Tuesday, February 27, 2024
Home » தெற்கில் விடியல் பிறந்திருப்பதை போல விரைவில் நாடு முழுவதும் விடியல் பிறக்கும்: சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தெற்கில் விடியல் பிறந்திருப்பதை போல விரைவில் நாடு முழுவதும் விடியல் பிறக்கும்: சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Ranjith

சேலம்: ‘தெற்கில் விடியல் பிறந்திருப்பதை போல விரைவில் நாடு முழுவதும் விடியல் பிறக்கும்’ என்று சேலம் இளைஞரணி மாநில மாநட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி 2வது மாநில மாநாட்டில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடல்போல் திரண்டிருக்கும் திராவிடப் பட்டாளமே. கொள்கை பிடிப்பும், லட்சிய தாகமும் கொண்ட லட்சக்கணக்கான தம்பிமார்களான உங்களை வீரபாண்டியார் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் ஒருசேரப் பார்க்கிறபோது, எனக்கு பெரிய உற்சாகமும், மகிழ்ச்சியும் – ஏன் புத்துணர்ச்சி பிறக்கிறது.

தெற்கில் விடியல் பிறந்திருப்பதைப்போல விரைவில், இந்திய நாடு முழுவதும் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இருபது வயது குறைந்தது போன்று புது தெம்பு வருகிறது. திராவிட இயக்கம் தோன்றி நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1949 செப்டம்பர் 17 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் திரண்டிருந்த அதே கொள்கை உறுதியையும், லட்சிய வேட்கையையும் இன்றைக்கு லட்சக்கணக்கான இளைஞர்களான உங்களிடம் பார்க்கிறபோது, இந்த இயக்கத்தின் தலைவராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த உணர்வை உற்சாகத்தை – எழுச்சியை – ஏற்படுத்தி தந்திருக்கும், இளைஞரணி செயலாளர் உதயநிதியை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.  “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்” என்று அய்யன் வள்ளுவர் சொன்னதுபோல, அவரின் செயல்கள், கழகப் பணிகள் மக்கள் தொண்டு அமைந்திருக்கிறது. கழகத்திற்கான பணி- மக்களுக்கான பணி இரண்டிலும் எனக்கு துணையாக மட்டுமல்ல, தூணாக தம்பி உதயநிதி இருக்கிறார். அந்த உழைப்பை பார்த்துதான் நானும், பொதுச்செயலாளரும், தலைமைக் கழக நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைகிறோம்.

எனக்கு முப்பது வயது இருக்கும்போது தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் இளைஞரணியை உருவாக்கினார்கள். அவர்கள் எங்கள் மேல் வைத்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றியதுபோல என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றிக்கொடி கட்டும் கொள்கைப் படையாக இளைஞரணி செயல்பட்டு வருவதை, இந்த சேலம் மாநாடு, நாட்டுக்கே சொல்லிவிட்டது. “எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது” என்ற நம்பிக்கை ஊட்டும் மாநாடாக இந்த சேலம் இளைஞரணி மாநாடு அமைந்துவிட்டது. இவ்வாறு என்னை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வைத்த இளைஞரணிச் செயலாளர், மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் -துணை அமைப்பாளர்கள் என்று ஒட்டுமொத்த இளைஞரணி நிர்வாகிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் -நன்றியும்.

இளைஞரணி, என் தாய்வீடு, என்னை வளர்த்த -என்னை உருவாக்கிய இடம். 1980 முதல் கட்சிக்குள்ள புது ரத்தம் பாய்ச்சியது, இளைஞரணி. உழைப்பு – உழைப்பு -உழைப்பு என்று தலைவர் கலைஞர் என்னைப் பாராட்டினார். அந்த உழைப்புக்கு இளைஞரணி தம்பிமார்கள் என்னை உற்சாகம் ஊட்டிக்கொண்டே இருப்பார்கள். எப்போதும் நான் சுறு சுறுப்பாக இயங்குவதற்கு இன்னொரு முக்கிய காரணம் -என்னைச் சுற்றி இளைஞர்களே இருந்தார்கள். இளைஞர்களால் உருவான போர்க்கருவிதான் இந்த ஸ்டாலின். நான் மட்டும் அல்ல, ஏராளமான தளபதிகளை உருவாக்கிய ஈடு இணையற்ற அணிதான் இளைஞரணி.

எங்களால் உருவாக்கப்பட்ட பலரும் எம்.எல்.ஏ.,க்களாக, எம்.பி.,க்களாக, அமைச்சர்களாக, மாவட்டச் செயலாளர்களாக உயர்ந்தார்கள். நாளை அத்தகைய பொறுப்புகளுக்கு நீங்களும் வரலாம். வருவீர்கள். வர வேண்டும். 75 ஆண்டுகளாகியும் கழகம் இன்றைக்கும் கம்பீரமாக நிற்கிறது என்றால், அதற்கு நம்முடைய கொள்கை உரம்தான் காரணம். தமிழ்நாட்டின் வளத்திற்கும், நலத்திற்கும் காரணமானவர்கள் நாம். இதற்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. அந்த ஆபத்தை உணர்ந்து, தடுப்பதற்காகத்தான் இளைஞரணி மாநாட்டையே, மாநில உரிமை மீட்பு மாநாடாக நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

மொழியை அழித்து தமிழ்ப் பண்பாட்டை அழித்து மாநில மதிப்பை அழித்து அதன் மூலமாக தமிழினத்தை அழித்து, நம்மை அடையாளமற்றவர்களாக ஆக்குவதற்குப் பாசிச பா.ஜ திட்டமிட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாழ்படுத்திய கட்சி, அ.தி.மு.க. அவர்கள் அழிவு வேலைகள் அனைத்தையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. இப்போது அவர்கள் ஆடும் ’உள்ளே-வெளியே’ ஆட்டம், பா.ஜ போட்டுக் கொடுத்த நாடகம். பழனிசாமியின் பகல் வேஷத்தை அ.தி.மு.க. தொண்டர்களே நம்பத் தயாராக இல்லை, அதுதான் உண்மை.

பா.ஜ – அ.தி.மு.க. இவர்கள் இரண்டு பேரின் படுபாதக செயல்களை தடுப்பதுதான் நம் முன் இருக்கும் முக்கியக் கடமை. மாநிலங்களுக்குப் போதுமான அதிகாரங்களை வழங்கிவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ – அதை மட்டும் ஒன்றிய அரசு வைத்துக் கொண்டால் போதும். ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்பது கலைஞர் நமக்குக் கற்றுக் கொடுத்த முழக்கம். நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அந்த முழக்கம் இந்தியாவின் முழக்கமாக மாறப்போகிறது.

அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சியானது, மாநில உரிமைகள் வழங்கும் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் கவனம் செலுத்தும். தி.மு.க. அரசை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, மாநில அரசு உரிமைகள் என்று நான் சொல்லவில்லை. மாநிலங்களை ஆளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்று எந்தக் கட்சியாக இருந்தாலும் ஏன், பா.ஜ ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டும் என்று, எல்லா மாநிலங்களுக்குமான உரிமையாகத்தான் கேட்கிறோம்.

இதை இங்கு மட்டுமல்ல, அண்மையில் ஒன்றிய பிரதமர் திருச்சிக்கு வந்தபோது, அவரை மேடையில் வைத்துக்கொண்டே இதை சொன்னவன், இந்த ஸ்டாலின். இன்றைக்கு பிரதமராக இருக்கும் அவர், ஒரு காலத்தில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான். ஆனால், இன்றைக்கு மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியைத்தான் பிரதமராக வந்ததில் இருந்து மோடி செய்துகொண்டு இருக்கிறார். மாநில அதிகாரத்திற்கு உட்பட்டவைகளுக்கும் ஒன்றிய பா.ஜ அரசு சட்டங்களை இயற்றுகிறது. எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்வது இல்லை.

எதற்கும் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைக் கேட்பது இல்லை. புதிய கல்விக் கொள்கை, நீட், ஜி.எஸ்.டி என்று இவ்வாறு மாநிலங்களின் கல்வி நிதி அதிகாரத்தை முற்றிலுமாக பறித்து விட்டார்கள். ஒன்றிய அரசிற்கு பணம் தரும் கருவியாக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள். மிகப்பெரிய இயற்கைப் பேரிடர் காலத்தில்கூட நமக்காக உதவிகள் செய்வது இல்லை. இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ‘சும்மா திருக்குறள் சொன்னால் போதும். பொங்கல் கொண்டாடினால் போதும். அயோத்தியில் கோயில் கட்டினால் போதும். தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுப் போடுவார்கள்’ என்று ஏமாற்ற நினைக்கிறார்கள்.

அவர்கள் நம்மை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இது பெரியார் மண். பேரறிஞர் அண்ணாவின் மண். தலைவர் கலைஞரின் மண். நரேந்திர மோடி இரண்டு முறை பிரதமர் ஆகியிருக்கிறார். இரண்டு முறையும் தமிழ்நாட்டு மக்கள் அவர் பிரதமராக வாக்களிக்கவில்லை. இந்த முறையும் நிச்சயம் வாக்களிக்கப்போவது இல்லை. இந்த முறை தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவும் செயல்பட போகிறது. ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால், என்ன செய்கிறார்கள்? கட்சிகளை உடைப்பது. எம்.எல்.ஏ.க்களை இழுப்பது. ஆளுநர்கள் மூலமாகக் குறுக்கு வழியில் ஆட்சியை நடத்தப் பார்ப்பது. சொல்லப்போனால், பா.ஜவிற்கு வேட்டு வைக்க வேற யாரும் வேண்டாம்.

ஆளுநர்களே போதும். அவர்களே அந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடித்திடுவார்கள். நாம் உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணி அமைக்கும் ஆட்சி, ஒற்றைக்கட்சி ஆட்சியாக இருக்காது. சர்வாதிகார ஆட்சியாகவும் இருக்காது. கூட்டாட்சியாக இருக்கும். மாநிலங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்கும். தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யும் ஆட்சியாக இருக்கும். இந்தியாவை அனைத்து வகையிலும் முன்னேற்றும் ஆட்சியாக இருக்கும். அதற்கான பணி நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது. தேர்தல் பணி தொடக்கமாக, சேலம் மாநாட்டுக்கு முன்பே மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டணியைப் பற்றியும் -யார் வேட்பாளர் என்பதையும் தலைமையின் கையில் விட்டுவிடுங்கள். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்று முன்பே நான் சொல்லி இருக்கிறேன். யார் வெற்றி பெறுவார்களோ, அவர்கள்தான் வேட்பாளர். இது உறுதி.
பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடி முகவர்கள் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான நிர்வாகிகள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கிறார்கள் நாற்பதும் நமதே. நாடும் நமதே என்று நாளை முதல் புறப்படுங்கள். வருகின்ற மூன்று மாத காலம் நீங்கள் உழைக்கும் உழைப்பில் தான் இந்தியாவின் அடுத்த ஐந்தாண்டு எதிர்காலம் அடங்கி இருக்கிறது. உங்கள் உழைப்பை முழுமையாக வழங்குங்கள்.

நம் அனைவரின் ஒற்றை நோக்கம் இந்தியா கூட்டணியை வெல்ல வைப்பது. இந்தியாவை வெல்வது. இது தான் சேலம் மண்ணில் நின்று இந்த நாட்டுக்கு நாம் சொல்லும் செய்தி. என் உயிரினும் மேலான இளைஞரணி தம்பிமார்களே உதயநிதி மட்டுமல்ல, நீங்கள் அனைவருமே எனது மகன்கள் தான். உங்கள் ஒவ்வொருவரையும் எனது மகனாக கழகத்தின் கொள்கை வாரிசுகளாகத்தான் பார்க்கிறேன். உங்கள் அனைவரையும் இங்கிருந்தபடியே அரவணைத்து அணைத்துக் கொள்கிறேன். உங்களால் நான் இப்போது லட்சம் பேரின் சக்தியைப் பெற்றுவிட்டேன். சேலத்தில் சூளுரைப்போம். சேர்ந்து எழுவோம். இந்தியா கூட்டணி வெல்லட்டும். அதனை காலம் சொல்லட்டும். நாற்பதும் நமதே-நாடும் நமதே. இவ்வாறு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

* இந்தியாவில் இதுவரை நடத்தப்படாத மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், ‘இந்தியாவில் இதுவரை நடத்தப்படாத மாநாடு. 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான மாநாட்டு அரங்கத்தைச் சுற்றிலும் 5 லட்சம் உடன்பிறப்புகள் கலந்துகொள்ள, மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. கழகத் தோழர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.

* தமிழ்நாட்டின் வளத்திற்கும், நலத்திற்கும் காரணமானவர்கள் நாம். இதற்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. அந்த ஆபத்தை உணர்ந்து, தடுப்பதற்காகத்தான் இளைஞரணி மாநாட்டையே, மாநில உரிமை மீட்பு மாநாடாக நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

* இன்றைக்கு பிரதமராக இருக்கும் அவர், ஒரு காலத்தில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான். ஆனால், இன்றைக்கு மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியைத்தான் பிரதமராக வந்ததில் இருந்து மோடி செய்துகொண்டு இருக்கிறார்.

* தமிழினத்தை அழித்து, நம்மை அடையாளமற்றவர்களாக ஆக்குவதற்குப் பாசிச பா.ஜ. திட்டமிட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாழ்படுத்திய கட்சி, அ.தி.மு.க.

* ‘சும்மா திருக்குறள் சொன்னால் போதும். பொங்கல் கொண்டாடினால் போதும். அயோத்தியில் கோயில் கட்டினால் போதும். தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுப் போடுவார்கள்’ என்று ஏமாற்ற நினைக்கிறார்கள்.

* கண்ணாடி பாக்சில் நீட் விலக்கு கையெழுத்து அட்டைகள்
திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் கையெழுத்து வாங்கப்படும் என இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி சுமார் ஒரு கோடிக்கும் மேலான கையெழுத்து போட்ட அட்டையை தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் கொடுத்திருந்தனர். அதில், ‘நீட் விலக்கு நம் இலக்கு’, என அந்த கார்டில் கையெழுத்து போட்டிருந்தனர்.

அவ்வாறு கையெழுத்து பெறப்பட்ட அனைத்து கார்டுகளும் மாநாட்டின் கொடிக்கம்பம் அருகே வைத்திருந்த பெரிய அளவிலான கண்ணாடி பாக்ஸில் போடப்பட்டிருந்தது. இவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கொடிக்கம்பம் அருகே நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவுக்காக நுழைவு வாயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொடிக்கம்பம் அருகே மாநாட்டின் சுடர் ஓட்ட தீபமும் எரிந்துகொண்டிருந்தது.

* 2.5 லட்சம் பேருக்கு ‘கமகம’ விருந்து
திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டில் பங்கேற்கும் இளைஞரணியினர், கட்சியினருக்கு தரமான உணவு வழங்கப்பட்டன. இதற்காக மாநாட்டு பந்தலின் வலது புறத்தில் 2 இடங்களிலும், இடது புறத்தில் மிக நீளமான சமையல்கூடமும் அமைக்கப்பட்டு, சமையல் செய்யும் பணி நேற்று முன்தினமே தொடங்கி நடந்தது. சைவ உணவு வகையான வெஜிடெபிள் பிரியாணி, பிரட் அல்வா, கோபி 65, தயிர்சாதம், ஊறுகாய், கத்திரிகாய் தொக்கு போன்றவை வழங்கப்பட்டது. அசைவ உணவாக மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, கத்திரிகாய் கட்டா, தயிர் சாதம், ஊறுகாய் ஆகியவை வழங்கப்பட்டன. மாநாட்டு சமையலுக்காக 5 ஆயிரம் ஆடுகள், 15 ஆயிரம் கோழிகள், 30 டன் காய்கறிகள் கொண்டுவரப்பட்டது.

100 சமையல் மாஸ்டர்கள், அவர்களுக்கு 500 உதவியாளர்கள், இதர பணிக்கு 6,500 தொழிலாளர்கள் என சமையல் பணியில் மட்டும் 7 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். சமையல் பணியை 10 டிரோன் கேமராக்கள் மூலம் அதற்கென ஒதுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கண்காணித்தனர். 2 லட்சம் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அசைவமும், 50 ஆயிரம் நிர்வாகிகளுக்கு சைவ உணவும் வழங்கப்பட்டது. உணவு ருசியாக, தரமாக இருந்ததாக தொண்டர்கள் தெரிவித்தனர்.அதே போல், மாநாட்டில் பங்கேற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொரியல், வடை, பாயசம் உள்ளிட்ட 21 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

* அமைச்சர் நேருவுக்கு முதல்வர் பாராட்டு
‘‘இந்த மாநாடு இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறக் காரணமானவர் நம்முடைய முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், “மாநாடு என்றால் நேரு-நேரு என்றால் மாநாடு”. மாநாடு நடக்கும் இடத்தில் நேரு இருப்பார். ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று, எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.

அப்படிப்பட்ட நேருவுக்கும், அவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றிய ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயலாளர்களான ராஜேந்திரன், சிவலிங்கம், செல்வகணபதி ஆகியோருக்கும், சேலம் மாவட்டக் கழகங்களின் அனைத்து நிர்வாகிகளுக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகள் -வாழ்த்துகள்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

* சோனியா, கேரள முதல்வர் வாழ்த்து
திமுக இளைஞரணி மாநாட்டுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமென வரையறுக்கும் அரசியல் சாசனப்பிரிவு 1-ஐ வலியுறுத்தி நாட்டின் கூட்டாட்சி முறையை உறுதிப்படுத்தவென நடத்தப்படும் திமுக இளைஞரணி 2ம் மாநில மாநாடு இந்தியாவுக்கான ஒரு நல்ல எதிர்காலத்துக்கு வழிகோலட்டும்’’ என்று தெரிவித்து உள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘பொருளாதார ரீதியிலும் சட்ட வழிகளிலும் அதிகார அமைப்புகளை கொண்டு இந்தியாவின் கூட்டாட்சியை ஒன்றிய அரசு தொடர்ந்து பலவீனமாக்கி வருகிறது. இத்தக்கைய சூழலில் மாநில உரிமைகளை மீட்கும் அரைகூவலோடு நடத்தப்படும் திமுக இளைஞரணி 2ம் மாநில மாநாடு வெல்ல வாழ்த்துகிறேன்’’ என்று கூறி உள்ளார்.

* ஏஐ மூலம் கலைஞர் வாழ்த்திய வீடியோ வைரல்
சேலத்தில் நடந்த மாநாட்டில், 1,500 டிரோன் ஷோ உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. இதற்கிடையே, மாநாட்டிற்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து சொல்வது போல், சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி வைரலானது. அதில், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி 2வது மாநில மாநாடு நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில், மாநில உரிமைகள் பறி போய்விட்டது. கல்வி உரிமைகள், மொழி உரிமை, நீதி உரிமை, சட்ட உரிமை, மாநிலங்களின் உரிமையை ஒன்றிய அரசு அபகரிப்பு செய்கிறது.

ஜனநாயக நெறிமுறைகளை கொண்ட, ஜனநாயக பாசறையான திமுக அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சி அல்ல. நெல்லையில் 2007ம் ஆண்டு திமுக இளைஞரணி மாநாடு, தம்பி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. வெள்ளிவிழா மாநாடாக சிறப்பாக நடந்தது. அதில் அடுத்த தலைமுறையினரை கழகத்தில் சேர்க்க ஈர்த்தது. 1970ம் ஆண்டு திமுக மாநில மாநாடு திருச்சியில் நடத்தினேன். அதில் 5 முழக்கங்களை அறிமுகப்படுத்தினேன். அதில், 5வது முழக்கம் தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதாகும். தற்போது 2024ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், கழக வீரர்களை தயார்படுத்தும் பயிற்சி பாசறையாக இந்த மாநாடு அமையும்.

தம்பி உதயநிதி தலைமையில், மாங்கனி மாவட்டமாம் சேலத்தில், 2வது மாநில மாநாடு நடக்கிறது. இது ஜனநாயகத்தையும், மாநில உரிமையையும் மீட்டெடுக்க உழைத்திடும். ஓயாமல் உழைத்திடும் நம்மை காக்க, மாநிலத்தை காக்க உழைக்கும் கண்மணிகள், நாட்டை காத்திட அழைக்கிறேன். நாற்பதும் நமதே, நாடும் நமதே. பெரியாரின் பேரனாய், அண்ணாவின் தம்பிக்கு தம்பியாய், எனது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளாய் சேலத்திற்கு அழைக்கிறேன். சமத்துவம், சமுதாயம் காக்க மாநிலத்தின் நியாயமான உரிமைகளை மீட்கும் குரலை உயர்த்துவோம். மாநில உரிமைகளை மீட்டெடுப்போம். இருவண்ண கொடியை உயர்த்தி பிடிப்போம். இவ்வாறு வீடியோவில் இருந்தது.

You may also like

Leave a Comment

11 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi