Saturday, July 27, 2024
Home » முதன்மைப்பயிர் மரவள்ளி… ஊடுபயிர் பாக்கு! புதிய முயற்சியில் சேலம் விவசாயி

முதன்மைப்பயிர் மரவள்ளி… ஊடுபயிர் பாக்கு! புதிய முயற்சியில் சேலம் விவசாயி

by Porselvi

சேலம் மாவட்டத்தில் மரவள்ளி ஒரு முக்கிய பயிர். இதைப் பல விவசாயிகள் தனிப்பயிராகவும், வேறு சிலர் பயிர்களுக்கு மத்தியில் ஊடுபயிராகவும் விளைவிப்பதுதான் வழக்கம். பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சாந்தப்பன் என்ற விவசாயி தனது 75 சென்ட் நிலத்தில் மரவள்ளியை முதன்மைப் பயிராகவும், அதற்கு இடையில் பாக்கை ஊடுபயிராகவும் சாகுபடி செய்து அசத்தி வருகிறார். சிறு சிறு மலைக்குன்றுகளுக்கு இடையே பச்சைப் பசேலென காட்சியளிக்கும் சாந்தப்பனின் வயலுக்குச் சென்றோம். மரவள்ளியும், அதற்கு இடையில் பாக்குச்செடிகளும் நன்கு செழித்து வளர்ந்திருக்கின்றன. அவற்றுக்கு சில பராமரிப்பு பணிகளைச் செய்துகொண்டே நம்மிடம் பேச ஆரம்பித்தார் சாந்தப்பன்.
“பனமரத்துப்பட்டி அடிகரையில் எங்களுக்கு சொந்தமா 75 சென்ட் நிலம் இருக்கு. இதை வைத்துதான் பண்ணையம் செஞ்சுட்டு இருக்கோம். இதில் அதிகமா மரவள்ளியைத்தான் சாகுபடி பண்ணுவோம். இடையில சோளம், கடலை, கத்தரியும் சாகுபடி செய்வோம். இப்போ மரவள்ளிக் கிழங்கும், அதில ஊடுபயிரா பாக்குச் செடிகளையும் நடவு செஞ்சு இருக்கேன். இந்த ஊடுபயிர் ஐடியா எனக்கு ரொம்ப நாட்களா இருந்துச்சு. சரி வச்சிப் பார்ப்போமேன்னு வச்சேன். இன்னிக்கு அது நல்லபடியா வளர்ந்து வந்துட்டு இருக்கு. பொதுவா வாழை மரம், தென்னை மரங்களுக்கு நடுவுலதான் பாக்கு மரங்களை ஊடுபயிரா வைப்பாங்க. அதற்குக் காரணம் பாக்கு மரம் மூன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்து வரும் வரைக்கும் அதன் மேல் நேரடியாக வெயில் படக்கூடாது. வெயில் பட்டால் பாக்கு மரம் கருகிடும். அதற்காகத்தான் இந்த முறையப் பயன்படுத்துறாங்க.

என்னோட நிலம் ஒரு ஏக்கருக்கும் குறைவானதா தான் இருக்கும். இந்த குறைஞ்சளவு நிலத்துல எனக்கு வருமானமும் வரணும், அதே சமயம் பாக்கு மரத்தை ஊடுபயிரா வளர்க்கணும்னு நெனச்சேன். அதற்கு நல்ல சாய்ஸ் மரவள்ளிதான்னு தீர்மானிச்சேன். மரவள்ளி பொதுவா 11 மாத ஆயுட்காலம் கொண்டது. அதனால் மரவள்ளியைத் தேர்வு செய்தேன். 75 சென்ட் நிலத்துக்கு நடவு பண்ண 3000 மரவள்ளிப் புல்லு (விதைக்கரணைகள்) தேவைப்பட்டது. புல்லை மேட்டுப்பாத்தி முறையிலதான் நடவு செஞ்சு இருக்கேன். கடந்த முறையும் மரவள்ளிதான் போட்டு இருந்தேன். அதை அறுவடை செய்யும்போதே மண்ணோட இறுக்கம் குறைஞ்சிருச்சு. இருந்தாலும் நான் பவர் வீலர் வெச்சு ஒருமுறை உழவு ஓட்டினேன். அடியுரமா பசுந்தாள் உரமும், மாட்டுச் சாணமும் போட்டேன்.

நிலத்தில் முழுசா தண்ணீர் விட்டு மரவள்ளிப் புல்லை ஊன்றினேன். இதிலிருந்து 8வது நாளில் செடியில் இருந்து முளைப்பு வரத்தொடங்கிடுச்சு. ஏற்கனவே நான் எடுத்து வெச்சிருந்த கிழங்கு புல்லையே நடவுக்கு பயன்படுத்திகிட்டேன். 7 இலை, 8 இலை வந்ததும் நிலத்தில் களை எடுத்தேன். அருகில் இருக்கிற வேலையாட்களை வெச்சு களை எடுத்தேன். நாங்கள் 3 அடிக்கு ஒரு புல்லை நடவு செய்து இருக்கோம். காலை, மாலை என இரு வேளையும் செடிகளுக்கு தண்ணீர் விடுவேன். சொட்டுநீர்ப் பாசனம்தான் பயன்படுத்துறோம். இதற்கு அரசு மானியம் கொடுக்குது. இந்த மானியத்தை பனமரத்துப்பட்டி தோட்டக்கலைத்துறை அதிகாரி குமரவேல்தான் எங்களுக்கு வாங்கிக் கொடுத்தார். இதுமட்டுமில்லாம நடவு குறித்தும், பயிர் பராமரிப்பு குறித்தும் அவர் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இந்த மரவள்ளிச் செடிகளுக்கு நடுவுல ஊடுபயிரா பாக்கு பயிர் பண்ணலாம்னு ஆலோசனை கொடுத்ததும் அவர்தான்.
ஒரே சீராக தண்ணீர் பாய்வதால பாக்கு மரத்திற்கும் தேவையான நீர் கிடைக்குது. மரவள்ளி பராமரிப்புக்கு நாங்க பெருசா மெனக்கெடுவது கிடையாது. 11 மாதத்தில் 4 முறைக்கும் மேல களை எடுத்துவிடுவோம். களை எடுக்கும்போது ரொம்பவே கவனமா இருப்போம். இல்லைன்னா பாக்கு மரத்துல அடிபட்டு விடும். மரவள்ளி 10 அல்லது 11 வது மாதத்தில் அறுவடைக்கு தயாராகிடும். ஆட்களை வெச்சுதான் அறுவடை செய்யுறோம். 75 சென்ட் நிலத்தில் எனக்கு 9 டன் வரைக்கும் கிழங்கு கிடைக்கும். இதில் பாதி கிழங்கை நேரடியாக நானும் என் மனைவி பாப்பாத்தியும் நேரடியாக விற்பனை செஞ்சுடுவோம். மீதி இருக்குற கிழங்குகளை சேகோ பேக்டரிக்கு அனுப்பிடுவோம். மரவள்ளிக் கிழங்கை வெச்சு கிழங்கு மாவு, ஜவ்வரிசி எல்லாம் தயாரிக்கிறாங்க.

சராசரியா 75 சென்ட்க்கு 8 டன் மரவள்ளிக் கிழங்கு கிடைக்கும். ஒரு கிலோ கிழங்கு ரூ.30க்கு சந்தையில் விற்பனை செய்யுறோம். அதுவே முற்றி காய்ந்த மாதிரி இருக்குற கிழங்கை சேகோ பேக்டரிக்கு ஒரு கிலோ ரூ.18ன்னு கொடுக்கிறோம். நேரடியாக விற்பனை செய்யுறப்ப ரூ. 1.20 லட்சம் வருமானமும், சேகோ பேக்டரிக்கு கொடுப்பதில் ரூ.72 ஆயிரமும் கிடைக்குது. இதில் வேலையாட்கள் செலவு ரூ.20 ஆயிரம் போக ரூ.1.72 லட்சம் லாபமாக கிடைக்கிறது. ஆத்தூரைச் சுற்றியுள்ள பெத்தநாயக்கன் பாளையம், செல்லியம்பாளையம், வாழப்பாடி போன்ற ஊர்கள்ல பாக்கை அதிகமா சாகுபடி செய்றாங்க. நான் மரவள்ளிக் கிழங்கில் ஊடுபயிரா பாக்கை நடவு பண்ணி இருக்கேன். இதற்கு எனக்கு 400 பாக்குப்பழம் தேவைப்பட்டது. இந்த பாக்குப்பழத்தை அருகில் இருக்கும் வாழப்பாடியில் இருந்து வாங்கி வந்து நடவு செஞ்சு இருகேன். ஒரு பாக்குப்பழம் ரூ.3 என்ற கணக்கில் வாங்கி வந்தேன். வாங்கி வந்த பாக்குப் பழத்தைக் கொட்டி, அதன் மீது மணலை கொட்டி டெய்லியும் ஸ்பிரே முறையில் தண்ணீர் விடுவேன். பாக்கு முளைச்சு வருவதற்கு 10 மாதங்கள் வரை கூட ஆகும். அப்படி துளிர்த்து வந்த பாக்குச் செடிகளை 4 இலை
விட்டதும் மரவள்ளிக் கிழங்குக்கு நடுவில் 6.5 அடி இடைவெளி விட்டு நடவு செஞ்சு இருக்கேன். மற்ற இடங்களில் 7 அடி அல்லது 8 அடி வரை நடவு செய்வாங்க. நான் கொஞ்சம் நெருக்கியே நடவு செஞ்சி இருக்கேன்.முளைத்து வந்த பாக்கு மரங்களை 37 சென்டில் நடவு பண்ணி இருக்கேன். இலையை மட்டும் வெளியில் விட்டு பாக்கு மரங்களை நடவு செஞ்சி இருக்கேன். பாக்கு மரத்தை மரவள்ளிச் செடிகளை ஒட்டி நடவு செய்யாம 1.5 அடி இடைவெளி விட்டுதான் நடவு செஞ்சி இருக்கேன். அப்போதான் மரவள்ளிக் கிழங்கை அறுவடை செய்யும்போது பாக்கு மரத்தைப் பாதிக்காது. தனியா கிழங்கை மட்டும் அறுவடை செய்து எடுத்திரலாம். இப்போ நான் வெச்சு இருக்குறது நாட்டு ரகபாக்கு மரம். இந்தப் பகுதியில் இதை கொட்டப்பாக்குன்னு சொல்லுவாங்க. கொட்டப்பாக்கில் இருந்து 7வது வருடத்தில்தான் மகசூல் கிடைக்கும். அதுவரைக்கும் என்னோட நிலத்தில் பாக்கு ஊடுபயிராக மட்டும்தான் இருக்கும். தற்போது சுற்றுவட்டாரப் பகுதிகள்ல பாக்குத் தோப்பு வெகுவா குறைஞ்சிருச்சு. அதனால் எனக்கு மகசூல் கிடைக்கும்போது பாக்கு நல்ல விலைக்கே போகும் என்ற நம்பிக்கையில் நடவு செஞ்சு இருக்கேன். எதிர்காலத்தில்தான் இதற்கான பலனை நான் பார்ப்பேன்னு நினைக்கிறேன்’’ என நம்பிக்கையுடன் பேசுகிறார் சாந்தப்பன்.
தொடர்புக்கு:
சாந்தப்பன்: 97915 39757.

You may also like

Leave a Comment

twelve + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi