Tuesday, May 21, 2024
Home » ஹம்ஸ வாகன தேவி

ஹம்ஸ வாகன தேவி

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஹம்ஸவாகன தேவி அம்பா சரஸ்வதி
அகில லோக கலா தேவி மாதா சரஸ்வதி
ச்ருங்கசைல வாஸினி துர்கா சரஸ்வதி
ஜெய சங்கீத ரஸ விலாஸினி மாதா சரஸ்வதி.

அன்னம் தெய்வாம்சம் கொண்ட பறவை. சரஸ்வதிக்கும், பிரம்மதேவனுக்கும் அன்னப்பறவை வாகனம். கோயில் உற்சவங்களில் அம்பிகைக்கு அன்ன வாகனம் உண்டு. அன்னத்தை வாகனமாகக் கொண்ட சரஸ்வதியை வடநாடுகளில் காணலாம். அன்னம் மிகத் தொலைவிடங்களுக்கும் விரைவாகச் செல்லும். இருபத்து நான்கு மணிநேரமும் விடாமல் பறக்கக் கூடியது. சிறந்த அறிவுள்ள ஜீவன். நீரும், பாலும் கலந்திருந்தால் நீரை விலக்கி பாலை மட்டும் அருந்தும் திறமைசாலி. அன்னம் தம் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் காமத்திற்கு அடிமையாவதால் அதன் இனம் எடுப்பான குரல் கால் சிலம்பொலியை ஒத்ததாம்! ஒரு ராகத்தின் பெயரைச் சொல்லும் அளவிற்கு! என்ன தெரிகிறதா? அந்த ராகத்தின் பெயர் ஹம்ஸத்வனி! மிகவும் இனிமையான அற்புதமான ராகம்!

அன்னங்களில் பல ரகங்கள் உண்டு. ஆஸ்திரேலிய நாட்டின் அரசாங்க சின்னத்தில் அன்னம் இடம்பெற்றுள்ளது. பிரிட்டனில் அரசர்கள் மட்டும்தான் அன்னம் வளர்க்கலாம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது.‘அன்னமாய் அருமறைகள் அறைந்தாய் நீ’ என்று கம்பராமாயணத்தில் விராதன் திருமாலாகிய ஸ்ரீராமரைப் புகழ்கிறான்.தூய்மைக்கும், அற்புதமான அறிவுக்கும் எடுத்துக்காட்டாக அன்னம் விளங்குவதால் தான் இப்பறவை சரஸ்வதி மற்றும் ப்ரம்மாவின் வாகனமாகத் திகழ்கிறது! இதன் இயல்புகள் கல்வியாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் இருத்தல் வேண்டும். தீயவற்றை விடுத்து தூயவற்றை மட்டும் கற்க வேண்டும்.

இவை பொதுவாக குளிர்ப் பிரதேசங்களிலேயே அமைதியான நீர் ஏரிகளில் வாழ்கின்றன. இவை அருகிவரும் அழகிய பறவையினமாகும். இலங்கை, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இவை அருகியிருப்பினும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில் இன்னும் வாழ்கின்றன.ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன் காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம் முதலிய கலைகளிலும் அன்னபட்சிக்கு முக்கிய இடம் உண்டு. இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னபட்சி மங்களமான ஒன்றாகும்.

இதனால் பௌத்த வழிபாட்டுத் தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னபட்சியின் உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். பறவைகளிலேயே அதிக அளவில் சிறகுகள் கொண்ட பறவை அன்னப் பறவைதான். மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம். வாத்துகளும், அன்ன பறவைகளும், தண்ணீரில் மிதந்து கொண்டே தான் தூங்கும். கலைமகளின் சிறப்பு வாகனமாகிய அன்னப் பறவையை ஹம்ஸம் என்பர். அன்னப் பறவை, நீரை நீக்கிப் பாலை மட்டும் பருகும் திறமை படைத்தது போல் சான்றோர்கள் பொய்யான உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப் பொருளாகிய கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள்.

அன்னம் போல் நல்லோரைத் தெரிந்து கொள். பண்போடு பழகு. பாதகரை அறிந்து கொள். தண்ணீரை விடுத்து பாலை அருந்தும் சங்க கால அன்னப் பறவை போல தீமையை விடுத்து நல்லதை எடுக்க வேண்டியது அவசியம்.சில மந்திரங்களை ‘ஹம்ஸ மந்திரங்கள்’ என்றும் குறிப்பிடுவார்கள். அம்மந்திரங்களின் உட்பொருளாய் விளங்குபவள் அம்பிகை. அவளை உணர்ந்த சான்றோர்களை ‘பரம ஹம்ஸர்கள்’ என்று அழைப்பார்கள். அத்தகைய சான்றோர் களின் உள்ளத்தில் இருப்பவள் என்பதை உணர்த்தவே அம்பிகை ஹம்ஸ வாகனத்தில் பவனி வருகிறாள்.

‘ராஜ ஹம்ஸம்’ எனும் அரிய பறவை இருந்ததாக இலக்கியங்களில் பார்க்கிறோம். அதற்குப் பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் ஆற்றல் இருந்திருக்கலாம். சகோரம் எனும் பட்சி முழுநிலவின் கிரணங்களைப் பருகி பாய்ந்து சென்று பருகும்.இவை நம் பண்டைய வரலாறு களில் காணப்படுபவை.‘சாதகம் போல் நினதருளே பார்த்திருப்பின் அடியேனே’ என்று எப்போதும் இறையருளை எதிர்பார்த்திருப்பர் அடியார்கள்.அன்னப் பறவை பகுத்தறிவின் (விவேகத்தின்) சின்னம். சாதாரண ஹம்ஸம் (அன்னம்) சாரத்தை கிரகிப்பதுபோல் ஞானியர் உலகியலைத் துறந்து பரம்பொருளைப் பற்றி அதில் நிலைத்திருப்பர்.அதனால் அவர்களுக்கு ‘பரமஹம்ஸர்’ என்று பெயர்.

தொகுப்பு: கண்ணன்

You may also like

Leave a Comment

eleven − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi