Wednesday, May 15, 2024
Home » மனதை பிரகாசத்தால் நிரப்புவோம்!

மனதை பிரகாசத்தால் நிரப்புவோம்!

by Lavanya

(பகவத்கீதை உரை)

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத்
தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்.

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை
போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன்.

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்
வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன்.

துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்.’’

– மகாகவி பாரதியார் தன் சரணாகதி பக்தியை, பொதுநல நோக்கில் வெளிப்படுத்துகிறார்.வைணவக் கோயில்களில் பக்தர்களின் தலைமீது சடாரி சாத்துவார்கள். கிரீடம் போன்ற இந்த அமைப்பு ராஜ அலங்காரமோ, சம்பிரதாயமோ இல்லை. ஆனால், இறைவனின் திருவடிகள் பதிக்கப்பெற்ற அந்த சடாரியைத் தன் சிரசின்மீது தாங்கு பவர், தான் அந்த இறைவனுக்கு அடிமை, அவரிடம்தான் சரணாகதியடைகிறோம் என்ற உணர்வைப் பெறுகிறார். இதேபோல, சில சிவத்தலங்களிலும் சடாரி சாத்தும் வழக்கம் இருக்கிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன்கோயில் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

இன்றும்கூட நீலகிரி மலையில் தோடர் இனத்தவர்கள், பெரியவர்களின் பாத துளியைத் தம் தலையில் ஏற்பது வழக்கமாக இருக்கிறது. வயதில் சிறியவர் மண்டியிட்டு, தலைகுனிந்து அமர்ந்திருக்க, எதிரே நிற்கும் பெரியவர் தன் வலது காலைத் தூக்கி, கால் கட்டை விரலால் வணங்குபவரின் தலையைத் தொடுகிறார். ஆன்மிக, சமுதாய சம்பிரதாயத்தைப் போலவே குருவின் பாதங்களைப் பற்றிக்கொண்டால், நாம் நம் வாழ்க்கையில் உயர்வடைய அவர் நல்லதொரு வழிகாட்டுவார் என்பது கிருஷ்ணனின் அறிவுரை.

பல சமயங்களில் குருவானவர் மௌனமாகவே ‘பேசி’ நம் குழப்பங்களுக்குத் தெளிவு அருள்வார்; நம் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிப்பார். இறைவன் தட்சிணாமூர்த்தி அத்தகையதொரு மௌனகுரு. அவர் காலடியில் சனகாதி முனிவர்கள் அமர்ந்து கண்கள் மூடி, அவருடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மௌனத்தால் எந்த பதிலை நாம் புரிந்து கொண்டு விடமுடியும்? நம் நடைமுறை வாழ்க்கையில், நம் அனுபவங்களைக் கொண்டே இந்தத் தத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

மிகப் பெரிய பிரச்னையாக நாம் கருதியிருக்கும் ஓர் அசம்பாவிதம் நம் முன் பூதாகரமாக நின்றிருப்பதாக வைத்துக்கொள்வோம். உடனே பதற்றத்துடன் எதையாவது பேசியோ அல்லது எதையாவது செய்தோ சூழ்நிலையைக் கடினமாக்கிக்கொள்வது பலருடைய வழக்கமாக இருக்கிறது. ஆனால், அதேசமயம், மௌனமாகி, எந்த உணர்வுக்கும் அடிமையாகாமல், அந்தச் சூழலிலிருந்து மனதை விலக்கினோமானால் நாமே எதிர்பார்க்காதவகையில் நல்லதொரு தீர்வு நமக்குக் கிட்டும். தட்சிணாமூர்த்தி – சனகாதி முனிவர்கள் சொல்லும் தத்துவம் இதுதான்.

பகவான் ரமணமகரிஷியும் இந்த மௌன பரிபாஷையில் லயித்திருப்பதைப் பலர் பார்த்திருக்கிறார்கள், அனுபவித்திருக்கிறார்கள், தெளிவடைந்திருக்கிறார்கள். கேள்வி கேட்பவன் சீடன், பதிலளிப்பவர் குரு என்ற மாணவ – ஆசிரியர் இலக்கணத்தை மீறிய பக்குவம் இது. மகான் விவேகானந்தர், பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைத் தன் குருவாக ஏற்று, அவருடைய வழிகாட்டலில், காளிமாதாவையே தரிசித்திருக்கிறார்! பரமஹம்ஸர் இவ்வாறு கூறுகிறார்: ‘‘தனது குருவை கேவலம் மனுஷ்யராகக் கருதுபவனுக்குப் பிரார்த்தனையாலும், பக்தியாலும் என்ன பலன் உண்டாகக்கூடும்? குருவை கேவலம் மனுஷ்யர் என்று அவன் கருதக் கூடாது.

ஈஸ்வரனைக் காண்பதற்கு முன்னால் அந்த திவ்ய தரிசனத்தின் முதல் அங்கமாகக் குருவைத்தான் சிஷ்யன் காண்கிறான். பிறகு அந்த குருவே ஈஸ்வரனாக மாறி ஈஸ்வர ஸ்வரூபத்தைக் காட்டுகிறார். அப்பால் ஈஸ்வரரும், குருவும் ஒருவரேயென்று சிஷ்யன் தெரிந்துகொள்கிறான். அவன் விரும்பிய வரங்களையெல்லாம் திவ்ய குரு அருள்வார். இது மட்டுமா, அவனை பிரம்ம நிர்வாணமாகிய பரமானந்த சுகத்துக்கும் அழைத்துச் செல்வார். அன்றி, பக்தன் – ஈஸ்வரன் என்ற சம்பந்தமுள்ள துவைத நிலைமையில் அவன் இருக்க வேண்டினும் அங்ஙனமே இருக்கலாம். சிஷ்யன் எதைக் கேட்டாலும் குரு அதை நிச்சயமாகத் தருகிறார்.

‘‘மனுஷ்ய குருவானவர் மஹாமந்திரத்தை உனது காதில் மட்டும் உபதேசிக்கிறார். தெய்வ குருவோ உன் ஆன்மாவுக்குள் சைதன்யத்தையே செலுத்துகிறார். ஈஸ்வரனுடைய ரகசியங்களை அறிய வேண்டுமென்ற தீவிர புத்தி உனக்கு இருக்குமானால், அவ்வீஸ்வரனே சத்குரு ஒருவரை உன்னிடம் அனுப்புவார். பக்தனே, குருவைத் தேட வேண்டிய விஷயத்தில் உனக்குக் கவலையே வேண்டாம்.’’ இது இவ்வாறிருக்க, இன்றைய இயல்பு வாழ்க்கையில், குரு – சிஷ்யன் இருவரில் எச்சரிக்கையாக செயல்படவேண்டியவர் குருதான்.

ஆமாம், அவர் தன்னை ‘குரு’ என்று தன் மனதுக்குள் உயர்த்திக் கொண்டாரானால், அந்த கணத்திலேயே அவர் அந்தத் தகுதியை இழந்துவிடுகிறார். ஏனென்றால், அப்போது அவருக்குள் தனக்கு ‘எல்லாம் தெரியும்’ என்ற அகங்காரம் துளிர்விட ஆரம்பித்துவிடும். தன் மாணவனைத் தெளிவு மிக்கவனாக ஆக்க வேண்டியதே அவருடைய ஒரே, தலையாய கடமை என்பதை அவர் உணர்ந்து கொண்டாரானால் இந்த உயர்வு நவிற்சிக்கு வாய்ப்பு இருக்காது.

இப்படி ஒரு துர்பாக்கிய நிலை யாதவ பிரகாசர் என்ற குருவிற்கு வந்தது. இவர் ராமானுஜரின் ஆசான். தான் கற்றுக் கொடுத்ததைவிடவும் கூடுதலாக அறிந்து கொண்டதோடு, கூடுதல் பிரகாசம் மிளிர ராமானுஜர் ஜொலித்ததை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தன் சீடன் தன்னையே மிஞ்சுவதா, எந்த மன்றத்திலும், எந்த ஆடுகளத்திலும் தன்னைப் பின்னிருத்தி தன் திறமையால் தான் முன் நிற்கிறானே என்றெல்லாம் பொறாமையால் தீய்ந்தார் யாதவ பிரகாசர்.

ஒரு கட்டத்தில், தன்னை அவன் மிஞ்சிவிடாமல் இருக்க, தன்னுடைய அந்தச் சீடனைக் கொல்வதுதான் ஒரே வழி என்ற வன்ம சிகரத்தை எட்டினார் அந்த ஆசான். அதற்காக ராமானுஜரை அழைத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றார். அங்கே நதியில் சீடரை அமிழ்த்திக் கொன்றுவிடுவதாக ஆசானின் திட்டம். ஆனால் உடன் வந்த இன்னொரு மாணவனும், தன் சிற்றன்னையின் மகனுமான கோவிந்தன் மூலமாக அந்த சதித் திட்டத்தைத் தெரிந்து கொண்ட ராமானுஜர், ஆசானின் பார்வையிலிருந்து தப்பி விந்திய மலைக் காட்டில் வழிமாறிச் சென்றார். பெருமாள், தாயாரோடு ஒரு வேடுவ தம்பதியாக வந்து அவரைத் தடுத்தாட்கொண்டு காஞ்சிபுரத்துக்கு வழி நடத்திக் கொண்டு சேர்த்தார்கள்.

இந்த நிலைமை ஒரு குருவுக்கு எப்படி வந்தது? அவருக்கு தன் சீடன் மேன்மை யடைவது பிடிக்கவில்லை. அதாவது சீடனைத் தன் அடிமையாக, தனக்கு ஏவல் செய்யும் வேலைக்காரனாகவே அவர் பாவித்தார். தனக்குத் தொண்டாற்றும் ஓர் அடிமை தன்னையும் விஞ்சுவதாவது! இது ஆசார்ய குணமே அல்ல. அதாவது அந்த ஆசான் பக்குவம் பெறவில்லை; ஞானம் அடையவில்லை. தன் சீடன் சான்றோன் என்று கேட்கும் குரு, எந்நோற்றான் கொல் என்றுதான் ஊரார் பாராட்ட வேண்டுமே தவிர, அந்த உயர்வு கண்டு குரு பொறாமைப்படக் கூடாது.

யஜ்ஞாத்வா ந புனர்மோஹமேவம் யாஸ்யஸி
பாண்டவ
யேன பூதான்யசேஷேண த்ரக்ஷ்யஸ்யாத்மன்
யதோ மயி (4:35)

‘‘இந்த ஞானத்தை அடைந்துவிட்ட பிறகு, நீ உனக்குள்ளிருக்கும் மோகத்தை விரட்டிவிடுவாய். இந்த ஒரு நிர்ச்சலனமான நிலையில் உன் அறிவின் ஆதாரத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும். அந்த ஆதாரமே நான் என்பதை நீ தெரிந்து கொள்வாய். உடனே நீ என்னில் ஒன்றி விடுவாய். சச்சிதானந்த பூரணத்துவத்தைப் பெற்றிடுவாய்.’’ஞானம் நம்மை வந்தடைகிறது என்றால், அது சூரியப் பிரகாசமாய் ஒளிர்ந்து நம்மிடம் இருக்கும் இருளை ஓட்டுகிறது என்று பொருள். தங்கள் அறைகளை நிரப்பவேண்டும் என்ற நிபந்தனையோடு தன் இரு மகன்களுக்கும் கொஞ்சம் பொருள் கொடுத்தான் ஒரு தந்தை. ‘நிரப்புவது’ என்பதை மூத்த மகன் அளவீடாக எடுத்துக்கொண்டான்.

அந்த வார்த்தையை அப்படியே அர்த்தம் பண்ணிக் கொண்டான். கூடவே தனக்குத் தரப்பட்டிருக்கும் பொருளில் எதை வாங்கினால் தன் அறையை நிரப்ப முடியும், எவ்வளவு பணம் மிச்சம் பிடிக்கவும் முடியும் என்றும் யோசித்தான். முடிவாக விலை மலிவாக இருக்கக்கூடிய வைக்கோலை வாங்குவது என்றும், அதை அறை முழுவதும், ஒரு இண்டு, இடுக்கு விடாமல் அடைத்து வைப்பது என்றும் திட்டமிட்டான். ஜன்னல் கதவு வழியாகக் கொஞ்சம் வெளியே நீட்டிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை, அது தனக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைக்குக் கூடுதல் சலுகை தந்தது போலாகும் என்றும் நினைத்துக்கொண்டான்.

அதன்படியே அறை முழுவதும் வைக்கோலைப் போட்டு அடைத்து நிரப்பி, அந்த செலவு போக மிச்சப்படுத்திய காசையும் கொண்டுபோய் தந்தையிடம் கொடுத்து விவரத்தைச் சொன்னான்.
இரண்டாவது மகன் கொஞ்சம் யோசித்தான். ஒரு அறையில் பொருட்களை நிரப்புவது என்றால், அந்தப் பொருட்களையும், அது பிடித்துக்கொண்டிருக்கும் இடத்தைத் தவிர மீதமுள்ள அறைப் பகுதியையும் உபயோகத்திற்கானவையாக மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

இவனைப் பொறுத்தவரை நிரப்புவது என்பது அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். இந்த கர்மத்தைத்தான் சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும். ஏனோ, தானோவென்று கடமையாற்றக் கூடாது என்று ஆழ்ந்து சிந்தித்தான். ஆகவே ஒரு விளக்கை வாங்கி வந்தான். திரி பொருத்தி தீபமாய் ஏற்றினான். பளிச்சென்று ஒளிர்ந்த விளக்கு அறை முழுவதும் பிரகாசமாய் பரவியது. அந்த அறையே புதுப் பொலிவு பூண்டது.

இரண்டாவது மகன் செயல்பட்டது ஒரு ஞானியின் கோணத்தில். தனக்கென்று எந்த விருப்பு, வெறுப்பையும் கொள்ளாமல், எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்காமல் வினையாற்றும்போதுதான் நேர்மறையாக அந்தச் செயல் நிறைவேறும். அறையை நிரப்ப வேண்டும் என்பதில் அவன் ஆர்வம் கொள்ளவில்லை. எதனால் நிரப்புவது என்பதைத்தான் யோசித்தான். ஒளி மிகுந்த அவனுடைய மனம் விளக்கைச் சிபாரிசு செய்தது. அதை அவன் அப்படியே ஏற்றுக்கொண்டான். இத்தகைய ஆக்கபூர்வமான சிந்தனையே அவன் ஒரு ஞானி என்பதைக் காட்டுகிறது. ஒளியால் நிரம்பிய அந்த அறை அவனுக்கு மட்டுமல்லாமல், அந்த அறையை யார் பயன்படுத்தினாலும் அவருக்கும் பயனாகும் என்ற பொதுநோக்கு சிந்தனை அவனுடையது.

அடைப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்திருந்த மூத்த மகன் அந்த எண்ணத்தை நிறைவேற்றி விட்டான்தான், அனால். அதனால் அவனுக்கே எந்தப் பயனும் இல்லை. ஆமாம், அவனாலும் அந்த அறைக்குள் போக முடியாது, தங்க முடியாது! நிரப்புவதாகிய எண்ணத்தை இவன் மோகித்தான். அதனால் வேறு எந்த ஆக்கபூர்வமான எண்ணமும் தோன்றவில்லை. சொன்ன காரியத்தை முடித்துவிட்டேன் என்ற பெருமையை அடைய இவன் முற்பட்டதால், அந்த விளம்பரத்தை மோகித்ததால், இவன், அடுத்து எந்த யோசனையும் தோன்றாமல், அந்த எண்ணத்தோடேயே தேங்கிவிட்டான்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

eight − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi