சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பதவிகளை நிரப்ப போட்டித் தேர்வு நடக்க இருப்பதால் நவம்பர்1ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதை அடுத்து, பட்டதாரி ஆசிரியர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றி வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியுள்ள நபர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பணிக்கு நவம்பர் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது மேற்கண்ட தகுதியுள்ள நபர்கள் தங்களின் சான்றுகளை, ஆவணங்களை ஆன்லைன் விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 2222 உள்ளன. விண்ணப்பங்களை நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான போட்டித் தேர்வு 2024 ஜனவரி 7ம் தேதி நடக்கும்.
மேற்கண்ட காலிப்பணியிடங்களில் பள்ளிக் கல்வியில் 2171 இடங்களும், மிகவும் பிற்பட்டோர் நலத்துறையில் 23, ஆதிதிராவிடர் நலத்துறையில் 16, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் 12 இடங்கள் உள்ளன. மேற்கண்ட பணியிடங்கள் துறை வாரியாகவும், பாட வாரியாகவும், இட ஒதுக்கீடு வாரியாகவும் கூடிய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில் இன்று முதல் பட்டதாரிகள் தங்கள் விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.