பெங்களூரு: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் இலகுரக தேஜஸ் இரட்டை இருக்கை போர் விமானம் இந்திய விமானப்படையிடம் வழங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) இந்திய விமானப்படைக்காக முதல் இலகுரக தேஜஸ் இரட்டை இருக்கை போர் விமானத்தை தயாரித்து வழங்கி உள்ளது. பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்தில் நடந்த இதற்கான விழாவில் ஒன்றிய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதாரி ஆகியோர் பங்கேற்றனர்.
எச்ஏஎல் நிறுவனத்திடம் 18 தேஜஸ் இரட்டை இருக்கை விமானங்களுக்கு இந்திய விமானப்படை ஆர்டர் கொடுத்துள்ளது. இதில், 2023-24ம் ஆண்டில் 8 விமானங்களும் மீதமுள்ளவை 2026-27ம் நிதியாண்டிற்குள்ளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானம் பயிற்சி நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும். தேவைப்படும் சமயத்தில் போர் விமானமாகவும் மாற்றிக் கொள்ள முடியும். இதில், தற்கால நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய வசதிகளுடன் கூடிய போர் விமானங்களை வைத்துள்ள உயரடுக்கு நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.