காசா: ஹமாஸ் பிடியில் 14 நாட்களாக பிணைக்கைதியாக இருந்த அமெரிக்க தாய், மகள் கத்தார் நாட்டின் மத்தியஸ்தால் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் காசாவில் இருந்து இஸ்ரேல் வந்து சேர்ந்தனர். விரைவில் அவர்கள் அமெரிக்க அதிபர் பிடனை சந்திக்க உள்ளனர். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் – இஸ்ரேல் ராணுவம் இடையே கடந்த 14 நாட்களாக நடந்த போரில் இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் காசாவின் மருத்துவமனைகளிலும், காசாவின் தெற்கு பகுதியிலும் இடம் பெயர்ந்துள்ளன. 200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் மற்றும் வெளிநாட்டினரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை அழித்துவிட்டு, பிணையக்கைதிகளை விடுவிப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காசாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்கு பகுதிக்கு பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இடம்பெயர செய்துள்ளது.
வடக்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால், பிணைய கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் சிக்கியிருக்கும் இரண்டு அமெரிக்க பிணைய கைதிகளை அவர்கள் விடுதலை செய்துள்ளனர். கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்திற்கு பிறகு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விடுவிக்கப்பட்ட தகவலறிந்து, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து ஹமாசின் ஆயுதப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கூறுகையில், ‘கத்தார் நாட்டின் மத்தியஸ்த முயற்சிகளை தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த தாய் ஜூடித் ரணன் (59), அவரது மகள் நடாலி ரணன் (18) ஆகியோரை விடுவித்துள்ளோம். மேற்கண்ட இருவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரை காணவில்லை அமெரிக்கா கூறுவது பொய்’ என்றார்.
காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரும், ஹமாஸ் அமைப்பினர் மூலம் எல்லையில் விடப்பட்டனர். அவர்கள் இருவரும் இஸ்ரேல் எல்லைக்குள் வந்து சேர்ந்தனர். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், ‘தாயும், மகளும் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் இஸ்ரேலிய வீரர்களின் பாதுகாப்பில் உள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களில் கைக்குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்களும் அடங்குவர். அவர்களை விரைவில் நாங்கள் இஸ்ரேலுக்கு அழைத்து வருவோம். இஸ்ரேல் ராணுவம் அடுத்த கட்ட போருக்கு தயாராகி வருகிறது. பெரிய அளவிலான தரைவழி தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளோம். இந்த போராட்டம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும்’ என்றார்.
இதனிடையே, ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட தாயும் மகளும், தற்போது இஸ்ரேல் அதிகாரிகளிடம் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதரகத்தின் குழு ஒன்று விரைவில் அவர்களை சந்தித்து அமெரிக்காவிற்கு அழைத்து வரும் என்றும் கூறினார். இதுகுறித்து வெள்ைள மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவை சேர்ந்த தாயும், மகளும் தங்களது விடுமுறையை கழிப்பதற்காக இஸ்ரேல் சென்றனர். அவர்கள் காசா எல்லைக்கு அருகில் உள்ள கிப்புட்ஸ் நஹல் ஓஸ் இசைக் கச்சேரியில் பங்கேற்றனர். அப்போது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பிணைக் கைதிகளாக சிறைவைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 14 நாட்கள் கழித்து மீட்கப்பட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயும், மகளும் விடுவிக்கப்பட்டதை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வரவேற்றார். பிணையக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், இதற்காக கத்தார் உள்ளிட்ட நாட்டு தலைவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறினார். இதற்கிடையே ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாட்டு தலைவர்களுடன் தொடர்ந்து நல்லுறவில் உள்ளோம். அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அமெரிக்க தாய், மகளை விடுவித்துள்ளோம். பாதுகாப்புச் சூழ்நிலைகளை பொறுத்துதான் பிணைக் கைதிகளாக உள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியான ஹமாஸ் தீவிரவாதிகளின் பையில் ‘கேப்டகன்’ மாத்திரைகள்
கடந்த 7ம் தேதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது. அப்போது இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகளின் பைகளில் இருந்து, ‘கேப்டகன்’ என்ற போதைப்பொருள் மாத்திரை கண்டெடுக்கப்பட்டது. அந்தப் போதைப் பொருளை உட்கொண்டு தான், அவர்கள் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெற்கு ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் ‘கேப்டகன்’ செயற்கை போதை பொருளானது துருக்கி வழியாக கடத்தப்படுகிறது. ‘ஏழைகளின் கோகைன்’ என்று அழைக்கப்படும் இந்த ‘கேப்டகன்’ போதைப் பொருள் தீவிரவாத செயல்களை செய்வோர் பயன்படுத்துபவை என்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த ‘கேப்டகன்’ போதைப் பொருளை பயன்படுத்தி உள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்த ‘கேப்டகன்’ போதைப் பொருள் மலிவு விலையில் கிடைக்கிறது. ஏழை நாடுகளில் ஒன்று அல்லது இரண்டு டாலர்களுக்கும், பணக்கார நாடுகளில் ஒரு மாத்திரை 20 டாலர் வரை விற்கப்படுகிறது. இந்த போதை மாத்திரையானது உணர்வுகளைத் தூண்டும், தூக்கத்தின் தேவையைக் குறைக்கும், பசியை அடக்கும், ஆற்றலை அதிகரிக்கும் என்கின்றனர். லெபனான், சிரியாவில் உள்ள மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கேப்டகன் என்பது தீவிரவாதிகளிடம் மட்டுமல்ல, அவநம்பிக்கையுடன் வாழும் பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ளது. ‘கேப்டகன்’ போதை பொருள் மாத்திரை தயாரிப்பை, சில நாடுகள் ஊக்குவித்து வருகின்றன. கடந்த 2020ல் சிரியாவில் இருந்து மட்டும் கேப்டகன் மாத்திரை ஏற்றுமதி 3.5 பில்லியன் டாலர்களை எட்டியதாக நம்பகமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை சிரியாவின் ஏற்றுமதி தொழில்களின் மொத்த மதிப்பை விட ஐந்து மடங்கு அதிகமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாலை வரை நடந்த போர் அப்டேட்
* இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான ‘மொசாட்’ வெளியிட்ட அறிவிப்பில், ‘காசா பகுதியில் இருந்து சுமார் 7,700 ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. அதில் 470க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் காசாவில் விழுந்தன. ஹமாஸ் அமைப்பின் மூத்த பொறியாளரும், ஆயுத மேம்பாட்டாளருமான மஹ்மூத் தாஜ்பிஹ் என்பவர் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். நேற்றிரவு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட ஹமாஸ் நிலைகளை இஸ்ரேல் ராணுவம் அழித்தது. அப்போது ஹமாஸ் தீவிரவாதிகள் பலர் இறந்தனர்.
* காசாவின் மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, வடமேற்கு மேற்குக் கரையில் துல்கரேம் அருகே உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் மோதல் வெடித்தது. பாலஸ்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, இறந்தவர்களில் ஏழு குழந்தைகளும் அடங்கும். இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்றுப்படி, ஒரு இஸ்ரேலிய அதிகாரியும் கொல்லப்பட்டார்.
* இஸ்ரேல் மீது ஏவப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பதிலடியாக இஸ்ரேலிய ராணுவ விமானங்கள் ஹிஸ்புல்லா நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. இஸ்ரேலிய ராணுவம், ஹிஸ்புல்லா ராணுவ வளாகத்தையும் குறிவைத்து தாக்கியது.
* ஹமாஸ் அமைப்பினர், இரண்டு அமெரிக்க பிணையக்கைதிகளை விடுவித்தாலும் கூட, காசா மீதான திட்டமிட்ட தரைவழி தாக்குதலில் தாமதம் ஏற்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். மேலும் அவர்களின் பிடியில் உள்ள ஒவ்வொரு பிணையக்கைதிகளையும் மீட்டெடுக்க முயற்சிப்போம் என்று அவர்
கூறினார்.
* ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்பினர், அமெரிக்க ராணுவத்தை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர், இல்லையெனில் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் தாக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாக ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களை குறித்து தாக்குதல் நடத்தப்பட்டன. அந்த தாக்குதல்கள் இடைமறித்து வீழ்த்தப்பட்டன.
* காசாவின் தெற்குப் பகுதிகளான ரஃபா மாவட்ட அகதிகள் முகாம் ஒன்றின் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன. பாலஸ்தீன சுகாதார அமைச்சக கூற்றுப்படி, காசா பகுதிக்குள் குண்டுவெடிப்பில் 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
* இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு காரணம், இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான முறையான தூதரக உறவை சீர்குலைப்பது தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறினார்.
ஒன்றிணையும் ஷியா, ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹூதி
ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரான் குரல் கொடுத்து வருகிறது. ஈரான் நாட்டு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், ‘ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து ஷியா அமைப்பினர், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், ஏமனில் ஹூதி தீவிரவாதிகள் ஒன்றிணைந்து இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்துவார்கள். இந்தத் தாக்குதலில் ஏவுகணை, ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். ஈரானின் தலைவர் அயதுல்லா கமேனி அளித்த பேட்டியில், ‘எதிர்ப்புப் படைகளை யாரும் தடுக்க மாட்டார்கள்’ என்று கூறினார்.
ஹூதி தீவிரவாதிகள் 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை வைத்துள்ளனர். ஹிஸ்பொல்லாவிடம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது தாக்கக்கூடிய அதிநவீன ராக்கெட்டுகள் உள்ளது. ஈரானுக்கு ஆதரவான ஈராக் போராளிகள், கோலன் குன்றுகளின் சிரியா பகுதியில் களம் அமைத்துள்ளனர். காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதல் தொடங்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
சீனாவின் அணு ஆயுத குவிப்பு
இன்றைய நிலையில் உலகம் இரண்டு பெரிய போர்களில் சிக்கித் தவிக்கிறது. ஒருபுறம், ரஷ்யா – உக்ரைன் இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. தற்போது இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நடந்து வருகிறது. இத்தனைக்கும் மத்தியில், சீனா குறித்த அமெரிக்க பாதுகாப்புத் துறை திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘உலகிலேயே அதிகளவிலான அணு ஆயுதங்களை சீனா குவித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில், சீனாவிடம் 400 அணு ஆயுதங்கள் இருந்தன. தற்போது 500க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன. அடுத்த 7 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் இரட்டிப்பாகும். வரும் 2030ம் ஆண்டுக்குள் சீனாவிடம் 1,000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கும். கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ரக ஏவுகணையை உருவாக்க சீனா முயற்சித்து வருகிறது.
இதுபோன்ற ஏவுகணையை சீனா தயாரித்தால், அது அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். சீனாவின் இதுபோன்ற செயல்கள் அமெரிக்கா உட்பட ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அறிக்கையை சீனா நிராகரித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் அளித்த பேட்டியில், ‘பென்டகனின் அறிக்கையை நிராகரிக்கிறோம். சீனா குறித்து வேண்டுமென்றே அமெரிக்கா வதந்திகளை பரப்புகிறது. தேசிய பாதுகாப்புக்கு தேவையான குறைந்தபட்ச அணு ஆயுதங்களை சீனா வைத்துள்ளது. எந்த நாட்டுடனும் சீனா அணு ஆயுதப் போட்டியில் ஈடுபடவில்லை’ என்று கூறினார்.
ஹாரி பாட்டரின் 12 வயது ரசிகை பலி
ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில், பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஹாரி பாட்டர் படத்தின் தீவிர ரசிகையான 12 வயது இஸ்ரேலிய சிறுமி நோயா டான் மற்றும் அவரது 80 வயது பாட்டி கார்மேலா ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹமாஸால் பிணையக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களில் இவர்கள் இருவரும் அடங்குவர். அவர்களை விடுவிப்பதற்காக, ஹாரி பாட்டரின் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் சமூக வலைதளங்களில் ஒரு பதிவும் எழுதியிருந்தார். அந்த பதிவில், ‘குழந்தைகளை கடத்துவது அருவருப்பானது; நியாயமற்றது. பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை. இன்னும் 203 பிணையக்கைதிகள் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.