Monday, June 17, 2024
Home » கை நிறைய காசு தரும் காடைப்பண்ணை!

கை நிறைய காசு தரும் காடைப்பண்ணை!

by Porselvi

“போட்டோ ஸ்டுடியோ வச்சிருந்தோம். இப்போ எல்லாம் செல்போன்லயே போட்டோ எடுத்துக்குறாங்க. இதனால எங்க தொழில் டல்லடிக்க ஆரம்பிச்சிடுச்சி. என்ன பண்றதுன்னு புரியாம தவிச்சோம். அந்த நேரத்துல நாங்க முட்டைக்காக காடை வளர்க்க ஆரம்பிச்சோம். இப்போ நல்ல வருமானத்தோட சந்தோசமாக இருக்கோம்’’ என மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்கள் கன்னியப்பன் – கல்பனா தம்பதியினர். புதுச்சேரி – தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் ஒன்றுதான் எல்.ஆர்.பாளையம் என்கிற லிங்காரெட்டிப்பாளையம். மணிலா, கரும்பு, வாழை என பல பயிர்கள் செழித்து வளரும் விவசாய பூமி. புதுச்சேரிக்கென்று சர்க்கரை ஆலை இயங்கிய ஊரும் கூட. இன்றும் அந்த ஆலை இருக்கிறது. ஆனால் சில காரணங்களால் இயங்க முடியாத சூழல். ஆனாலும் இங்கு கரும்பு இன்றைய தேதியில் கூட பெரியளவில் சாகுபடி செய்யப்பட்டு, பக்கத்து ஊரான கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தகைய செழிப்பான ஊரைச் சேர்ந்த தம்பதிதான் கன்னியப்பன் மற்றும் கல்பனா. அருகில் உள்ள காட்டேரிக்குப்பம் என்ற ஊரில்தான் இவர்கள் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் நல்ல வருமானம் கிடைத்திருக்கிறது. இனி இந்தத் தொழிலை நம்பி இருக்க முடியாது என்ற சூழலில் காடைப் பண்ணை அமைத்து இப்போது கை நிறைய சம்பாதிக்கிறார்கள். ஒரு காலைப்பொழுதில் லிங்காரெட்டிப் பாளையத்திற்கு சென்று இந்த தம்பதியினர் நடத்தி வரும் காடைப்பண்ணையைப் பார்வையிட்டோம். குடும்பம் சகிதமாக காடைகளை செல்லப்பிள்ளைகள் போல பாவித்து பராமரித்து வரும் இந்த தம்பதி தங்களின் காடை வளர்ப்பு அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்கள்.

“ரொம்ப நஷ்டம் ஏற்பட்டதால போட்டோ ஸ்டுடியோவ இழுத்து மூடிடலாம்னு நினைச்சோம். இதுக்கு பதிலா என்ன தொழில் செய்யலாம்னும் யோசிக்க ஆரம்பிச்சோம். என்னோட கணவரோட தம்பி எங்க ஊர்லயே காடைப்பண்ணை நடத்தி வந்தாரு. அவரு இறைச்சிக்காக காடைகளை வளர்க்குறாரு. பல இடங்களுக்கு இறைச்சிக்காக காடைகளை அனுப்பி வைக்குறாரு. அவரு வெளியில காடை முட்டைகளை வாங்கிட்டு வந்து இன்குபேட்டர் வச்சி பொரிக்க வச்சி வளர்ப்பாரு. அவரு பெரும்பாலும் திருநெல்வேலியில ஒருத்தர்கிட்ட முட்டைகளை வாங்குவாரு. ஆன்லைன்ல பணம் போடுவாரு. அவுங்க முட்டைய அனுப்பி வைப்பாங்க. ஆனா அந்த முட்டை 1 மாசம் கழிச்சிதான் வரும். இதனால் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும். உரிய நேரத்துல குஞ்சி பொரிக்க வைக்க முடியாது. அந்த நேரத்துல நாம ஏன் காடை முட்டைகளை உற்பத்தி பண்ணக்கூடாதுன்னு யோசிச்சோம். சரி இதை நாம பண்ணி பார்க்கலாமேன்னு களத்துல இறங்கிட்டோம். முதல்ல ஆந்திராவில் இருந்து 50 காடைக்குஞ்சுகளை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சோம். அதுங்க இடுற முட்டைகளைப் பொரிப்புக்காக கொடுத்தோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் காடைகளோட எண்ணிக்கையை அதிகப்படுத்துனோம். இப்போ 2 ஆயிரம் காடைகள் எங்கள் பண்ணையில இருக்கு. காடை வளர்ப்புக்காக தனி இடமெல்லாம் பார்க்கல. எங்களோட வீட்டுல கீழ் போர்ஷன்லதான் காடைகளை வளர்க்குறோம். அதுதான் இப்போ எங்களுக்கு காடைப்பண்ணை’’ என தாங்கள் காடைப்பண்ணைத் தொழிலுக்கு வந்த கதையைச் சுருக்கமாக சொன்னார் கல்பனா. அவரைத் தொடர்ந்து கன்னியப்பன் பேச ஆரம்பித்தார்.

“ நாங்க காடைப்பண்ணை தொடங்குன ஆரம்ப காலகட்டங்கள்ல சில காடைக் குஞ்சுகள் சூடு தாங்காம இறந்துடுச்சிங்க. எதனால இதுங்க இறக்குதுன்னு யோசிச்சோம். சில பண்ணைகளுக்கு நேர்ல போயி, அவங்க எப்படி வளர்க்குறாங்கன்னு பார்த்துட்டு வந்தோம். அதன்பிறகு நல்ல படியா பண்ணையை நிர்வகிக்க ஆரம்பிச்சோம். இப்போது 700 சதுர அடியில கச்சிதமாக காடைக்குஞ்சுகளை வளர்த்துட்டு வரோம். ஒரு சதுர அடி பரப்பளவில் 5 காடைகள் வளர்க்கலாம் ஆனால் நாங்க 3-காடைகள்னு 2000 காடைகளை வளர்க்குறோம். காடைக்குஞ்சுகளை வளர்க்கும் பண்ணையில தரைப்பகுதி நல்லா இருக்கணும். நாங்க தரைப்பகுதியில தவிட்டு உமியும், தேங்காய் நார் பஞ்சும் போட்டு இருக்கோம். இதுங்க காடைக்குஞ்சுகளுக்கு மெத்தை மாதிரி இருக்கும். முட்டை விழுந்தாலும் உடையாது. தவிட்டு உமி ஒரு மூட்டை 50-100 ரூபாய்னு வாங்குறோம். தேங்காய் நார் பஞ்சு மூட்டை 160 ரூபாய்னு வாங்குறோம். இது ரெண்டையும் அடிக்கடி மாத்தணும். காடைக்குஞ்சுகளோட கழிவுகள் சேர்ந்து ஒரு வித வாடை அடிக்க ஆரம்பிச்சிடும். அப்புறம் கழிவு சேர்ந்து சேர்ந்து மென்மையா இருக்குற பஞ்சுகள் கட்டியா மாறிடும். இது காடைக்குஞ்சுகளுக்கு தொந்தரவா மாறிடும். காடையோட கழிவுகள் கலந்த தேங்காய் நார் பஞ்சும், உமியும் நல்ல உரமா மாறிடும். இதை விவசாயிங்க வந்து வாங்கிட்டு போயி அவங்களோட வயலுக்கு போடுறாங்க.

காடைங்களுக்கு பெரும்பாலும் நாங்க கடையில விக்கிற தீவனத்தைத்தான் போடுறோம். காலையில 9 மணிக்கு உள்ளேயும், அதே மாதிரி நைட்ல 9 மணிக்கு உள்ளேயும் தீவனம் கொடுத்துடுவோம். இடையில எப்பவாவது முருங்கை இலைகளை பறிச்சிட்டு வந்து போடுவோம். சில சமயம் அகத்திக்கீரை கொடுப்போம். இது காடைக்குஞ்சுகளுக்கு எனர்ஜிய கொடுக்கும். தேவைப்படும்போது வேப்பிலையை அரைச்சி, அந்த தண்ணிய காடைக்குஞ்சுகளுக்கு கொடுப்போம். இதை நேரடியா கொடுக்க மாட்டோம். காடைகளுக்கு தர்ற தண்ணில கலந்து கொடுத்துடுவோம். இந்த வேப்பிலைத் தண்ணி வயித்தை சுத்தம் செய்யும். கிட்னிய சுத்தம் பண்ணவும் ஒரு மருந்து இருக்கு. கால்நடைத்துறை அதிகாரிகளைக் கேட்டு அதைக் கொடுப்போம். தண்ணி கொடுக்க ஆட்டோமேடிக் டிரிங்கர் வச்சிருக்கோம். தண்ணித்தொட்டில இதை கனெக்ட் பண்ணிடுவோம். அது தானாவே தண்ணிய நிறைச்சிக்கும். தண்ணி காலியானதும் திரும்பவும் நிறைச்சிக்கும். இதுலதான் சில மருந்துகளைக் கலந்து கொடுப்போம். காடைக்குஞ்சுகளுக்கு வெளிச்சம் அவசியம். பகல்ல சூரிய வெளிச்சமே போதும். நைட்ல லைட் போட்ருவோம். சிலர் காடைக்குஞ்சுகளை கூண்டுக்குள் அடைச்சி வளர்ப்பாங்க. நாங்க அப்படியே பண்ணைக்குள்ள விட்டுடுவோம். இந்த முறையில காடைகள் நல்லா நடக்கும். இதனால நல்லா செரிமானம் ஆகும். டைஜசன் பிரச்னை வராது. காடைகளுக்கு சில சமயம் சளி பிடிக்கும். அந்த சமயங்கள்ல துளசியை அரைச்சி கொடுப்போம்.

காடைக்குஞ்சுகளை வாங்கிட்டு வந்து வளர்த்து வரும்போது 40 நாள்ல முட்டையிட ஆரம்பிக்கும். ஏறக்குறைய இதுங்களோட லைப் 1 வருசம். ஒரு 10 மாசத்துக்கு முட்டை எடுக்கலாம். மதியம் 2 மணியில இருந்து காடைகள் முட்டையிட ஆரம்பிக்கும். நாங்க நைட் 8 மணிக்கு போய் முட்டைகளை சேகரிப்போம். ஒரு வாளியில முட்டைகளை எடுத்துட்டு வந்து தரம் பிரிப்போம். 2 ஆயிரம் காடைகள்ல 1600 காடை பெண் காடைகள். இதில ஆயிரத்துக்கு மேற்பட்ட காடைகள் முட்டையிடும். உடைஞ்சது, கழிவு போக ஒரு நாளைக்கு ஆயிரம் முட்டைகளை விற்பனை பண்ணலாம். மொத்த விலைக்கு ஒரு முட்டை ரூ.3.50ன்னு விக்குறோம். சிலர் சில்லரை விலைக்கு வாங்குவாங்க. அவங்களுக்கு 5 ரூபாய், 6 ரூபாய்னு விப்போம். சராசரியா 4 ரூபாய்க்கு வித்துடுவோம். இதன்மூலமா ஒரு நாளைக்கு 4 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒரு நாளைக்கு 2600 ரூபாய் தீவனத்துக்காக செலவாகும். இதர செலவுக்கு 400 ரூபாய் ஆகும். 3 ஆயிரம் செலவு போக ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் கண்டிப்பா கிடைக்கும். இதுல கொஞ்சம் முன்ன பின்ன கூட கிடைக்கும். சென்னை, திருநெல்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகள்ல இருந்து வந்து முட்டைகளை வாங்கிட்டு போறாங்க. சிலர் ஆன்லைன்ல பணம் போட்ருவாங்க. நாங்க அவங்களுக்கு முட்டைகளை அனுப்பி வச்சிடுவோம். காடை முட்டை தேவை இப்போ அதிகமா இருக்கு. இதில் உள்ள நெளிவு சுளிவுகளை தெரிஞ்சிகிட்டா இந்தத் தொழிலை எல்லோரும் செய்யலாம்’’ என அழைப்பு விடுக்கிறார் கன்னியப்பன்.
தொடர்புக்கு:
கன்னியப்பன் – 97879 29293.

குடும்பத்திற்கு பொழுதுபோக்கு
இந்தக் காடை வளர்ப்புத் தொழில் கன்னியப்பன் குடும்பத்திற்கு ஒரு வருமானம் தரும் தொழிலாக இருப்பதோடு, கஷ்டத்தை மறந்து சந்தோசமாக இருக்கும் அளவுக்கு பொழுதுபோக்காகவும் இருக்கிறது. இவர்களது மகள் இதய 9ம் வகுப்பு படிக்கிறார். மகன் தீபன் 5வது படிக்கிறார். இவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரம் போக காடைக்குஞ்சுகளிடம் நண்பர்களாகவே இருக்கிறார்கள். அவற்றுக்கு தீவனம் வைப்பது, தண்ணீர் வைப்பது என மிகவும் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் தங்களின் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார்கள் இந்தத் தம்பதியினர்.

ஆண் காடைகள் விற்பனை
காடைகள் இடும் முட்டைகள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு பொரிப்புத்திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகின்றன. அதுபோன்ற சமயங்களில் ஆண் காடைகளை விற்பனை செய்துவிடுகிறார்கள். ஒரு வருடத்திற்குப் பிறகு பெண் காடைகளையும் விற்பனை செய்துவிட்டு, புதிய பேட்ஜை பண்ணைக்கு கொண்டு வருகிறார்கள். மீண்டும் சுழற்சி முறையில் அவை முட்டையிட்டு வருமானம் தருகின்றன.

 

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi