புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரசார் புகார் அளித்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கோனில் கடந்த 16ம் தேதி தேர்தல் பிரசாரம் நடந்தது. அப்போது, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், தெலங்கானா காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்ரே, தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரெவந்த் ரெட்டி, எம்.பி. உத்தம் குமார் ரெட்டி, தெலங்கானா காங்கிரஸ் சட்டசபை தலைவர் பாட்டி விக்ரமர்க்கா உள்ளிட்டோர் அடங்கிய குழு, தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தது.
பின்னர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டியில் கூறியதாவது: தேர்தல் ஆணையத்திடம் 8 புகார்கள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜவுக்கு அதிக வாக்குகளை பெற்று தரும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ரூ.25 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என அம்மாநில சாகர் மாவட்டம் சுர்கி தொகுதியில் போடியிட இருக்கும் பாஜ வேட்பாளர் கோவிந்த் சிங் ராஜ்புத்தை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும். மேலும், சட்டீஸ்கர் தேர்தல் பிரசாரத்தின்போது, வாக்குகளை பெறுவதற்காக முதல்வர் பூபேஷ் பகேல் அரசு, புவனேஷ்வர் சாகு என்பவரை கும்பல் கொலை செய்ததாக சர்ச்சைக்குரிய வகையில் குற்றம்சாட்டிய அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தேர்தலில் மிக பெரிய அளவில் முறைகேடு நடைபெற்று வருகின்றன. தெலங்கானா அரசு அறிமுகம் செய்த திட்டங்களின் உதவிகள் வழங்கப்படுவதை வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற இருக்கும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பாகவோ அல்லது வரும் நவம்பர் 30ம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு பதிவுக்கு பிறகோ அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையத்தின் கட்டாய நடைமுறையின் அடிப்படையில் இரண்டரை ஆண்டு பணி காலத்தை நிறைவு செய்யாத காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாகவும், தேர்தல் சிறப்பு அதிகாரி பணி ஒதுக்கீடு தொடர்பாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.