Saturday, December 2, 2023
Home » ராகு-கேது பெயர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது?

ராகு-கேது பெயர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது?

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

என்ன செய்ய வேண்டும்?

ராகு – கேது பெயர்ச்சி நடந்திருக்கிறது. 8.10.2023 பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் ராகு பகவானும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் கேது பகவானும் நுழைந்துவிட்டன. 8.10.2023 முதல் 26.4.2025 வரை ராகு பகவான் மீனத்திலும், கேது பகவான் கன்னியிலும் இருந்து பலன் தருவார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிகளுக்கு மாறக்கூடியது ராகு -கேது. உண்மையில் இவை கிரகங்கள் அல்ல.

சாயா கிரகங்கள் (nodes) என்று சொல்லுவார்கள். ஆயினும் இந்த சாயா கிரகங்களுக்கு மற்ற கிரகங்களுக்கு இல்லாத சில தனித்துவங்கள் (unique) உண்டு. இவை வக்கிரகதியில் இயங்கும் கிரகங்கள். எல்லா கிரகங்களும் கடிகார சுற்றில் (clockwise) சுழன்று வரும் பொழுது, இந்த கிரகங்கள் மட்டும் அப்பிரதட்சனமாக அதாவது இடமாக (anti clockwise) சுற்றுவார்கள். இவர்களுக்கு மூன்று, ஏழு, பதினொன்றாம் இடம் பார்வை உண்டு என்று சில ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை. எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தினுடைய சக்தியை ஆகர்ஷணம் செய்வதோடு, தன்னோடு சேர்ந்த, பார்த்த கிரகங்களின் காரகத்துவ பலன்களை தாங்களே வாங்கி தருகின்ற சக்தி படைத்தவர்கள். வக்ரகிரகமாக இருப்பதால் இதை போன்ற ஒரு வக்கிர நிலையில் உள்ள கிரகங்களோடு சேரும்பொழுது சக்தி அதிகமாகும். தீமையான கிரகங்கள் எதிர்மறையாக நன்மையை செய்ய ஆரம்பித்துவிடும். இவைகள் எல்லாம் ஜோதிட நுட்பங்களாக நம்முடைய முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

இன்னொரு விதத்தில் இவைகள் எல்லாம் மனித குணங்களின் வெளிப்பாடுகள் என்றும் சொல்லலாம். நாம் ஏற்கனவே கூறியது போல, பிரமாண்டமான சிந்தனை படைத்தவர்கள், இந்த கிரகங்களின் தன்மையோடு இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஒருவர் வீடு கட்டுவார் ஆனால் அவர் சிறியதாக கட்டுவதற்கு முயற்சி செய்ய மாட்டார். சக்தி இருக்கிறதோ இல்லையோ மற்றவர்களைவிட சற்று பெரிய அளவிலேயே கட்ட வேண்டும் என்று திட்டமிடுவார். வீட்டில் ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்றாலும்கூட அதை கடன் வாங்கியாவது பிரமாண்டமான அளவில் செய்வார். தன்னை பற்றி உலகம் பேச வேண்டும் என்று நினைப்பார். இப்படிப்பட்ட எண்ணம் படைத்தவர்கள் ராகு பகவானின் ஆதிக்கத்தில் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அநேகமாக அவர்களுடைய ஜாதக கட்டங்களிலும் ராகு பகவான் தனி ஆற்றலோடு இருப்பது தெரியும். ராகுவின் காரகத்துவங்கள் அத்தனையும் அவரிடம் பிரதிபலிப்பதைக் காணலாம். அது போலவே, கேது. கேதுவினுடைய தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், அருணகிரிநாதருடைய அல்லது பட்டினத்தாருடைய வாழ்க்கையை நாம் நினைவில் கொண்டால், கேது எப்படிச் செயல்படுவார் என்பதை புரிந்து கொள்ளலாம். அருணகிரிநாதர் ஆரம்பத்தில் உலகியல் விஷயத்தில், அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது அவருடைய வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், அவரே ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு ஞான மார்க்கத்தில் வைராக்கியத்தோடு ஈடுபட்டார்.

இப்படிக் கடுமையான சோதனைகளையும் பழியையும் ஏற்படுத்தி உலகியலில் உள்ள ஈடுபாட்டை வெறுக்க வைத்து, வைராக்கியசீலர்களாக மாற்றுகின்ற வேலையை கேது செய்வார். அதனால்தான் அவரை ஞானகாரகன் என்பார்கள். விரயஸ்தானத்தில் அவர் இருந்தால், பிறவியில்லா நிலையை ஏற்படுத்துவார் என்றும் சொல்வார்கள். கேதுவினுடைய சுபத் தன்மை மற்றும் அசுபதன்மையைத் துல்லியமாகக் கணக்கிட்டால் இந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

ராகு – கேது என்பது இரண்டு கோள்கள் அல்ல; ஒரே கோளின் இரண்டு தன்மைகள். எனவே, ராகுவினுடைய பலன்களை பார்க்கின்ற பொழுது கேதுவினுடைய பலனையும் கணக்கிட்டுத் தான் பலன் சொல்ல வேண்டும். அதேபோல, கேது பலனைப் பார்க்கின்ற பொழுது ராகுவின் சாரபலனையும், ஸ்தான பலனையும் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும்.

உதாரணமாக, ஒருவர் ஜாதகத்தில் ராகு பகவான் லக்னத்தில் இருப்பதாக வைத்துக் கொண்டால், நேர் ஏழாம் இடத்தில், அதாவது அவருடைய களஸ்திர ஸ்தானத்தில் கேது பகவான் இருப்பார். எனவேதான் தோஷ சாம்யம் பார்க்கின்ற பொழுது, ஏதாவது ஒரு விதத்தில் இதே அமைப்பு பெற்ற ஜாதகங்களை இணைப்பதன் மூலம், இருவருடைய மன இயக்கங்களும் ஓரளவு ஒத்துப் போகும் என்று சொல்லி வைத்தார்கள். பெரும்பாலும் நல்ல இணையர்களாக வாழ்கின்ற தம்பதிகளின் ஜாதகங்களில் இந்த உண்மை நமக்குத் தெரியும். இதை வெறும் ஸ்தான பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு பலன் சொல்லிவிட முடியாது. இன்னும் சொல்லப் போனால், “பாவச் சக்கரம்” என்று ஒன்று இருக்கிறது.

கட்டத்தில் லக்னத்தில் இருக்கும் ராகு, பாவ சக்கரத்தில் பன்னிரண்டாம் இடத்திலோ, இல்லை இரண்டாம் இடத்தில் இருப்பார். இதை நாம் துல்லியமாக பாகை கணிதம் (Degree calculations) மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். இதற்கு இன்னொரு அடிப்படையான காரணமும் உண்டு. ராகு- கேது எப்படி உருவானார்கள் என்ற கதை இந்த விஷயத்தை நமக்குப் புரிய வைக்கும். ஸ்வர்பானு என்ற அரக்கன், தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமுதத்தை உண்டான்.

அவனது சூழ்ச்சி பின்னர் தெரிய வந்தது. கோபம் கொண்ட மோகினி வடிவத்தில் இருந்த விஷ்ணு, ஸ்வர்பானுவை கட்டுவத்தால் அடித்தார். அப்போது அவன் தலை வேறு, உடல் வேறானது. உடல் துண்டிக்கப்பட்ட ஸ்வர்பானு திருமாலை நோக்கி கடும் தவம் புரிந்தான். இதனால் மகிழ்ந்த விஷ்ணு அவன் தவத்தை ஏற்று பிராயசித்தம் அளித்தார். ஒரு பாம்பின் தலையை உடலோடு பொருத்தி ராகு என்ற பெயரோடும் பாம்பின் உடலை அசுரனின் தலையோடு பொருத்தி கேது என்கிற பெயரோடும் கிரகப் பதவியை அடைந்தார்கள்.

அப்படியானால் இங்கே ஒருவர் இருவராக மாறியதால் இவர்கள் எப்பொழுதும் இணைந்தே பலனை தருவார்கள். இதில் இன்னொரு விசேஷமும் உண்டு.கெட்ட பலனைத் தந்தாலும், நல்ல பலனைத் தந்தாலும் அது தீவிரமாகவே இருக்கும்.உதாரணமாக, லக்னத்தில் ராகு இருந்தால், ஏழில் கேது இருப்பார். இரண்டாம் இடத்தில் ராகு இருந்தால் எட்டாம் இடத்தில் கேது இருப்பார். அப்படியானால் என்ன அர்த்தம்? குடும்ப ஸ்தானத்திலும், வாக்கு ஸ்தானத்திலும் உள்ள குளறுபடிகள் ஆயுள் ஸ்தானத்தை (8th bava) பாதிக்கும் அல்லது நண்பர்களின் குடும்பங் களையோ கணவன்- மனைவி இருவரின் உறவு முறையையோ சிதைக்கும் என்பதை தெரிந்து கொள்கின்றோம்.

இன்னொரு விஷயமும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ராகு சனியை போலவும் (கரும்பாம்பு) கேது செவ்வாயை போலவும் (செம்பாம்பு) பலன் தருவார்கள். இவற்றையெல்லாம் அனுசரித்து இவற்றிற்கு ஏற்றார் போல் நடைமுறையில் செயல்பாடுகளும் மனநிலையும் இருக்கிறதா என்பதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

நாம் ஏற்கனவே சொன்னது போல, இவை ஜாதகத்தில் பிரதிபலிப்பதைவிட நடைமுறை வாழ்க்கையில் உள்ள பிரதிபலிப்பைக் கொண்டு நமக்கு ராகு – கேது தோஷங்கள் வேலை செய்கிறதா, எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய மனப்பான்மையையும் செயல்பாட்டையும் மாற்றிக் கொண்டு வெற்றி அடைய வேண்டும். அதற்கு துணையாக பரிகாரங்களை நாம் செய்து கொள்ள வேண்டும். பரிகாரங்களைவிட மனமும் செயலும் மாறுவதுதான் முக்கியம் என்பதை மறந்து விடக் கூடாது.

தொகுப்பு: தேஜஸ்வி

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?