Sunday, December 10, 2023
Home » நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இன்பம் துஞ்சித்தலைத் தவிர வேறு எதைச் செய்வதையும் தேவர்கள் தவிர்த்திருந்தனர். பேரின்பத்தின் உறைவிடமான பராசக்தியின் திருப்பாதங்களை மறந்து தேவலோக மங்கைகளின் நாட்டியத்தில் தோய்ந்திருந்தனர். எப்போதேனும் கிஞ்சித்து இறை நினைப்பு என்பதும் போய் வெறும் போகக் கூட்டமாகப் பெருத்திருந்தனர். தர்மத்தின் பாதையில் சென்றவர்கள் தறிகெட்டுப் போயினர். அவிர்பாகங்கள் பெற்றவர்கள் தாங்களே என பேரரசர்கள் போல இறுமாந்திருந்தனர். தர்மம் கட்ட விழும்போது லாவகமாய் அதை சுருக்குபோல் இழுத்துக் கொண்டு அதர்ம அரசர்களான அசுரர்கள் உள்ளே புகுந்தனர். ஒவ்வொரு முறையும் இவ்வாறு நிகழும் இந்திர சாம்ராஜ்ஜியத்தை செப்பம் செய்து திருப்புவதை ஆதிமகாசக்தி வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

அவளின் கிருபா சமுத்திரத்தில் பிரபஞ்சத்தை மறுபடி மறுபடி மூழ்கடிக்க சங்கல்பம் செய்து கொண்டு வருவாள். தேவர்களை முன்னுக்கு நிறுத்தி.. அசுரர்களை அவர்களுக்கு எதிரே நிறுத்தி, தவறை திருத்தி தர்மத்தை சிகரத்தில் அமர்த்துவாள். இப்போதும் அது போன்ற சந்தர்ப்பம் அதிவிரைவாக வந்தது. அந்தக் கொடூர அசுர சகோதரர்களான சும்பனும், நிசும்பனும் இந்திரலோகம் உறங்கிக் கொண்டிருந்ததை சரியான வாய்ப்பாக்கிக் கொண்டனர். கூட்டமாக உள்ளே புகுந்து சிறை பிடித்தனர்.

சர்வாதிகாரத்தை மூவுலகிலும் நிறுத்தி வானுலகை தமது வசமாக்கினர். சிறையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது எனச் சிந்தித்த அசுரச் சகோதரர்கள் தேவர்களை கண்காணாது விரட்டினர். தேவர்கள் இருண்ட உலகத்தில் மருண்டு போய் பதுங்கினர். அசுரர்கள் தானே இனி பரமேஸ்வரன் என இமயத்தில் மாளிகை அமைத்து, தமக்கே இனி எல்லா அவிர்பாகமும் என அறிவித்தனர். அதர்மக் கட்டில் சிக்குண்ட பிரபஞ்சம் அசுர சக்திகளால் பிளவுபட்டுக் கிடந்தது.

பதுங்கி ஓடிய தேவர்கள் பிரகஸ்பதியின் பாதத்தில் சரிந்தனர். ஆனால், ஆதிமகாசக்தியின் நினைவு அவர்களுக்குள் எழவில்லை. தேவகுருவான பிரகஸ்பதி சிஷ்யர்களின் இந்த வினோதமான மனதைக் கண்டு வியப்புற்றார். என்ன செய்வதாக உத்தேசம் என்று பாதம் பிடித்துக் கிடந்த இந்திரனைக் கேட்டார்.இந்திரன், `ஆபிச்சாரம் எனும் தீய வேள்வியை செய்து அசுரர்களை இலக்காக்கி பிரயோகிக்கலாம் என்றுள்ளேன்’ என்று சொன்னபோது தேவகுரு வாய்விட்டுச் சிரித்தார்.

‘‘உடல் வலிமையைத்தான் சும்ப – நிசும்பர்கள் உறிஞ்சி உங்களை வற்றச் செய்தனர் என நினைத்தேன். ஆனால், புத்தியையும் பூஜ்ஜியமாக்கி நிர்மூலமாக்கி விட்டிருக்கின்றனர் என்பதை இதோ உன் வார்த்தையில் அறிகிறேன்’’ என்றுகூற தேவக் கூட்டமே வெட்கித் தலை குனிந்தது. ஆனாலும், விடாது ஏன் என இந்திரன் வினா எழுப்பினான். ‘‘வேள்விகள் உங்களைக் குறித்துதான் செய்யப்படுகிறது இந்திரா. அவிர்பாகம் உண்ட நீங்கள் வரம் கொடுக்கிறீர்கள். இப்போது அவிர்பாகத்திற்கு இலக்கு எவர்.

நீங்களே உங்களைக் குறித்தே யாகத்தீ பெருக்கி அவிர்பாகம் கொடுத்துக் கொள்வீர்களா? பசு தன் பாலை தானே அருந்துமா? நீர் கொண்ட மேகம் தானே தன் நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளுமா? அப்படி உங்களுக்கு நீங்களே யாகம் செய்வதாயினும் உங்களிடம் ஏது இப்போது சக்தி.

பயத்தில் புத்தி பேதலித்துப் பேசுகிறீர்கள். யாகம் செய்பவன் ஒருவித தியாகம் புரிகிறானெனில், அதை உண்டவன் வரமாக அருள்வதும் இன்னொரு தியாகம். அறியாமையில் அடிப்படை மறந்து பேசாதே. சக்தியற்ற கூட்டமாக இருக்கும் நீங்கள் உங்களின் மையச் சக்தியான பராசக்தியை மறந்துவிட்டீர்களே. இந்திரா விழித்துக் கொள்’’ என்று குரு அவர்களை தட்டியெழுப்பினார். முதன் முறையாக தேவர்கள் முகம் குருவின் அனுக்கிரகமான வார்த்தையைக் கேட்டு மலர்ந்தது.

மான்புறு குருவைத் துதித்து எங்கள் துக்கத்தை தகர்க்கும் வழியைக் கூறவேண்டுமென கண்ணீர் உகுத்தது.‘‘இமயச் சாரலில் வெண் பனியில் அருள் மழை பொழியும் பர்வதராஜனின் மகளான பார்வதியை தொழுதால் மட்டுமே இந்திரலோகம் மீட்க முடியும். அவள் இச்சித்தால் மட்டுமே மூவுலகமும் தேவர்கள் வசம் இலகும். விஷ்ணு மாயை எனும் மகாசக்தியுள்ள அதிநுண்ணிய காரியமாற்றும் சக்தியால் மட்டுமே சும்ப – நிசும்ப, சண்டமுண்ட, ரக்தபீஜர்களான பெருங்கூட்டத்தை அழிக்க முடியும் என்றே தெரிகிறது. தனித்த உங்களால் ஒருகாலும் முடியாது. எனவே, இப்போது இமயம் ஏறிச்செல்’’ என்றார்.

குருவின் குளுமையான வார்த்தைகளைக் கேட்டவர்கள், தேவியின் பாதச் சரணங்களை இன்னும் இறுக்கப் பற்றிக் கொண்டனர். இந்திரன் ராஜ அலங்காரங்கள் கலைந்து, தேவியின் சாமானிய பக்தனாக தன்னை மாற்றிக் கொண்டான். தேவர்கள் இதய கமலத்தில் மாதேவியை அமர்த்தி பல்வேறு துதிகளால் அவள் இதயம் கரைய கண்ணீர் சொரிந்தார்கள். இமயத்தில் கருணை கங்கையாக அவளும் கரைந்தாள். ஆனால், நீராட வரும் நங்கையாக மெல்ல நடந்து வந்தாள். ஏதும் அறியா பாலகி போல், “இங்கு யாரைத் துதித்துக் கொண்டிருக்கிறீர்கள்’’ என்று மென்மையாகக் கேட்டாள். தானே அவர்களிடம் விநயமாக வெளிப்படுத்திக் கொண்டாள்.

அம்பிகையை அடையாளம் தெரியாத தேவர்கள், ஒளியின் முன் இருள் விலகுவதுபோல் ஏதோ ஒரு தெளிவு பிறந்தது. பிரமிப்போடு நின்ற தேவர்கள் முன்பு மாபெரும் அதிசயம் நிகழ்ந்தது. அதோடு வேதத்தின் இலக்காக விளங்கும் பிரம்ம சக்தி முற்றிலும் வேறொரு உருக்கொண்டு வந்தது. சட்டென்று பார்வதியின் உடலிலிருந்து உயிர்சாரம் முழுவதும் திரட்சியாகப் பொங்கி வெண் மலையையே புரட்டி ஆடை போல் அணிந்த மகாசக்தி வெளிவந்தது. பார்வதி நழுவி கரிய காளியாகி பர்வத்திற்குள் சென்று மறைந்தாள். ஏனெனில், எல்லாச் செயலுக்கும் ஆதார மையமாக விளங்கும் விஷ்ணு மாயைத்தான் தேவர்கள் உள்ளத்தில் வைத்து துதித்தார்கள். இதுவும் ஆதிமகாசக்தியின் லீலையே.

தீந்தொழில் புரிபவர்களை அழிக்க வந்திருப்பினும், தேவர்களைக் காத்து இன்னருள் புரிய உதித்திருந்தாலும் இவற்றோடு எதனாலும் பாதிப்படையாத பரப்பிரம்ம ஸ்படிகம் போன்ற சத்திய சொரூபமாக இவள் இருந்ததால் இவளை மகா சரஸ்வதி என்று அழைத்தார்கள். தேவர்கள் இருகரம் கூப்பி `கௌசிகீ’ என பெயரிட்டும் அழைத்தனர். சிருஷ்டிக்கு அதிதேவதை பிரம்மாவெனில், கலை, காவியம், சாஸ்திரப் புராணங்கள் என்று சிருஷ்டியின் நீட்சியை இவள் பெருக்கி அனுக்கிரகம் செய்கிறாள்.

இவ்விரு தொழில்களுக்கும் அப்பால் வேதவாணியாக, ஞானபூரணியாக இவள் விளங்குகிறாள். அதனாலேயே பிரம்மாவையும், சரஸ்வதியையும் திவ்ய தம்பதியராக இதிகாசங்கள் வரிக்கின்றன. மகா சரஸ்வதி எழில் வடிவினள். வெண்பனியின் மலைச் சிகரத்தில் கருணைச் சிகரமாக அமர்ந்தாள். சிம்மத்தின் மீது அமைதியாக அமர்ந்து வீணாகானத்தில் லயித்திருந்தாலும், அம்பு, உலக்கை, சூலம், சக்கரம், சங்கம், மணி, கலப்பை, வில் ஏந்தி சந்திர ஒளியில் பிரகாசித்திருப்பாள். இமயக்கிரியில் அமைதிக் கோலம் பூண்டவள் வெகு விரைவிலேயே கோரக் கோலமாக சாமுண்டியாகவும், சும்ப-நிசும்பர்களை வதம் செய்யப்போகும் நிசும்பசூதனியாக வெகுண்டெழும் காலம் நெருங்கியது.

சத்தியத்தின் நேர் துருவங்களாக, கொடுங்கோன்மையின் முழு உருவாக இருந்த சும்ப-நிசும்ப சகோதரர்களின் அணுக்கத் தொண்டர்களான சண்டனும், முண்டனும் இமயக்கிரியில் திரிந்திருந்தபோது கௌசீகியை கண்டனர். சிம்மத்தின் மீது அமர்ந்த அழகுச் சிகரத்தைப் பார்த்து திகைத்துப் போயினர். தம் அசுரத் தலைவர்களுக்கு இவளை அர்ப்பணித்தால் என்ன என்று குரூரமாக யோசித்தனர். சும்பனிடம் தாம் கண்ட பேரழகுப் பெண்ணைப் பற்றிச் சொல்ல காமம் தலைக்கேறியது, இவளே மாதேவி என அறியாத அற்பன் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள யோசித்தான். அவனின் அழிவு ஒரு விதையாக போக வடிவெடுத்து வந்தது.

அசுரனின் அரசவையில் அழகிய குரலையுடையோனான சுக்ரீவன் என்பானை அழைத்தான். `எப்படியாயினும் இனிய மொழிபேசி அரசவைக்கு அழைத்துவா’ என்றான். மன்னனின் கட்டளையை மாதேவனின் வாக்காக ஏற்று அதிவிரைவாக இமயக்கிரியை அடைந்தான். கிரி கன்னிகையாக அமர்ந்திருந்த கௌசீகியை பார்த்து, “சும்பனின் அரசவையை ஒளிரூட்டும் பேரழகு படைத்தவளே…’’ என்று தொடங்கி அமிர்த வாக்காலும், மயக்கு வார்த்தைகள் பேசி சம்மதமா என்று முடித்தான்.

இவள் சம்மதித்து விடுவாள் என்றே முகத்தைப் பார்த்தான். அதேபோல அவளும் சம்மதம் என்றாள். ஆனால், “யார் என்னுடன் போரிட்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்களையே மணப்பேன். அதையே நான் வரமாகப் பெற்றிருக்கிறேன்’’ என்றாள். ஒரு வஞ்சகப் பேச்சுக்கு மறு வார்த்தையாக இன்னொரு விஷத்தை வார்த்தைகளில் தோய்த்துப் பேசினாள்.

கடுங்கோபத்தோடு நுழைந்தவன் விவரம் சொல்ல சும்பன் தூம்ரலோசனனை அழைத்தான். `தூம்ரம்’ என்றால் `புகை’ என்று பொருள். பொங்கும் புகையோடு பெரும் படையோடு கிளம்பியவன் கௌசீகியின் எதிரே கர்ஜிக்க, அவள் வாகனமாக இருந்த சிம்மத்தின் ஹூங்காரத்திலேயே கரைந்து வீழ்ந்தான். தூம்ரலோசனன் மாண்டான் என்பதை கேள்வியுற்ற சும்ப-நிசும்பரின் படைத்தலைவர்களாக விளங்கிய சண்டனும், புத்தியற்ற வெறும் உடற்கொழுப்பு கொண்ட முண்டனும் எங்களுக்கு நிகர்த்தவள் யாரவள் என்று திமிறிக் கிளம்பினர். மாபெரும் படையோடு வந்தவர்கள் கௌசீகியை பார்த்து, `இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை.

அப்படியே எங்களோடு வந்துவிடு’ என ஒரு அம்பை சிம்மத்தின் பிடரி பார்த்துச் செலுத்தினான். கௌசீகியின் கண்கள் சிவந்தது. அசுரப் படையின் ஒரு பகுதியை தம் கதையாலே ஏவித் தாக்கியபோதுதான் முதன் முறையாக சிம்மவாஹினி சாதாரணவள் இல்லை. இவளே சாமுண்டி என்பதை சண்ட, முண்டர்கள் உணர்ந்தார்கள். இதற்குப் பின்னால் தேவர்களின் சூழ்ச்சியே நிறைந்துள்ளது என்று எண்ணியவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். அதுவரை சாந்தமாக இருந்தவளின் நெற்றிப் பொட்டிலிருந்து மாகோரமிக்க அதிபயங்கர உருவோடு காளி வெளிப்பட்டாள்.

தெற்றுப் பற்களோடு கூடிய அதிகோர முகமும், செம்பட்டைச் சடையும், கன்னங்கரியவளாக இருந்தாள். கத்தியும், கழுத்தைச் சுருக்கிட்டு இழுத்துப் போடும் பாசமும், கபாலம் சொருகிய கட்வாங்கம் என்ற குண்டாந்தடியும், அனேக கபாலத்தை மாலையாக பிணைத்து கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டாள். தலையில்லா உடலை இடையில் கட்டி முடிந்திருந்தாள். வரிப்புலியின் தோலை உரித்து சேலையாக்கி போர்த்திக் கொண்டிருந்தாள். உடல் முழுதும் ரத்தக் குழம்பை கஸ்தூரி சந்தனமாகப் பூசிக்கொண்டாள். உலகம் முழுதும் துழாவிப் புசிப்பது போல் நாவைச் சுழற்றியபடி இருப்பவளின் கண்கள் செந்தனல் துண்டங்களை எரிமலையாகப் பொழிந்தது. அவள் கர்ஜிப்பு தாங்காது அசுரர்களின் ரத்தமே உறைந்து போயிற்று.

எங்கேயோ மறைந்திருந்த தேவர்களும், கந்தவர்களும், ஏன் மகேசனும், பிரம்மா, விஷ்ணு போன்றோரும் அங்கு பிரசன்னமாயினர். காணுதற்கு அரியவளாதலால் வானுலகமே விழாக் கோலம் பூண்டது. சும்பனும்-நிசும்பனும் பதவியிழந்து பரலோகம் செல்வோமோ என்று அஞ்சினர். ஆனாலும், அசுர ரத்தமாயிற்றே… `பராசக்தியே ஆயினும் பாதியாக வகிர்ந்து போடுவோம்’ எனப் போர்க்களம் ஓடினர்.

ஒரு கணம் சூரியனை மறைத்து பூமியையே பிளக்கும் பேரதிர்வோடு நின்றிருக்கும் கௌசீகியிலிருந்து வெளிப்பட்டிருக்கும் சாமுண்டியைப் பார்த்தார்கள். என் படைக்கு எம்மாத்திரம் இவள் என்று கால் உதைத்து நின்றார்கள். மகாயுத்தம் தொடங்கியது. பலப் படைக் கலன்களை அப்படியே விழுங்கி ஜீரணித் தாள். ரத்த ஆறு பெருக்கெடுக்க சும்பனும் அவள் போலவே இன்னொரு கோரவுரு எடுக்க, நிசும்பன் அம்பைப் பொழிய தேவி அநாயாசமாக அழித்தாள்.

ஒட்டு மொத்த படைக் கலன்களையும் சிம்மமும், சாமுண்டியும் சம்கரிக்க சும்ப-நிசும்பர்கள் பலம் மொத்தமும் சேர்த்துக் கொண்டு அருகே வர, தேவியின் வாள் நிசும்பனின் தலையை வெட்டியது. சும்பனை சூலத்தால் மார்பினில் பாய்ச்சினாள். சண்ட, முண்டர்களை அழுத்திக் கொன்றாள். தேவர்களும், வானவரும் கண்களில் நீர் பெருக இருகைகூப்பி துதித்தனர். `ஜெய் நிசும்பசூதனி’ என்று ஜெயகோஷம் எழுப்பினர். இதுவே மகா சரஸ்வதியான சத்தியம், தர்மத்தை நிலைத்துச் செய்ய வந்த நிசும்பசூதனி.

அது சோழர்களின் தொடக்கக் காலம். நிசும்பசூதனியே வெற்றித் தெய்வம். சத்ரு நாசம் செய்யும் மாகாளி என எண்ணிய சோழகுலச் சக்ரவர்த்தியான விஜயாலயச் சோழன் எண்ணூற்று ஐம்பவதாவது வருடம் தஞ்சையில் நிறுவினான். போருக்குச் செல்லும் போதேல்லாம் `தஞ்சையை காப்பாய் தேவி’ என்று அவள் பாதம் பணிந்துவிட்டுத்தான் யுத்த களத்திற்குச் செல்வானாம். மிகவும் ஆதாரப்பூர்வமான திருவாலங்காட்டுச் செப்பேடு களில் ‘‘தஞ்சாபுரீம் சௌத சுதாங்கராகாம.. என்று தொடங்கும் வடமொழி வரிகளில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற காளி தேவியை அங்கு பிரதிஷ்டை செய்தான்.

தேவியின் அருளால் நான்கு கடல்கள் ஆகிய ஆடையை அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டு வந்தான் என்று முடிக்கிறது. மாமன்னன் பரம்பரையை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் அவள் திருவடி பணிந்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவானாம். போருக்கு முன்பு லட்சம் படை வீரர்களாயினும் சரி இவள் சந்நதியில் வீழ்ந்து வெற்றி வரம் கோரி யுத்தகளம் ஓடுவார்களாம். இவளே தஞ்சையின் காவல் தெய்வம். தஞ்சையின் புகழை தரணியெங்கும் ஒலிக்க விட்ட காருண்ய சூலினி. செல்வம் பெருக்கித் தந்த அட்சய மாகாளி இவளே.

அன்றிலிருந்து இன்றுவரை அதேப் பொலிவோடும், அதேசக்தியோடும் விளங்குகிறாள் நிசும்பசூதனி.தேவிமகாத்மியம் உரைக்கும் உருவத் தோற்றத்தை சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் சோழர்கள். மிக கோரமான உருவம். மூக்கு அழுந்தி அதற்குக் கீழே தெற்றுப்பற்கள் துருத்தியிருக்க ஒரு ஓரமாய் தலை சாய்த்து அரை பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் நிசும்பசூதனி. தீச்சுடர் போன்ற கேசம். வற்றிய தோலும், விலா எலும்புகளோடு கூடிய பதினாறு கைகள். அதில் விதம்விதமான ஆயுதங்கள். பாம்பை கச்சமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

கால்கள் மெல்லியனவாக இருந்தாலும் காலுக்குக் கீழே நான்கு அசுரர்களை வதைத்து அழுத்தும் கோபத்தை சிற்பத்தில் வடித்திருப்பது பார்க்கப் பிரமிப்பூட்டும். இவர்களே சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன். யுத்த களத்தில் உக்கிரமாக போர் புரியும்போது நெஞ்சு நிமிர்த்தி எதிரியை நோக்கி பாயும் வன்மத்தையும், அதனால் முதுகுப் புறம் சற்று வளைந்து குழிவாக இருப்பதையும், எதிர்காற்றில் கபால மாலைகள் இடப்புறம் பறக்கும் வேகத்தையும் சிற்பமாக்கி கலையின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். பெண் எனும் சக்தி பொங்கியெழுந்தால் இப்படித்தான் வீருகொண்டெழும் என்பதே நிசும்பசூதனி சொல்லும் விஷயம். அதேசமயம் தர்மத்தின் பக்கம் நிற்கும் நீதி தேவதை.

தொகுப்பு: கிருஷ்ணா

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?