உத்திரமேரூர்: 2022-23ம் ஆண்டு பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கையில் பள்ளி கல்வி துறை அமைச்சரால், ‘கல்வி இணை செயல்பாடுகளில், மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உலக மற்றும் தேசிய அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படும்’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி 2022-23ம் கல்வி ஆண்டில், கலை இலக்கிய போட்டிகளில், மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை மலேசியா வெளிநாடு கல்வி சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, மேல் படப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி ஆதவி, உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி நிரஞ்சனா மற்றும் உத்திரமேரூர் இல்லம் தேடி கல்வி திட்ட வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் உசேன் ஆகிய 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி சுற்றுலா சென்று வந்துள்ளனர். முதல் முறை விமான பயணம், விண்ணை முட்டும் வானுயர்ந்த கட்டிடங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், உலகத்தரம் பிடித்த மலையா பல்கலைக்கழகம், மலைய தமிழ் பள்ளி, மீன் அருங்காட்சியகம், டைனோசர் பார்க், இரட்டை கோபுரங்கள், கே.எல்.டவர், தேசிய அறிவியல் மையம், நட்சத்திர விடுதிகளில் தங்குமிடம், தரமான அறுசுவை உணவு மற்றும் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல் என மிக சிறப்பான கல்வி சுற்றுலாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பாராட்டுக்குரியது.
இது மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரு சாதனை பயணமாகவே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பான இக்கல்வி சுற்றுலாவை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வி துறைக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.