கேரளா: கேரளாவின் மலபுரத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து குடிநீர் கிணறுகளில் படர்ந்த டீசலை தீயிட்டு எரித்து தீயணைப்பு துறையினர் அழித்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரியாபுரம் பகுதியில் கடந்த மாதம் 18ம் தேதி டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது டேங்கரில் இருந்த டீசல் முழுவதும் வெளியேறி நீரூற்றுகள் மூலமாக அருகில் உள்ள குடிநீர் கிணறுகளில் கலந்தது. இதை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் கிணற்றுநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து கிணறுகளில் கலந்த டீசலை அகற்ற தீயணைப்பு துறையினர் திட்டமிட்டனர். இதற்காக காய்ந்த இலைச்சருகுகளில் தீயை பற்ற வைத்து கிணற்றில் வீசினர். இதில் டீசல் படர்ந்த பகுதிகளில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. பற்றி எறிந்த தீயில் கிணறுகளில் இருந்த டீசல் அழிந்து விட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். எனினும் கிணறுகளில் உள்ள நீரை மூன்று முறையாவது முற்றிலும் வெளியேற்றிவிட்டுத்தான் பயன்படுத்தமுடியும் என அவர்கள் கூறினர்.