சென்னை: ‘சாதி வெறி ஆணவக் கொலைகளை தடுக்க வலுவான சட்டம் நிறைவேற்ற வேண்டும்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரியில் தண்டபாணியின் மகன் சுபாஷ் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், அவரையும், அவரது மருமகள் அனுசூயாவையும், தண்டபாணியின் தாயார் கண்ணம்மாள் வீட்டுக்கு வஞ்சகமாக வரவழைத்து, பாசம் காட்டி ஏமாற்றி, அசந்து தூங்கும் நேரத்தில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். தண்டபாணியின் கொலை வெறித் தாக்குதலை தடுத்த அவரது தாயாரையும் வெட்டியுள்ளார்.
இந்த சாதி வெறித் தாக்குதலில் கண்ணம்மாள், சுபாஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டனர். மருமகள் அனுசூயா படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத சாதி, மதவெறி கருத்துக்களும், வெறுப்பு அரசியலும் பரப்பப்படுவதால் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மூடப்பழக்க வழக்கங்களை அழித்து, அறிவியல் கண்ணோட்டம் வளர்க்கும் சமூக சீர்திருத்தப் பணிகளுடன், ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வலுவான தனி சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.