போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறை 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று மூத்த தலைவர் திக்விஜய்சிங் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பா.ஜ 109 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் கமல்நாத் முதல்வரானார். ஆனால் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 22 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் மீண்டும் பா.ஜ ஆட்சி அமைந்தது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இதுபற்றி மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது: ம.பி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் நல்ல வெற்றியை பெறும். 2018ல் கிடைத்த சீட் எண்ணிக்கையை விட ஒன்றரை மடங்கு சிறப்பாக எங்களுக்கு ஆதரவு உள்ளது. 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களுக்கு மேல் பெற்றாலும் ஆச்சரியப்பட மாட்டேன். பா.ஜவின் கோட்டை என்று கருதப்படும் தொகுதிகளில் கூட நாங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவோம் என்று நம்புகிறோம். நாங்கள் 2018ஐ விட பலமாக இருக்கிறோம். எங்கள் தவறுகளை நாங்கள் சரிசெய்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.