தார்: உடனே அமல்படுத்தாவிட்டால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி என்ன பயன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். மத்தியபிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தார் மாவட்டத்தில் உள்ள மோகன்கெடா என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு பெண்களை நகைச்சுவையாகக் கருதுகிறது.
ஏனெனில் புதிதாக இயற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை இன்னும் 10 ஆண்டுகளுக்கு அமல்படுத்த முடியாது. நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், அனைத்து எதிர்க்கட்சிகளும் அதை ஆதரித்தோம். ஆனால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு இதை அமல்படுத்த முடியாது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தும் முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி மக்களவை தொகுதிகள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படியானால் இந்த அறிவிப்பில் என்ன பயன்?. பெண்களை நகைச்சுவையாக நடத்துகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தலுக்கு பின் முதல்வராக சவுகான் இருக்க மாட்டார்: பிரியங்கா காந்தி பேசும் போது,’ மபி தேர்தலில் எனக்கு வாக்களியுங்கள் என்று மோடி கூறுகிறார். முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பற்றி அவர் பேசவில்லை. தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சராக சிவராஜ்சிங் சவுகான் இருக்க மாட்டார். மத்தியப் பிரதேசத்தில் பாஜவின் 18 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. நர்மதா நதி தொடங்கி உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவில் வரை பா.ஜவின் ஊழல் நீண்டுள்ளது’ என்றார்.