Saturday, June 22, 2024
Home » நானும் இன்ட்ரோவர்ட்தான் நிஜம் என்ன?

நானும் இன்ட்ரோவர்ட்தான் நிஜம் என்ன?

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

உளவியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

நானும் இன்ட்ரோவர்ட்தான் (உள்முகச் சிந்தனையாளர்) என்று தன்னை உலகிற்கு பிரகடப்படுத்திக் கொள்வதை இன்று சமூக வலைத்தளங்களிலும், அவரவர் முகப்புகள், அறிமுகக்குறிப்புகளிலும் காண்கிறோம். இவர்களில் பலரும் உண்மையிலேயே இன்ட்ரோவர்ட்தானா என்ற ஒரு கேள்வி இயல்பாக எழுகிறது. அவரவரின் நேரியல் அல்லது எதிர்மறைப் பண்புகளையொட்டிய தவறான புரிதலின் காரணமாக தன்னை அவ்வாறு அறிவித்துக் கொள்ளும் போக்கு பரவலாகியுள்ளது.

ஏனெனில், ஈர்ப்பும் தனித்துவம் வசியமும் கொண்டதாக இன்ட்ரோவர்ட் தன்மை பார்க்கப்படுகிறது. மூடியிருக்கும் பாத்திரத்தைத் திறந்து அறியத்தான் பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.எனவே, பலரும் குறிப்பாக இளைய தலைமுறை தங்களை இன்ட்ரோவர்ட் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.

முந்தைய காலத்தில், ஒருவர் அதிகமாக பேசாமல், தனக்குள் மூழ்கியிருந்தால் “மச மசனு இருக்காத..” “மூத்தது மோள எளயது காள..” “சூட்டிப்பா சுறுசுறுனு இரு” “உம்மணாமூஞ்சியாட்டம் இருக்காத ஒட்டி உறவாடணும்” “ ஒறம்பர வந்தா கூடிப் பேசணும்“ அசமஞ்சமா இருக்காத” என்று பெரியோர் சொல்வர். தனியாக ஒதுங்கி சமூகத்தோடு இணக்கமில்லாமல் இருப்பது மனிதர்களை வெறுக்கும்தன்மையாகி விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு கூறுவார்கள். ஆனால் இன்று மனிதர்களோடு பழகுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்த்தலும் மனிதர்களே தேவையில்லை என்ற ஒரு அபாயகரமான மனநிலையை நோக்கியும் செல்வதற்கான ஒரு வழிகோலாகவும் இன்ட்ரோவர்ட் பாதை சிலரால் சாதகமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

உளவியல் வரையறையின்படி யார் இன்ட்ரோவர்ட் என்றால், தனக்குள்ளே இருக்கும் சிந்தனைகளில் மூழ்கி, தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதில், திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைமையைக் (Systamatic) கொண்டிருக்க விரும்புபவர் எனலாம். ஒரே நேரத்தில் பலவற்றை செய்வது குழப்பங்களும், மனச்சிக்கல்களையும் அவர்களுக்கு உருவாக்கக்கூடும். ஆழமானவர்கள் இவர்கள்.

சில விஷயங்களை ஆர்வமாக, நுட்பமாகச் செய்வதிலும் திறன்மிக்கவர்களாக இருப்பர். தனிமை விரும்பிகளாகவும் இருக்கிறார்கள். தனக்கு எது தேவை, எது பிடிக்கும் என்பதான நிலைப்பாடுகளைத் தெளிவாக அறிந்திருப்பார்கள். எனவே, மற்றவர்கள் மீதான எதிர்பார்ப்பு இவர்களுக்கு சற்று குறைவு. தன் நிலையில் மிகவும் திருப்திகரமாக இருக்கின்றபடியால் அவர்களுக்கான ஊக்க சக்தியை புறக்காரணிகளிலிருந்து பெற வேண்டும் என்று எண்ணாதவர்கள்.

வெளிமுகச் சிந்தனையாளர்களோ, மற்றவர்களுடைய அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள். பிறரைச் சார்ந்து தங்களுடைய மகிழ்ச்சியைக் கட்டமைத்துக் கொள்பவர்கள். உள்முகச் சிந்தனையாளர்களின் அடிப்படை குணாதிசயம் என்று கருதப்படுவது தங்களுடைய மகிழ்ச்சியே தங்களிடத்திலேயே கண்டு கொள்வார்கள் என்பதே.

ஆராய்ச்சியாளர்கள், கல்வியில் உயரிய சாதனைகளைப் படைத்தவர்கள், நூலகர்கள் அல்லது புத்தகங்களோடு பிணைப்பைக் கொண்டவர்கள் போன்ற நபர்கள் உள்முகச் சிந்தனையாளர்களாக அதிகம் இருந்திருக்கிறார்கள் என்று வரலாறு சொல்கிறது. அதற்காக வெளிமுகச் சிந்தனையாளர்களில் இத்துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஒப்பீட்டு விகிதத்தில் உள்முகச் சிந்தனையாளர்கள் பெரும்பாலும் இத்துறைகளில் காணப்படுகிறார்கள். ஆனால் பெரும் முரணாக இன்று கல்வியை, வாசிப்பை வெறுக்கக்கூடிய சிலரும் தம்மை இன்ட்ரோவர்ட் என்று கூறிக்கொள்கிறார்கள்.

அமெரிக்கன் சைக்யாட்ரிக் அஸோஸியேஷன் (DSM 4,5) பட்டியலிட்டுள்ள உளவியல் சீர்கேடுகளில் வருகின்ற முறையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய சமூகத்துக்கு முரணான (Anti social), தவிர்க்கும் பண்புகொண்ட (Avoidant) துவக்க அறிகுறிகளை, சாத்தியங்களைக் கொண்டிருப்பவர்கள் சிலரும் தங்களை இன்ட்ரோவர்ட் முகமூடியில் பூட்டிக் கொள்கிறார்கள். சமூக விரோத, சமூகம் ஏற்றுக் கொள்ளாத செயல்களை செய்ய இது பயன்படலாம்.

இது சமூகப் பதற்றம் (Social Anxiety) எனப்படும் சமூகத்தோடு இணக்கமாக பழக இயலாத நிலையின் அடுத்த கட்டமாகும். கூட்டமாக இருக்கக்கூடிய விருந்து கொண்டாட்டம், விழாக்கள் இவற்றைத் தவிர்ப்பது, புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்வது, அறிமுகம் இல்லாதவர்களோடு தானாகப் பழகி நட்பை வளர்ப்பது போன்றவற்றை தவிர்க்கக்கூடியவர்கள் இன்ட்ரோவர்ட் என்று கூறிக்கொள்ளலாம். ஆனால், தொடர்புமொழித் திறன் குறைபாட்டை (Communication skills defect) சிலர் இன்ட்ரோவர்ட் என்று புரிந்துகொள்கிறார்கள். கம்யூனிகேஷன் குறைபாடு கொரோனா பெருத்தொற்றுக் காலத்திற்குப் பிறகு மிகப் பெரிய பாதிப்பாக மாறியுள்ளது.

தொடர்பு மொழியின் சிக்கல்கள் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அபிப்ராயம் (Selective perception) எனும் நிலை உருவாகிறது. அதாவது, இருவழிப் பாதையாக இருந்த தொடர்புறுத்தல் ஒருவழிப் பாதையாக மாறுகிறது. இதன் மூலம் ஒரு பகுதி உரையாடல் அல்லது தகவல் மட்டுமே மனதில் பதிகிறது. இதுவே தேர்ந்தெடுக்கப்பட்ட அபிப்ராயத்தை உருவாக்குகிறது. இது ஒருவித சுயகருத்தை (self Concept) வடிவமைக்கிறது. இருவழிப் பாதை தொடர்பு (Two way communication) எனும் தன்மையிலிருந்து விலகி ஒருவர் மட்டுமே பேசுவது, கவனக்குவிப்பின்மை, புரிதலின்மை, நம்பிக்கையின்மை போன்றவற்றையும் எதிர்மறைத்தன்மையும் (Pessimist) உருவாக்குகிறது. இது வளர்ச்சியை நோக்கிய மேம்பாட்டையும் அதன் செயல்திறனையும் அழிக்கக் கூடியதாகும்.

தன்னைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் தொடர்புமொழித் தடைகளை நீக்க முன் வருவார்கள். ஆனால், அவர்களை அறியாமலே என்னில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்ற சித்தனையோட்டத்தின் தீவிரம் முன்னேற்றம் அல்லது மாற்றம் தேவையில்லை என்று அதீத இன்ட்ரோவர்ட் தன்மையாகி விடும் ஆபத்து இருக்கிறது. எனவே, மாற்றங்களுக்கான சாத்தியங்களை வரவேற்கும் மனநிலையை நோக்கி நகர்வதே நலன் பயக்கும் என்பதை உளவியலும், சமூகவியலும் வலியுறுத்திக் கூறுகிறது.

ஐக்யூ (IQ) எனப்படும் அறிவுசார் குறியீட்டளவு குறித்து ஈர்க்கப்பட்டுப் பேசிய நிலை தற்காலத்தில் வழக்கொழிந்து, ஈக்யூ (EQ) எனப்படும் உணர்வுகளின் திறன் பரவலாகப் பேசப்படுகிறது. உறவுச்சிக்கல்கள் அதிகரித்து வருகின்றமையால் ஈக்யூ (EQ) குறைபாடுள்ளவர்கள் அதாவது தங்களுடைய உணர்வுகளைச் சரியாக பொருத்தமான நேரத்தில் வெளிப்படுத்துவதில்லை. பலரும் தங்களை இன்ரோவர்ட் என்ற போர்வையில் மூடிக் கொண்டு பிரச்னைகளை இன்னும் கடினமாக்கிக்கொள்வது இன்று உளவியல் எதிர்கொள்ளக்கூடிய பெரும் சவாலாகியுள்ளது.

மேலும், க்ரியேட்டிவிட்டி (Creativity) எனும் புத்தாக்கச் சிந்தனை, புதிய கோணங்களில் அணுகுவது போன்ற சிறப்புப் பண்புகள் இன்ட்ரோவர்ட்டுகளுக்கு உண்டென அறிந்ததோ, அறியாமலோ சிலர் தங்களை இன்ட்ரோவர்ட் என்று கூறிக் கொள்கிறார்கள். உண்மையில் கூர்ந்து அவதானித்தால் அவர்களிடம் கிரியேட்டிவிட்டிக்கான கூறுகள் எதுவும் இருக்காது. கண்மூடித்தனமாக எவர் எது சொன்னாலும் மறுப்பது எனும் மனநிலையைக் கொண்டிருப்பதன் மூலம் தங்களை அறிவுக்கூர்மை கொண்டவர்களாக, புத்தாக்கச் சிந்தனையாளர்
களாகக் காட்டிக் கொள்ளும்நிலை உள்ளது. அதாவது, கவர்ச்சிக்குரிய நபராக காட்டிக் கொள்வதன் மூலமாக உறவு நிலையில், சமூகத்தில் உயர்ந்த மதிப்பீடு பெற முயலும் நிலை இங்கே வெளிப்படுகிறது.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi