புதுடெல்லி: ஷபீர் ஷா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஜம்முவில் உள்ள பிரிவினைவாத தலைவர் ஷபீர் அகமது ஷா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சி மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையில்,’ ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியின் சட்ட விரோதச் செயல்கள் உடனடியாகத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாவிட்டால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிராந்திய ஒருமைப்பாடு, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் தேச விரோதச் செயல்களைத் தொடரும் என்று ஒன்றிய அரசு கருதுகிறது. எனவே ஷபீர் அகமது ஷா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சிக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது ‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.