Wednesday, May 15, 2024
Home » கர்மா எப்படி செயல்படுகிறது?

கர்மா எப்படி செயல்படுகிறது?

by Kalaivani Saravanan

நான் ஏன் இப்படி இருக்கின்றேன்? அவன் ஏன் என்னை விட நன்றாக இருக்கின்றான்? என்னை விட நன்றாக வாழ்கின்றானே? நான் நல்லது செய்தும் இப்படி நாயாய், பேயாய் அவதிப்படுகிறேனே? நான் முயற்சி செய்தும் எல்லாம் தள்ளிப்போகிறது. அவனுக்கு அதிர்ஷ்டம் வாசலில் வந்து நிற்கிறது?

இப்படிப்பட்ட புலம்பல்களை நாம் கேட்டிருக்கலாம். ஆனால், இதற்கு என்ன காரணம் என்பதை யாராலும் சொல்ல முடியாது. என்னதான் பரம்பரைக் காரணம் என்றாலும் கூட, திடமான விளக்கத்தை யாராலும் தரமுடியாது. ஆனால், நம்முடைய சமயச் சான்றோர்கள் இதற்கு ஒரே ஒரு காரணத் தைத்தான் சொல்லுகின்றார்கள். அதுதான் கர்மா. அது ஒவ்வொரு மனிதன் வாழ்வில் மட்டுமல்ல, ஒவ்வொரு உயிர்களின் பிறப்பிலும் தொடர்ந்து வந்து வேலை செய்கின்றது.

இரண்டு நாய்கள். ஒன்று சொறி சிரங்குகளுடன், ஒரு வேளை உணவுக்கு, படாத பாடுபட்டு, தெருவில் அலைகிறது. கல்லடிபடுகிறது. இன்னொரு நாய், விலையுயர்ந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்டு, ஆடி காரில், எஜமானரின் மடியில் அமர்ந்து போகிறது. என்ன காரணம்? ஒவ்வொரு உயிர்களும் செய்யும் செயல்களின் வினைத்தொகுதியே கர்மாவாக உருவெடுக்கிறது. அந்தச் செயல்களின் தொடர்ச்சியே நல்வினை தீவினை என்ற இரு வேறு நிலைகளில் அந்த உயிர்களை மட்டுமே தொடரும் கர்மாவின் பலன்களாகும்.

ஒரு உயிர் ஒரு செயலை செய்யும் பொழுது தான் அது கர்மாவாகிறது. ஒரு செயல் முடிந்த பின்பு தான் அது கர்மாவிற்கான கர்மப் பலன்களாக உருவாகிறது. ஒரு உயிர்எந்த செயல்களையுமே செய்யாமல், ஜட நிலையில் எந்த இயக்கமும் இன்றி இருக்கும் பொழுது அந்த உயிருக்கு எந்தவிதமான கர்மாவும் இல்லை, கர்ம பலன்களும் இல்லை. இதைப் புரிந்தவர்கள் தவயோகிகள்.

தங்கள் செயல்களை தாங்களே கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களுக்கு தங்களின் தவ வலிமையால் ஏற்பட்டு உள்ளதால் அவர்களைஎந்த கர்ம பந்தங்களும் தொடர்வதில்லை. கர்மா என்பது தமிழில் வினை அல்லது. வினைத் தொகுதி என்று பேசப்படுகிறது. இது எப்படி வேலை செய்யும் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கதை.

முன்பொரு காலத்தில் பத்மநாபர் என்ற பெயருடைய ஒரு செல்வந்தர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார். அவரும் அவருடைய மனைவியும் மிகவும் உயர்ந்த குணமுடையவர்கள். சுற்றுப்புறத்தில் வாழும் துறவிகளுக்கும் தவசிகளுக்கும் இலவசமாக உணவு வழங்கி வந்தனர்.

ஒருநாள், பத்மநாபரும் அவருடைய மனைவியாரும் வழக்கம் போல் உணவளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சற்று தூரத்தில் ஒரு வயதான துறவி பசியோடும் தாகத்தோடும் வருவதை பத்மநாபரின் மனைவி கண்டாள். அந்த துறவி வெகுதூரத்தில் இருந்து மிகவும் களைப்போடும் பசியோடும் வருவதை அவள் அறிந்தாள். கோடைக்காலம் என்பதால் சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் நீர்ப் பற்றாக்குறையால் அந்த துறவி மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார். உடனே பத்மநாபரின் மனைவி ஒரு பாத்திரத்தில் உணவையும் ஒரு கோப்பையில் பசும்பாலையும் நிரப்பி அந்த துறவியிடம் விரைந்து சென்றாள்.

‘‘துறவியாரே, நீங்கள் மிகவும் களைப்பாகவும் பசியோடும் காணப்படுகிறீர்கள். உங்களுக்காக நான் உணவு கொண்டு வந்திருக்கிறேன். அதோ அங்கே ஒரு குளம் உள்ளது. அங்கு சென்று உங்கள் கைகால்களை கழுவிக் கொள்ளலாம்.’’ என அந்த துறவியாரிடம் பத்மநாபரின் மனைவி கூறினாள். உணவு உண்பதற்கு முன், கண்டிப்பாக கைகால்களைக் கழுவ வேண்டியது ஆசாரமாகும்.

துறவியாரும் அந்த குளத்தருகே சென்று, உணவை ஒரு ஆலமரத்தடியில் வைத்து விட்டு கைகால்களைக் கழுவச் சென்றார். அப்போது அம்மரத்தின் மேல் ஒரு கழுகு ஒரு கடும்விஷம் கொண்ட நாகத்தை வேட்டையாடிக் கொண்டு வந்து அம்மரத்தில் அமர்ந்து கொத்தித் தின்று கொண்டிருந்தது. எதிர்ப்பாராத விதமாக, அந்த நாகத்தின் வாயில் இருந்து கசிந்த கடும்விஷம் அத்துறவி வைத்துச் சென்ற பாலில் விழுந்து, கலந்தது.

அந்த துறவியும் கைகால்களை நன்கு கழுவிய பின், மரத்தடிக்கு வந்து அந்த ஆகாரங்களையும் பாலையும் உண்ண ஆரம்பித்தார். அவர் இல்லாத வேளையில் அங்கு நிகழ்ந்த சம்பவத்தை அவர் அறியவில்லை. உடனே, அவரின் வயிற்றில் கடுமையான எரிச்சலும் தாங்கமுடியாத வலியும் ஏற்பட்டது. அவர் உண்ட உணவில் நஞ்சு கலந்திருக்கலாம் என்பதை அவர் உடனே யூகித்தார். பத்மநாபரின் இல்லத்திற்கு விரைந்து சென்று உதவி உதவி என அலறினார்.

துறவியின் குரலைக் கேட்டு வெளியில் ஓடிவந்த பத்மநாபரின் மனைவி, துறவியின் மேனியெல்லாம் நிறம் மாறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். தாம் அளித்த உணவை உண்டப்பின்னர் தான் துறவி இந்நிலைக்கு ஆளாகினர் என்பதை துறவியிடம் இருந்து அறிந்து திடுக்கிட்டாள். உடனே விஷமுறிவு மருத்துவரை அழைத்து வந்தாள். ஆனால், மருத்துவர் சிகிச்சையைத் தொடங்கும் முன்னரே அத்துறவி மடிந்தார்.

இதை அறிந்த பத்மநாபர் மிகவும் மனம் நொந்துபோனார். துறவியைக் கொலை செய்த மகாபாதகத்தை எண்ணி வருந்தினார். எந்தவொரு பாவமும் செய்யாவிடினும், அவரின் மனைவி மிகவும் மனம் உடைந்து போனாள். பாதகத்தை அவளே ஏற்றுக் கொண்டு, கணவனைப் பிரிந்து வனவாசம் சென்றாள். அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்தின் பரிகாரமாக அவள் சந்நியாசத்தை எடுத்துக் கொண்டாள்.

இந்தச் சமயத்தில், யமலோகத்தில் பாவப் புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரகுப்தன் குழம்பினான். துறவியைக் கொன்ற பாவத்தை யார் கணக்கில் எழுதுவது என வியந்தான். அதை யமதர்மனிடம் வினவினான். ‘‘பிரபுவே, பாம்பின் விஷம் கலந்த பாலைப் பருகி கொலையுண்ட துறவியின் பாவத்தை யார் கணக்கில் எழுதுவது? கண்டிப்பாக அந்தப் பாம்பு பாவியல்ல. கழுகின் பிடியில் சிக்கி இரையாகிக் கொண்டிருந்த அப்பாம்பின் மீது எந்தவொரு குற்றமுமில்லை.

அந்தக் கழுகின் மீதும் எந்தவொரு பாதகமும் இல்லை. ஐந்தறிவு ஜீவனாகிய அது தன்னுடைய பசிக்காக இரையை வேட்டையாடித்தின்றது. பசித்தவருக்கு உணவளித்து உயர்வான புண்ணிய செயல்களைச் செய்த பத்மநாபரோ, அவருடைய மனைவியோ கூட இந்த பாதகத்திற்குப் பொறுப்பல்ல. பிறகு யாருடைய கணக்கில் தான் இந்த மகாபாதகத்தை எழுதுவது? தாங்களே அறிவிக்க வேண்டுகிறேன்.’’ என சித்திரகுப்தன் எமனிடம் கேட்டான்.

சித்திர குப்தன் கூறியது போலவே, அந்த நாகமோ, கழுகோ, அல்லது பத்மநாபர் தம்பதியினரோ, இந்த பாதகத்திற்குப் பொறுப்பல்ல. மாறாக, நடந்த உண்மை சம்பவத்தை அறியாமல் யாரெல்லாம் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தி சாடுகிறார்களோ அவர்களுக்கே அந்த பாதகம் போய் சேரும் என எமதர்மன் விளக்கம் தந்தார்.

ஒருவர் தவறு செய்தார் என எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாத பட்சத்தில், அவரை பாவி என சாடுவது, அந்த சாடுபவர்க்கே தீய கர்ம வினையை ஏற்படுத்தும். அது எத்தகைய பாவத்துக்காக நாம் அவரை சாடு கிறோமோ அதை பொறுத்தே நமக்கும் அந்த தீயவினை ஏற்படும். இதையே இந்த கதையின் மூலம் புராணம் எடுத்துரைக்கின்றது.

பிறன்பழி கூறுவான் தன்பழியுள்ளும்
திறன்தெரிந்து கூறப்படும்

(குறள் எண்:186)

தொகுப்பு: தேஜஸ்வி

You may also like

Leave a Comment

9 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi