மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அரசர் கோயில் கிராமத்தை சேர்ந்தவர் மதுரை வீரன் (40). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலை கல்லூரியில் வரலாற்று துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தொல்லியல் மற்றும் தொல்பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர். கடந்த 13 ஆண்டுகளாக பாலாற்று படுகை பகுதியில் கிடைக்கும் தொல்பொருள்களை சேகரித்து மாணவர்களுக்கு பாடமும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இவரது தேடலில், அரசர் கோயில், பாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலாற்று படுகையில் ஏராளமான தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆய்வு மேற்கொண்டு கற்கால ஆயுதங்கள் பலவற்றை கண்டுபிடித்துள்ளார்.
மேலும் வல்லிபுரம்- ஈசூர் பாலாற்று படுகையில், ராஜராஜ சோழன் வெளியிடப்பட்ட 2 செப்பு நாணயங்கள் மற்றும் முத்திரை பதித்த வெள்ளி நாணயம் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெருங்கற்கால மனிதர்கள் விவசாயம் செய்வதற்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்திய கற்கோடரி உள்ளிட்ட கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று முழுமையான கருப்பு – சிவப்பு பானை, வட்ட சில்லுக்கள், இரும்பு கத்திகள், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான செங்கல்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் வடிவேலும் உதவி வருகிறார். தற்போது பல அரிய பொருட்கள் கிடைத்திருப்பதாகவும் கீழடியில் கிடைத்த கண்மை (அஞ்சனம்) கண்கள் வசீகரமாக கண் இமைகளை தீட்டும் பழக்கம் சங்ககால பெண்களிடையே காணப்பட்டது.
கண்மை கண்களை வசீகரமாக்க பயன்படும் ஒப்பனை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏராளமான மணிகள், ஆண் பெண் அணியும் மெட்டிகள், காதணிகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றையும் இந்த ஆசிரியர் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். பாலாற்றின் மேற்பரப்பில் செய்யும் கள ஆய்வின் போது பல அரிய பொருட்கள் கிடைப்பதாகவும், முறையாக திட்டமிட்டு அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் பாலாற்று நாகரீகமும் இந்த உலகத்தில் தெரியவரும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. அரசு இந்த பாலாற்றப்படுகையில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையாக உள்ளது.