலயம். 108 வைணவ திவ்ய தேசங்களில் இந்த க்ஷேத்திரமும் ஒன்று! பல பெருமைகளைக் கொண்ட வைஷ்ணவத் திருத்தலம் இது. இந்தத் தலத்தை, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்து அருளியிருக்கிறார்!

அசுர வம்சத்தில் உதித்த பலி மன்னன், சிறப்பான முறையில் அரசாட்சி புரிந்து வந்தான். இவன், மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூன்று அசுரர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு அவர்களை வென்றான். ஆனாலும் அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்குவதற்காகவும் தோஷங்கள் களைவதற்காகவும் திருமால் குடிகொண்டிருக்கும் இந்தத் தலத்துக்கு வந்து, இங்கேயுள்ள வராக தீர்த்தக்கரையில் அமர்ந்து கடும் தவமிருந்தான். இதன் பலனாக, ஆதி வராக மூர்த்தியின் தரிசனமும் திருவருளும் கிடைக்கப் பெற்றான் என விவரிக்கிறது ஸ்தல புராணம்!

இங்கு வந்து தவமியற்றிய காலவ மகரிஷியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட மகாவிஷ்ணு, பிரம்மச்சாரியாக வந்து அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒரு பெண் எனும் விகிதத்தில் திருமணம் புரிந்துகொண்டார் என்றும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது. கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக்கி, தன் இடது பக்கத் தொடையில் அமர்த்திக் கொண்டு, தம் தேவி மூலமாக இந்த உலகுக்கு எம்பெருமாள் சரம ஸ்லோகத்தை அருளினார்.

தினம் ஒரு திருமணம் என பெருமாள் நிகழ்த்திய திருத்தலம் என்பதாலும் தினமும் சுபகாரியங்களை நடத்தி அருளிய புண்ணிய க்ஷேத்திரம் என்பதாலும், பெருமாளுக்கு (உற்சவர்) நித்ய கல்யாணப் பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. அவரின் இடது பக்கத்தில் அருளும் தாயாருக்கு ஸ்ரீஅகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் அமைந்தது. இந்த ஆலயத்தில் தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார் கோமளவல்லித் தாயார். ‘திரு’ வை அதாவது லட்சுமியை தன் இடபாகத்தில், பெருமாள் கொண்டுள்ளதால் ’திருஇடஎந்தை’ என்று பெயர் அமைந்து, அதுவே பின்னாளில், திருவிடந்தை என மருவியது.

திருவிடந்தை புண்ணிய க்ஷேத்திரத்தின் தீர்த்தங்களும் விசேஷமானவை. சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை ஸேவித்தால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும். மார்கழியில் ஸ்ரீரங்கநாத தீர்த்தத்தில் நீராடி பெருமாளை தரிசித்துப் பிரார்த்தித்தால், நாம் நினைத்த காரியங்கள், தொழில்கள் அனைத்தும் சிறப்புற நடக்கும். மாசி மாதத்தில் இங்கு வந்து, இங்கேயுள்ள வராக தீர்த்தத்தில் நீராடி பெருமாளை தரிசித்து வேண்டிக்கொண்டால், பரமபதம் நிச்சயம். இது, ஆதிவராகப் பெருமாள், பலி மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்கு.

இங்கு ஆதிசேஷன், தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியை தாங்கி சேவை செய்கிறார் என்பது வேறெங்கும் தரிசிக்க அரிதானது. ஆகவே, இந்தப் பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது எனப்படும் சாயா கிரகங்களின் தோஷங்கள் நீங்கும்; சர்ப்ப தோஷங்களும் கால சர்ப்ப தோஷங்களும் விலகும். கல்யாண வரம் கைகூடும். உற்சவர் நித்ய கல்யாணப் பெருமாள், கோமளவல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலேயே தாடையில் திருஷ்டிப் பொட்டு இருப்பதைத் தரிசிக்கலாம். இங்கு வந்து ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து பெருமாளையும் தாயாரையும் ஸேவித்து வேண்டிக்கொண்டால், நமக்கு ஏற்பட்ட கண்திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம்!

திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து கல்யாண தீர்த்தத்தில் குளித்துவிட்டு, தேங்காய், பழம், இரண்டு மாலைகள் மற்றும் வெற்றிலைப் பாக்குடன் பெருமாளைத் தரிசித்து அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். பின்னர், சந்நிதியில் பிரசாதமாகத் தரப்படும் மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு பிராகாரத்தை ஒன்பது முறை வலம் வருகிறார்கள். அதையடுத்து, கொடிமரம் அருகில் வடக்கு நோக்கி நமஸ்கரித்துவிட்டு, மாலையை வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.

நித்ய கல்யாண பெருமாளின் திருவருளால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தாலி வரம் கிடைக்கப் பெறுவார்கள். திருமணம் இனிதே நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக பழைய மாலையுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். திருமண வரம் தந்தருளும் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாளை ஸேவிப்போம். நம் இல்லத்திலும் யாருக்காவது திருமண தடைகள் இருந்தால் அது நீங்கி கெட்டிமேளச் சத்தம் கேட்கட்டும்.

You may also like

Leave a Comment

twelve + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi