Tuesday, July 23, 2024
Home » இந்தியாவின் வெற்றிக் கணக்கு தமிழ்நாட்டில் தொடங்கி எழுதப்படட்டும்: தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடந்த பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்தியாவின் வெற்றிக் கணக்கு தமிழ்நாட்டில் தொடங்கி எழுதப்படட்டும்: தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடந்த பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Karthik Yash

சென்னை: இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் எழுதப்பட வேண்டுமென்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இம்முறை இந்தியாவின் வெற்றிக்கணக்கைத் தமிழ்நாட்டில் தொடங்கி எழுத, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று வேட்பாளர்கள் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மத்திய சென்னை தொகுதி, தென்சென்னை தொகுதியை இணைக்கும் வகையில் மைய பகுதியான பெசன்ட்நகரில் நேற்று மாலை நடைபெற்ற பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.

பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாநில சுயாட்சிக் குரலாக ஒன்றியத்தில் ஒலித்து, கலைஞரின் மனச்சாட்சியாக விளங்கிய அண்ணன் முரசொலி மாறன் வென்ற தொகுதியான மத்திய சென்னை தொகுதிக்கும் சேர்த்தே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய சென்னை வாக்காளப் பெருமக்களுக்கு திமுக வெற்றி வேட்பாளர் தயாநிதி மாறனை தனியாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக, ஒன்றிய அமைச்சராக, மத்திய சென்னையின் குரலாக மட்டுமல்ல, தமிழ்நாட்டு உரிமைக்குரலாக ஒலித்தவர்.

ஒன்றிய அமைச்சராக இருந்தபோது, உலகப் புகழ்பெற்ற மின்னணு நிறுவனங்களைத் தொழில் தொடங்க இந்தியாவுக்கு அழைத்து வந்தவர். கலைஞரின் மனசாட்சியான முரசொலி மாறனின் அன்பு மகன். மீண்டும் மத்திய சென்னைக் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க, தயாநிதி மாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், திமுக வெற்றி வேட்பாளராகத் தமிழச்சி தங்கப்பாண்டியன் போட்டியிடுகிறார். கலைஞரின் அன்பைப் பெற்ற மறைந்த தங்கப்பாண்டியனின் அன்புமகள்.

திராவிடத்தின் குரலாக, தென் சென்னையின் குரலாக தமிழச்சி தங்கப்பாண்டியன் குரல் மீண்டும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒலித்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவர்கள் இருவரையும், கடந்த தேர்தலை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தயாராகிவிட்டீர்களா? அதற்குப்பிறகு என்ன? வெற்றி உறுதி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசிக்கொண்டு இருக்கிறது. இதற்குக் காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகார மனப்பான்மை. இப்போது நடுநிலை வாக்காளர்களும் பாஜவின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டு, வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

மோடியும், பாஜவும் என்ன சொல்கிறார்கள்? நீங்கள் இதை சாப்பிடக் கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள். நாங்கள் பாஜவிடம் சொல்வது, மக்கள் என்ன சாப்பிட்டாலும், நீங்கள் தயவு செய்து அந்தச் சோற்றில் மண்ணை அள்ளி மட்டும் போடாதீர்கள். நிறைய பேர், இரவு 12 மணிக்கு தனியாக இருந்து கூட பேய்ப் படம் பார்த்துவிடுவார்கள். ஆனால், மோடி நைட் டி.வி.யில் பேசப்போகிறார் என்று சொன்னால், பலரும் நெஞ்சு படபடத்துவிடும். அந்தளவுக்கு, நாட்டு மக்களை மனரீதியாக பயத்திற்கு ஆளாக்கியிருப்பவர் தான் பிரதமர் மோடி. திடீர் என்று ஒருநாள் இரவு டி.வி.யில் வந்தார். ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று சொன்னார். எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டு, அதற்கு தினம் தினம் புதிய புதியதாக ரூல்ஸ் கொண்டு வந்தார். கேட்டால், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று வசனம் பேசினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்கள் மேல் நடத்தப்பட்ட முதல் தாக்குதல். தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சி வெறும் டிரெய்லர் தான் என்று பஞ்ச் டயலாக் வேறு பேசுகிறார். பிரதமர் மோடி அவர்களே… உங்களுடைய டிரெய்லரே இப்படி கர்ண கொடூரமாக இருக்கிறதே. உங்கள் படம் ஓடும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாகப் படம் ரிலீஸ் ஆகப்போவதே இல்லை. மோடிக்கு மூன்றாவது முறை வாய்ப்பு என்பது, இந்த நாட்டு மக்கள், தங்களின் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதற்கு சமம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் இந்தியா வளம் பெறும், குறிப்பாகத் தமிழ்நாடு அதிகமாக வளம்பெறும்.

மகளிர், மாணவர்கள், முதியோர், இளைஞர்கள், சிறுபான்மையினர், சமூகநீதி என்று எல்லா தளங்களிலும் நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மூன்றாண்டுகால ஆட்சிக்கே இப்படி பட்டியல் போடுகிறோமே பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட ஏன் செய்யவில்லை என்று ஆற அமரக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஓட்டு போடும் முதல் தலைமுறையும் சிந்தித்துப் பாருங்கள், பாஜக திரும்ப வந்தால், அடுத்தடுத்து வரும் நம்முடைய தலைமுறைகள் ஒற்றுமையாக வாழ வழி இல்லாத நாடாக இந்தியா மாறிவிடும் என்று எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.

நடப்பது இந்தியாவை யார் ஆளவேண்டும் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல். இந்தியா கூட்டணி தான் ஆளவேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், அதிமுகவையும், பழனிசாமியையும் கேட்டால், யார் ஆளவேண்டும் என்று சொல்லாமல், யார் ஆளக்கூடாது என்று சொல்லாமல் யார் தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல், எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் பீ-டீமாக, பாஜகவுக்கு ஆதாயம் தேடித்தரக் களத்திற்கு வந்திருக்கிறார் பழனிசாமி. இவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏன், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரிகள்.

தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜ, தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அதிமுக என்ற இந்த துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்துங்கள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குத் துணைநிற்கப் போகும் இந்தியா கூட்டணியின் ஒன்றிய அரசை ஆட்சியில் அமர்த்துங்கள். அதற்கு, மத்திய சென்னை வாக்காளப் பெருமக்கள் தயாநிதி மாறனுக்கும், தென்சென்னை வாக்காளப் பெருமக்கள் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் எழுதப்பட வேண்டுமென்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இம்முறை இந்தியாவின் வெற்றிக்கணக்கைத் தமிழ்நாட்டில் தொடங்கி எழுத, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பிரசார பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போனஸ், மயிலை த.வேலு எம்எல்ஏ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசிக்கொண்டு இருக்கிறது.
* நிறைய பேர், இரவு 12 மணிக்கு தனியாக இருந்து கூட பேய்ப் படம் பார்த்துவிடுவார்கள். ஆனால், மோடி நைட் டி.வி.யில் பேசபோகிறார் என்று சொன்னால், பலருக்கும் நெஞ்சு படபடத்துவிடும்.
* பத்தாண்டுகால ஆட்சி வெறும் டிரெய்லர் தான் என்று மோடி பஞ்ச் டயலாக் பேசுகிறார். டிரெய்லரே கர்ண கொடூரமாக இருக்கிறது. உங்கள் படம் ரிலீஸ் ஆகப்போவதே இல்லை.
* தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குத் துணைநிற்கப் போகும் இந்தியா கூட்டணியின் ஒன்றிய அரசை ஆட்சியில் அமர்த்துங்கள்.

You may also like

Leave a Comment

ten − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi