‘‘மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆப்பு வைத்துவிடுமோ தேர்தல் ரிசல்ட் என்ற பயத்தில் இருக்கிறாராமே கடலோர மாவட்ட மாஜி அமைச்சர்..’’ என பரபரப்புடனே ஓடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் சேலத்துக்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ சோகத்தில் இருப்பதாக அவரது ஆதரவாளர்களுக்குள் பரவலாக பேசிக்கிட்டாங்களாம்.. இதற்கான காரணம் தேனிக்காரர் அணியில் இருந்த மாஜி அமைச்சர் ஜெய என ஆரம்பிக்க கூடியவர் அணியில் இருந்து விலகி சேலத்துக்காரர் அணிக்கு திடீரென தாவிவிட்டாரு.. தொடர்ந்து தனது இரண்டாவது மகன் திருமண பத்திரிகை அழைப்பிதழ் கொடுப்பதற்காக சேலத்துக்காரர் வீட்டுக்கு சென்று இருந்தாராம்… அப்போது பத்திரிகையை பெற்றுக்கொண்ட சேலத்துக்காரர், கடலோர மாவட்டத்தில் இலைக்கட்சி ரொம்ப வீக்காக இருப்பதா மூத்த நிர்வாகிகளிடமிருந்து அடிக்கடி புகாராக வருது… இனி இதுபோல் புகார்கள் வரக்கூடாது. தேர்தல் ரிசல்ட்டுக்கு பின்னர் அதை சரி செய்துவிட வேண்டும்னு அவரிடம் சொல்லி அனுப்பி வைத்தாராம்… தொடர்ந்து மணியானவரை தொடர்பு கொண்ட சேலத்துக்காரர், உங்கள் இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் ஈகோ பிரச்னையை முதலில் மறந்து பத்திரிகை வைக்க வீடுதேடி வரும் அவரை வரவேற்று பத்திரிகையை வாங்கிக் கொள்ளுங்கள் என அதிரடியா உத்தரவு போட்டாராம்… இதனால் இந்த உத்தரவை மீற முடியாமல் வீடு தேடி சென்ற மாஜி அமைச்சரிடம் இருந்து பத்திரிகையை மணியானவர் பெற்றுக்கொண்டாராம்.. ஏற்கனவே தேர்தல் ரிசல்ட் டென்சனில் இருந்து வரும் மணியானவர் இப்படியே சென்றால் எதிர்காலத்தில் மாவட்ட செயலாளர் பதவி பறிபோய் விடுமோங்கிற பயத்தில் இருந்து வருவதாக அவரது ஆதரவாளர்களுக்குள் அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முகவர்கள் கூட்டத்தின்போதுகூட மாஜி அமைச்சர் ஒருவர் முக்கிய நிர்வாகிகளை புறக்கணித்து விட்டாராமே..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மக்களவை தொகுதியில் இலைக்கட்சியினர் சரியாக தேர்தல் வேலை செய்யவில்லை எனவும், குறிப்பிட்ட சில முக்கிய நிர்வாகிகள் விலை போய்விட்டதாகவும் பேச்சுகள் எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையிலேயே அதிமுக நிர்வாகிங்க தேர்தல் வேலையை முறையாக செய்யவில்லையாம்.. பெயரளவுக்கு நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ளும் சில நிர்வாகிகள் மட்டும் செயல்பட்டது வெட்ட வெளிச்சமாக தெரியவந்திருக்கு.. வெயிலூர், குயின்பேட்டை, மிஸ்டர் பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு தளபதி போல் வீரமான மாஜி அமைச்சர் இருந்து வருகிறாரு.. இவரும் வெயிலூர் மாவட்ட செயலாளரும் பாம்பும் கீரியும் போல் இருந்தாங்க.. ஆனால் இப்போ இருவரும் ஒரே காரில் பவனி வரும் அளவுக்கு அது அப்படியே தலைகீழா மாறிப்போச்சாம்.. எல்லாம் ரகசிய டீலிங்கை முடித்துக் கொண்டதுதான்னு பேசிக்கிறாங்க… இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக முகவர்கள் கூட்டத்தை முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்காமல் நடத்திட்டாங்களாம்.. இதனால் குட்டி சிவகாசியில் உள்ள முக்கிய நிர்வாகியும், வெயிலூரில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் தற்போது ஒதுங்கிக் கொண்டார்களாம்.. வீரமான மாஜி அமைச்சரும், மாவட்ட செயலாளரும் சேர்ந்து கூட்டத்தை முக்கிய நிர்வாகிங்க இல்லாமலேயே நடத்தி முடிச்சிட்டாங்க… கூட்டத்த முக்கிய நிர்வாகிங்க புறக்கணித்ததுதான் பேசும்பொருளாக மாறி இருக்காம்.. ஏற்கனவே வீரமானவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வரும் நிலையில் இப்போ மாவட்ட செயலாளருடன் சேர்ந்து போடும் ஆட்டம் அதிமுகவினர் இடையே பிளவை ஏற்படுத்திவிட்டதோன்னு ரத்தத்தின் ரத்தங்கள் உச் கொட்டுறாங்களாம்.. வேலூரில் இலை துளிர்வதற்கான சாத்தியங்கள் குறைந்து கொண்டே போகிறதுன்னு ரத்தத்தின் ரத்தங்கள் வேதனையில இருக்கிறாங்களாம்.. இந்த டாப்பிக் தான் இப்போ ஹாட்டா போயிட்டிருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குமரிக்கு போட்டியா முத்துமலையில் சேலத்து தலைவர் தியானத்தில் இறங்கிய கதை தெரியுமா?..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற தேர்தலின் ரிசல்ட் இன்று வெளியாகப்போகுது.. இதற்கிடையில சேலத்தில் முகாமிட்டிருக்கும் இலைக்கட்சியின் தலைவர் முத்துமலை முருகன் கோயிலில் திடீரென சாமி தரிசனம் செய்திருக்கிறாரு.. கடந்த ஒரு வாரமாகவே தலைவர் ரொம்பவும் மன உளைச்சலில் இருந்ததை கண்டுபிடித்த நிழலானவர், இந்த ஏற்பாட்டை செஞ்சிட்டாராம்.. அதன்படியே சிறப்பு வழிபாடு நடத்திய இலைக்கட்சியார், முருகனின் வயிற்று பகுதியில் உள்ள தியான மண்டபத்திற்கு சென்றிருக்காரு.. அங்கே அப்படியே அமர்ந்து ஒரு பதினைந்து நிமிடம் தியானம் பண்ணியிருக்காரு.. பிறகு முகமலர்ச்சியுடன் மண்டபத்திலிருந்து வெளியே வந்தவர், அப்படியே அன்னதானம் வழங்கியிருக்காரு..
ஆனா இதனை அவரது எதிர்கோஷ்டியை சேர்ந்தவங்க ரொம்பவே நையாண்டி செய்றாங்களாம்.. தியானம் என்பது தற்போது ஸ்டண்டாகி போச்சுங்க.. ஊரே நம்மை உடனே உத்துப்பாக்கணுமுன்னு விவேகானந்தர் மண்டபத்தில் ஒருவர் தியானம் செஞ்சாரு.. அதேபோல இலைக்கட்சி தலைவரும் தியானம் செஞ்சிருக்காரு. தியானமுன்னா மனதை ஒருநிலைப்படுத்துவது, ஆனால் சேலத்து தலைவரு தியானத்தில் கண்ணை மூடினால், தேர்தல் முடிவில் தேறுவோமா, கட்சியின் பதவி பறிபோயிடுமோ, கொடநாடு வழக்கு என்னாகுமோன்னுதான் சுத்தி சுத்தி வந்திருக்கும்.. இதையெல்லாம் வெளியே தெரிந்துவிடக் கூடாதுங்கறதுக்காக தியானத்தில் ஈடுபட்டிருக்காருன்னு சின்ன மம்மியோட அடிப்பொடிகள் சொல்றாங்க.. இந்த ரிசல்ட்டுதான் இலைக்கட்சிக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கப்போவதாகவும் உறுதியா நம்புறாங்கன்னா பாருங்களேன்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் பெரிய அளவில் நடக்க இருக்கிறதா சேதி வருதே.. உண்மைதானா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘உண்மையே தான்.. தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருகிற 6ம் தேதியுடன் முடிகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளார்களாம். அதில் காவல்துறையில் மாவட்ட அளவில் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐஏஎஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரை வருகிற 10ம் தேதிக்குள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாம். இந்த மாத இறுதியில் மானியக்கோரிக்கை நடைபெற உள்ளதால், அதற்கு ஏற்றார்போல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
குமரிக்கு போட்டியா முத்துமலையில் சேலத்து தலைவர் தியானம் இருந்ததின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
105